சனி, 11 ஏப்ரல், 2015

SIRUNGERI DHARISANAM....சிருங்கேரி தரிசனம்!..


அன்பான நண்பர்களே!.. வணக்கம்!..

கட்டாயம் நலமா இருப்பீங்கன்னு  நினைக்கறேன்.. ஒரு பெரிய ஊர்(?!!) வலம் முடிச்சு இரண்டு நாள் முன்னாடி வந்து சேர்ந்தாச்சு!..

திருத்தல யாத்திரையாக இந்த முறை அமைந்தது.. சிருங்கேரி, தர்மஸ்தலா எல்லாம் தரிசனம் செய்ய இறையருள் கிட்டியது.. முன்னரே பார்த்தது என்றாலும் மீண்டுமொரு முறை தரிசனம்.

சிருங்கேரி தரிசனம் பற்றி அநேகமாக, அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. இருந்தாலும், அதிகமாகப் போய் வராத அன்பர்கள் சிலர் கவனத்துக்காக இந்தப் பதிவுகள்...

குருவருளும் இறையருளும் இணைந்து கிட்டும் பேரானந்த  புனித யாத்திரை சிருங்கேரி யாத்திரை...ஒவ்வொரு முறையும்,  ஸ்ரீ ஆச்சார்யாள் தரிசனமும் ஸ்ரீ சாரதாம்பிகை தரிசனமும் செய்து விட்டு உடன் திரும்புவது வழக்கம்.. சென்ற முறை, கூடுதலாக சில தினங்கள் தங்கியிருந்து, அங்கிருக்கும் சில கோயில்கள் தரிசனம் செய்தோம்.. இம்முறை மேலும் சில திருக்கோயில்கள். என்னாலியன்ற அளவு, திருக்கோயில்களைப் பற்றி பதிவிட எண்ணம்.. பதிவின் நீளம் கருதி, தொடர் பதிவுகளாக பதிவிடுகின்றேன்.

Image result for kigga templeசிருங்கேரி திருத்தலத்திற்கு அடிக்கடி செல்பவர்கள், அருகிலுள்ள 'கிக்கா (கிகா)' திருத்தலமும் சென்றிருப்பீர்கள்..சிருங்கேரி சாராதாம்பாள் திருக்கோயில் வாசலில் இருந்து, ஆட்டோவில் பதினைந்து நிமிடம் போனால், திருத்தலத்தை அடையலாம்.. காலை ஆறு முதல் எட்டு மணி வரையிலும், அதன் பின்னர், 11 முதல் ஒரு மணி வரையிலும், மாலை ஐந்து முதல் எட்டு மணி வரையிலும்  திறந்திருக்கும்..காலையில் இரு முறை கோயில் திறப்பதால், மற்ற திருக்கோயில்களில் தரிசனம் செய்ய இருப்பவர்கள் அதற்கேற்றாற் போல் செய்து கொள்ளலாம்.

இது, புராண காலத்தில், ரிஷ்ய சிருங்க முனிவரின் ஆசிரமமாக இருந்த இடம். ரிஷ்ய சிருங்க முனிவரின் பெயர் கொண்டே,  'சிருங்க கிரி (சிருங்கேரி)' என்ற பெயர், திருத்தலத்தின் பெயராக‌  வழங்கி வருவதாக, திருக்கோயில் பூஜகர் சொன்னார்.

திருக்கோயில் மூலவர் இலிங்கத் திருமேனி!...மூலவரின் திருநாமம், ஸ்ரீ ரிஷ்ய சிருங்கேஸ்வர ஸ்வாமி.. கவசம் சார்த்தப்படாத நிலையில், இலிங்கத்தின் சிரத்தில், இரு சிறு கொம்புகள் காணலாம்..ரிஷ்ய சிருங்க முனிவர், மூலவரின் திருமேனியில் ஐக்கியம் ஆனதால் மூலவர் இம்மாதிரி தரிசனம் தருகின்றார் (ரிஷ்ய சிருங்க முனிவருக்கு, தலையில் இரு மான் கொம்புகள் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. சிருங்க' என்றால் கொம்பு என்று பொருள் .  தமிழில் அவரது பெயர் 'கலைக் கோட்டு முனிவர்').

ரிஷ்ய சிருங்கேஸ்வர ஸ்வாமியின் திருக்கோயிலில், ரிஷ்ய சிருங்க முனிவரின் மனைவியும், அங்கத தேசத்து அரசன், ரோம பாதனின் வளர்ப்பு மகளுமான சாந்தலா தேவிக்கு (சாந்தா தேவி என்றும் சொல்கிறார்கள்) தனி சந்நிதி இருக்கிறது. சாந்தமும் அன்பும் ஒருங்கே தவழும் திவ்ய திருமுகத்துடன், சாந்தா தேவி  சிலா ரூபமாகத் தரிசனம் தருகின்றார்.

சற்று பெரிய கோயிலே ஆனாலும், அதிக சந்நிதிகள் இல்லை... ஒரு முனிவரின் ஆசிரமம் என்பதால், சொல்ல முடியாத அமைதியும் ஆனந்தமும் உணரலாம். தியானம் செய்ய மிக உத்தமமான இடம்... இது வரை செல்லாத அன்பர்கள், ஒரு முறை, சென்று வணங்கி வாருங்களேன்!..

அடுத்த பகுதியில், சிருங்கேரி திருத்தலத்தில் இருக்கும் இன்னொரு கோயிலை தரிசிக்கலாம்...

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. இதுவரை சென்றதில்லை... விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. சிருங்கேரிக்கு இதுவரை செல்லும் பாக்யம் கிட்டவில்லை. இருப்பினும் தங்களின் இந்த பதிவின் மூலம் சில படங்களும் பல செய்திகளும் அறிந்துகொள்ள முடிந்தது. சந்தோஷம். நன்றி.

    பதிலளிநீக்கு