பிப்ரவரி மாத 'இலக்கியவேல்' இதழில், இயக்குனர் சிகரம், திரு.கே.பாலசந்தர் அவர்களின் நினைவைச் சிறப்பிக்கும் வகையில் நான் எழுதி, வெளியான கட்டுரை இது.. உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி இங்கு பதிகின்றேன்.. இலக்கியவேல் இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!..
இந்திய சினிமா ஆளுமைகளில் முக்கியமான இடம், இயக்குனர் சிகரத்திற்கு உண்டு.. இவரைப் பற்றி அறியாதோர் இல்லை.. பலப்பல வருடங்களாக, மாறுபட்ட கோணங்களில் பல திரைப்படங்களைக் கொடுத்து வரும் அவரது கலைப்பணியைப் பற்றிய அறிமுகம் தேவைப்படுவோர் வெகு சொற்பமே!...
யோசித்துப் பார்த்தால், அவரது பல திரைப்படங்கள், கதாநாயகியைத் தூக்கிப் பிடிப்பவையாகவே இருந்தன என்பது கண்கூடு!.. அக்காலத்தில், இதுவே ஒரு புரட்சி!.. கதாநாயகர்கள், முடிசூடா மன்னர்களாக கோலோச்சி வந்த காலகட்டம் அது!..
பொதுவாகவே, அவர் திரைப்படங்களில் கதாநாயகியர், பொம்மை போல் வந்து போவதில்லை.. அவரது கதாநாயகிகள் அழுமூஞ்சிகளல்ல.. பொறுமையாய் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, தவறுகளைச் சகிப்பவர்களல்ல.. ...அவரது பெரும்பாலான கதாநாயகிகள், சுயமதிப்புள்ளவர்களாக, பெரும்பாலும் தம்மையே சார்ந்திருப்பவர்களாகவே இருப்பார்கள்.. இதற்கு உதாரணமாக, 'அவர்கள்' அனு, 'அவள் ஒரு தொடர்கதை' கவிதா, 'மனதில் உறுதி வேண்டும்' நந்தினி என சொல்லிக் கொண்டே போகலாம். அவர் முதல் திரைப்படமான 'நீர்க்குமிழி' யில், மருத்துவராக வரும் கதாநாயகியின் (சௌகார் ஜானகி) நடையுடை பாவனைகளிலேயே இது நன்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும்..
கே.பியின் திரைப்படங்கள், அவரது கதாநாயகியின் பாத்திரப் படைப்புக்காக, கடும் விமர்சனத்துக்குள்ளானதுண்டு...'அரங்கேற்றம்' முதல் 'கல்கி' வரை பல திரைப்படங்கள் இதில் வரும்..ஆனால் ஊன்றிக் கவனித்தால், அது வரை வந்த திரைப்படங்களில், கதாநாயகியரின் பாத்திரப் படைப்பு சித்தரிக்கப்பட்டிருந்த விதத்திலிருந்து புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தியதற்காகவே இந்த விமர்சனம் என்பது புலனாகும்.. இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும்.. கே.பியின் நாயகிகளைப் பற்றிய பொதுவான அபிப்பிராயமென்னவோ, அவர்கள் புரட்சிகரமானவர்கள்.. பண்பாட்டின் வரையறைக்குள் அடங்காதவர்கள் என்பது.. ஆனால், அவ்விதமான பாத்திரப் படைப்பைத் தந்த போதிலும், அதை ஒரு போதும் அவர் நியாயப்படுத்தியதில்லை.. கதையின் இறுதி முடிவு, நிச்சயம் வரையறைகுட்பட்டதாகவே இருக்கும். ஆயினும், பெண்களுக்குத் துணை அவசியம் என்ற கருத்தை எப்போதுமே அவர் முன்வைத்ததில்லை..அவரது பல நாயகிகள், கவிதா, அனு, நந்தினி அனைவரும் தனித்து வாழும் முடிவை விரும்பி ஏற்றவர்கள் தான்.
