அதாகப்பட்டது மக்களே, சிருங்கேரி தரிசனத்தை அடுத்த பதிவில் தொடர முடிவு செஞ்சதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு.. இன்னிக்கு மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சி, தேரோடும் வீதிகளில் தேர் பவனி வரும் திருநாள்.. ஊரில் இருப்பதால், நானும் தரிசனம் பண்ணும் பாக்கியம் கிடைத்தது.
ஸ்வாமி தேர்!. |
காலையில் எல்லாம் போய்ப் பார்க்கும் முடிவில் இல்லை.. திடீரென, 'தேர் பார்க்கணும்' என்று முடிவாயிற்று. டிவியில், லைவ்வாக காண்பித்ததால், கிளம்பி, மதுரை போய் சேரும் நேரத்தில், தேர் எங்கிருக்கும் என்று குத்து(?) மதிப்பாக முடிவு செய்து, ஆட்டோவில் கிளம்பினேன். டவுன்ஹால் ரோடு, ஹோட்டல் சபரீஷ் அருகில் இறங்கி நடக்கும் போது, தேரின் உச்சி, தூரத்தில் கடப்பதைப் பார்த்தேன். எடு ஓட்டம்!...
'தேர்க் கூட்டம்.. திருநாள் கூட்டம்' என்பதற்கு சரியான விளக்கம் நேர்க்கொண்டு பார்க்க முடிந்தது. அத்தனை கூட்ட்டம்!.. சும்மாவா பின்னே!..மதுரை மக்களுக்கு, மீனாட்சி அம்மன், அவரவர் வீட்டுப் பெண்!... பேர் கூட சொல்ல மாட்டார்கள் பலர். அத்தனை செல்லம்!....நேற்று முகூர்த்தம் பார்த்து விட்டு வந்தவர்கள் நிறையப் பேர், 'ஐயாவையும் அம்மாவையும் பாத்தீகளா' என்றே ஒருவருக்கொருவர் விசாரித்திருந்தார்கள். இன்று அத்தனை பெண்கள் கழுத்திலும், புது திருமாங்கல்யக் கயிறு மின்னியது.. தங்கள் வீட்டுப் பெண் மணமான அன்று தான் சரடு மாற்றுவார்கள் எங்களூர் பெண்கள்.
முகூர்த்தம் தரிசனம் செய்து, சாயங்காலம் பூப்பல்லக்கும் தரிசனம் ஆன பின், தேர் பார்க்கவென ஆங்காங்கிருக்கும் உறவுகளின் வீடுகளில் தங்கிக் கொண்டு, காலையில், 'வெள்ளென' எழுந்து, விரைவாகத் தயாராகி வந்த மக்கள் கூட்டம்.. கஷ்டம் இல்லாத மனிதரில்லை. ஆயினும், அதையும் மீறிப் பொங்கும் உற்சாக வெள்ளம். ஏன் தேர் பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.
அம்பாள் தேர்!. |
வேகமாகப் போய், கூட்டத்தில் கலந்து, நீந்ந்ந்ந்தி...... போனால், நான் தேரருகில் போகும் போது, தேர் வேகமெடுத்தது. விடேன், தொடேன் என்று நானும் ரொம்ப தூரம் போனேன். ஒரு வழியாக, என்னை நெருங்கிக் கடந்தது ஸ்வாமி தேர். ஸ்வாமி முகம் எல்லாம் தெரியக் கஷ்டமாக இருந்தது. பூமாலைகள் தோரணம் எல்லாம் மறைத்திருந்தன. ஓரளவு மட்டுமே பார்க்க முடிந்தது.
அங்கேயே நின்று அம்பாள் தேரை எதிர்பார்த்திருந்தோம். அடுத்தடுத்து, பெரிய பெரிய ப்ளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் பாக்கெட்டுகள், நீர் மோர் விநியோகம் எல்லாம் அமோகமாக நடந்தது.
தேர் இழுப்பவர்களில், பாதிக்கு மேல் இளவயதுக்காரர்கள். உற்சாகமாக தேர் இழுத்தார்கள். அவர்கள் வயதுக்கே உரிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன், தேர் வடம் பிடித்து இழுத்தார்கள். நடுநடுவே நிறுத்தி, கூட இழுப்பவர்களை தூக்கிப் போட்டு ஆடி, உற்சாகமாக கத்தி, பெரும் சந்தோஷத்துடன் தேரிழுத்ததால், அம்பாள் தேர் வெகு நிதானமாகவே முன்னேறியது.. தேரில் இருந்தவர் ஒருவர், 'ஹர ஹர சங்கர.. சோம சுந்தர...' என்று மைக்கில் சொல்லி, எல்லாரையும் திருப்பிச் சொல்ல வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் முன்னால் வடமிழுத்த கூட்டம், ஆங்காங்கே தேர் நிற்கும் போது, பொருத்தமான திரைப் பாடல்களைப் போட வைத்து, ஆடியபடியே சென்றது.