தன் கதாநாயகிகளை, தன்னம்பிக்கை உள்ளவர்களாக, எதையும் எதிர்கொள்ளும் மனப்பாங்குடையவர்களாகக் காட்டினாரேயன்றி, அதற்காக, இந்த மண்ணின் கலாசாரத்தை மீறுவதை, சரியென்று சொல்லவில்லை.. பொதுவாக, கே.பியின் நாயகிகள் குடும்பப் பொறுப்புள்ளவர்கள்.. பெண்மையின் இயல்பான நளினம் மிகுந்தவர்கள்.. அதே சமயத்தில், சுயமதிப்புடன் செயலாற்றுபவர்கள்.. கொஞ்சம் உதாரணங்கள் பார்க்கலாம் இங்கு..
'அரங்கேற்றம்', திரைப்படம் 'ஏ' சர்டிபிகேட்டுடன் வெளிவந்ததென்றாலும், பெரும் வெற்றி பெற்றது. கதாநாயகி லலிதா(பிரமீளா), குடும்பத்துக்காக, தன்னையே தியாகம் செய்வாள்.. ஆனால், யாருக்காக இத்தனை தூரம் செய்தாளோ, அந்தக் குடும்பத்தினராலேயே தூக்கியெறியப்படுவாள்.. கதாநாயகியின் சூழல், அந்த விதமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியதென்றாலும், அதை முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை கே.பி.. அவளை நேசிக்கும் ஒருவன், அவளை ஏற்கின்றான் என்றாலும், இறுதியில் அவள் பைத்தியமாகவே ஆகிவிடுகின்றாள்...
'அவள் ஒரு தொடர்கதை' கவிதா, பலாப்பழம் போன்ற கதாபாத்திரம்.. வீட்டில், குழந்தைகளாலேயே 'ராட்சசி' பட்டம் கொடுக்கப்பட்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், மெழுகுவர்த்தி போல், உழைப்பத்தனையையும் கொட்டி, குடும்பத்தைக் காப்பாற்றுபவள் கவிதா.. தன் தந்தையைப் போல், தமையனைப் போல், சுயநலத்துக்காக, தன் பொறுப்பைத் துறக்காதவள்.. துணிச்சல், தன்னம்பிக்கை, தன் காதலனே தன் தங்கையை மணக்க நினைக்கும் போது, தளராமல் அதை எதிர்கொண்டு, தங்கையை மணமுடிக்கும் தைரியம்.. தன் தோழியே முறையற்ற வாழ்வை வாழும் போதும், அதை சரியென்று சொல்லாமல், கோடு போட்டது போல் வாழும் ஒழுக்கம், என கே.பியின் முத்திரை பலமாக விழுந்த கதாநாயகி கவிதா...பெண்ணியம் குறித்த, கே.பியின் கருத்துக்கள், அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு பெண் பாத்திரம் மூலமாகவும் வெளிப்படும்... 'என்னை இயந்திரமாக மாத்திக்கிட்டேன்' என்று கண்ணீர் மல்கச் சொல்லும் அண்ணி உட்பட...
‘அவர்கள்' அனு, தனித்து வாழும் துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் சிறப்பான உதாரணம்.. ஒரு போதும் அழமாட்டாள் அனு!.. எத்தனை எத்தனை கஷ்டங்கள்!.. கணவனே துரோகியான போதும் கூட அழவில்லை அவள்.. இறுதியில், கணவனாலேயே, தனக்கு அமையவிருந்த வாழ்க்கை கெட்டுப் போன போது கூட, அதை புன்னகையுடன் எதிர்கொள்கிறாள்.. இந்தத் திரைப்படத்தில், முற்றிலும் மாறுபட்ட மாமியார் பாத்திரம், அனுவுக்கு இணையாகப் பேசப்பட்டது.. மகனின் முறையற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மருமகளுக்கு, ஒரு வேலைக்காரியாக உதவுகின்றாள் மாமியார்.. அனு, கடைசியில் ஊரை விட்டுச் செல்லும் போதும், மகன், செல்வம் அனைத்தையும் துறந்து, அவளுக்குத் துணையாகும் மாமியார் பாத்திரம், நேர்மையான, சுய சிந்தனையுள்ள பாத்திரப் படைப்புக்கு மற்றுமொரு உதாரணம்..