தூக்கிப் போட்டு, ஆடி.. |
முக்கியமாக, 'பல்லாக்குக் குதிரையில பவனி வரும் மீனாட்சி.. பாண்டியரு சொக்கரிடம் பாசம் வெச்ச ராசாத்தி...' என்ற பாட்டு...
கொஞ்ச நேரத்தில் தேர் பார்க்கும் தொலைவில் வந்தது.. அம்பாளின் திருவடி தரிசனம் நன்றாகக் கிடைத்தது. பச்சையில் அரக்கு நிறக் கரையிட்ட பட்டுப் புடவை அலங்காரம். அம்மனுக்குச் செய்த அலங்காரச் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ?!!.. தேர் மேலே, மதுரையின் அரசி, ஜகன் மாதா, தன் மக்களின் சந்தோஷம் பார்த்து, பேருவகை கொண்டு புன்முறுவல் பூத்த வண்ணம், தாமரைப் பூ மாலை அசைந்தாட, தேர் பவனி வந்தாள்.. தூரத்தில் இருந்து திருமுக தரிசனம் தெரியவில்லை.. 'அம்மா, உன் திருமுகம் தரிசனம் செய்ய வேண்டும்' என்று தொடர்ந்து பிரார்த்தித்தேன்.
தேர் அருகில் வந்து விட்டது, தோரணங்கள், பூமாலைகள் எல்லாம் மறைத்தன. கொஞ்சமே கொஞ்சம், நம்பிக்கை இழக்கும் நேரம், சட்டென்று, ஒரு தோரணம் காற்றில் விலகி, மிக அருகில், அம்பிகையின் திருமுக தரிசனம் கிடைத்தது.. பக்தர்களின் 'ஆஹா' காரம்!.. அன்னை எதைத்தான் அறிய மாட்டாள்?!.. பெரும் ஆரவாரத்துடன் தேர் முன்னேறியது.. மனம் நிறைய, மீண்டும் வணங்கி விட்டு, வந்த வழியே திரும்பினேன்..
தேர் அசைந்து வரும் நேரத்தில், 'ஆத்தா மீனாட்சி!' என்று உரக்கக் கூறியவாறே தரிசிக்கும், பக்தர்களின் பக்திப் பரவசம், மக்களின் உற்சாகம், சிவநாம சங்கீர்த்தனம், இன்னும்..இன்னும்.. இதெல்லாம் ஒன்று சேர, அம்பிகையைத் தரிசிக்கும் அந்தக் கணம்!... அதுவே அற்புதம்!.. 'நான், எனது..' என்பதெல்லாம் முழுவதும் மறைந்து, கண நேரம் கிடைக்கும் அமைதியும் நிம்மதியும் அனுபவித்தாலே புரியும்!.. அதன் பின் வரும் நம்பிக்கை!!...'எல்லாம் அவள் பார்த்துக் கொள்வாள்!..' என்ற திடமான நம்பிக்கையுடன் திரும்பும் பக்தர்களின் முகத்தில் தெரியும் நிறைவு!.. இதையெல்லாம் பார்த்து, நம் மனம் கொள்ளும் சந்தோஷம்...இன்னும் எழுத வார்த்தை தான் வரவில்லை...
'அடுத்த வருஷமும் கண்டிப்பா தேர் பார்க்க அருள் செய்யணும்!' என்று பிரார்த்தித்துக் கொண்டேன்!...
தேர், 12.45க்குத் தான் நிலைக்கு வந்ததாகச் சொன்னார்கள்..
இனி, அடுத்ததாக, அழகர் பெருமானின் வருகைக்காக, உற்சாகத்துடன் மதுரை தயாராகிறது.
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள்: முகப்புப் படம் மட்டும் கூகுளார் உபயம். மற்றவை என் மொபைலில் எடுத்தது!....
அருமையான வர்ணனை. இப்போத் தான் பொதிகை தொலைக்காட்சியில் மீனாக்ஷி தேரும், சிதம்பரம் கும்பாபிஷேஹக் காட்சிகளும் பார்த்தேன். காலையில் வெளியே போய்விட்டதால் நேரடி ஒளிபரப்பைப் பார்க்க முடியவில்லை.
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மா!. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குநாங்களும் கலந்து கொண்ட உணர்வு அம்மா... நன்றி...
பதிலளிநீக்குரொம்ப நன்றி டிடி சார்!.
நீக்குமதுரைத்தேரை நானும் உன்னோடு ஓடிவந்து கண்டு களித்தேன். என்ன அழகான வர்ணனை. அன்புடன்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி அம்மா!..தங்கள் ஆசிக்கு என் மனமார்ந்த நன்றி!.
நீக்குபடங்களும் பதிவும் சொல்லியுள்ள அனைத்துச்செய்திகளும், குறிப்பாகத் தாங்கள் கொடுத்துள்ள தலைப்பும் அழகோ அழகு. நேரில் சென்று தரிஸித்த உணர்வு ஏற்படுகிறது. பகிர்வுக்கு என் நன்றிகள். பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் பாராட்டு, சந்தோஷத்தைத் தருகிறது . மிக்க நன்றி தங்களுக்கு!.
பதிலளிநீக்கு