புரட்சிகரமான நடவடிக்கை உள்ள நாயகிகள் என்றாலும், பொதுவான பண்பாட்டை மதிப்பவர்க்ளாகக் காட்டியிருப்பார் கே.பி.. 'சிந்து பைரவி' இதற்கொரு உதாரணம்.. பட முடிவில், பைரவியின் வாழ்க்கையை அபகரிக்கப் பிரியப்படாமல் பிரிகிறாள் சிந்து..
நூல் வேலி போன்ற சில திரைப்படங்கள், கொஞ்சம் மாறுபட்ட சித்தரிப்பைக் கொண்டிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.. தவறுக்கு தான் மட்டுமே காரணமல்ல என்ற போதிலும், தற்கொலை செய்து கொள்ளும் சரிதாவின் கதாபாத்திரம் (பேபி) நிறைய விமர்சனத்துக்குள்ளானது..
'அச்சமில்லை அச்சமில்லை' தேன்மொழி, கே.பியின் நாயகிகள் வரிசையில் முக்கியமான கதாபாத்திரம்..கணவனை விடவும் பிறந்த நாட்டின் நலம் முக்கியம் என்று கருதி, அவனைக் கொல்லும் முடிவை துணிச்சலுடன் எடுக்கும் நாயகி..
நாயகனை மையப்படுத்திய கதைக்களங்கள் என்றாலும் கூட, கே.பியின் நாயகிகள் தங்கள் குணாதிசயங்களை விட்டுத் தர மாட்டார்கள்..'எதிரொலி' படத்தில் கே.ஆர். விஜயாவின் கதாபாத்திரம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்...கணவனின் நடவடிகைக்களை தயவு தாட்சண்யமின்றி கண்டிக்கும் மனைவி. நிழல் நிஜமாகிறது இந்துமதி (சுமித்ரா), 'மூன்று முடிச்சு' செல்வி (ஸ்ரீதேவி),'வறுமையின் நிறம் சிகப்பு' தேவி (ஸ்ரீதேவி), உன்னால் முடியும் தம்பி லலித கமலம் (சீதா) என்று பல உதாரணங்கள் சொல்லலாம்.
மொத்தத்தில், கே.பியின் நாயகிகள், மற்ற திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கும் நாயகிகளை விடவும் மாறுபட்ட கோணத்தில், சொல்லப் போனால், உயர்வாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.. அதன் பின், நாயகிகளை, தமிழ்த் திரையுலகம் பார்த்த கோணமே மாறுபட்டது.. கே.பியின் இந்த முத்திரை, அவரது தொலைக்காட்சித் தொடர்கள் வரை தொடர்ந்தது.. 'பிரேமி' தொடரின் நாயகி பிரேமி இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்..
இயக்குனர் சிகரத்தின் நாயகிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.. அவர் பெண்கள் மீது வைத்திருக்கும் மதிப்பை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை நிரூபித்தவர்கள் அவர்கள்.. அவரது மங்காத புகழைப் போல், இதற்கும் முடிவென்பது ஏது?!!..
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
பல உண்மைகள்... அருமையான கட்டுரை...
பதிலளிநீக்குபாராட்டுக்கள் அம்மா...
இயக்குனர் சிகரம் திரு. KB Sir அவர்களைப்பற்றியும் அவரின் படக்கதாநாயகிகள் பற்றியும், அருமையான பல்வேறு அலசல்களுடன் கூடிய இனிய பகிர்வு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇன்றைய என் பதிவினில் தங்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
http://gopu1949.blogspot.in/2015/03/5.html இது ஓர் தகவலுக்காக மட்டுமே.