ஞாயிறு, 31 மே, 2015

VELLI RATHAM YERI VANTHALE.. EN KANNATHTHAAL!....வெள்ளி ரதம் ஏறி வந்தாளே.... என் கண்ணாத்தாள்!...


கோலாகலம் கொண்டருளுகிறாள் என் கண்ணாத்தாள்
கோலாகலம் கொண்டருளுகிறாள்!!...(2)


வைகாசியில் உற்சவமாம்!.. வெள்ளி ரதம் ஊர்வலமாம்!
கோலாகல கொண்டாட்டமாம்!...கோதையவள் ராஜ்ஜியத்தில்!...

வெள்ளி ரதம் ஏறி வந்தாளே.... என் கண்ணாத்தாள்
விழிமலரில் கருணை தந்தாளே!...

கோபுரமும் கொடிமரத்தழகும் என் கண்ணாத்தாள்
குடியிருக்கும் கோயில் சுற்றழகும் (2)

சொல்லச் சொல்ல ஆனந்தமே!.. சோகமெல்லாம் தீர்ந்திடுமே
பொல்லா வினைகள் ஓடிடுமே புவனமெல்லாம் மகிழ்ந்திடுமே

வெள்ளி ரதம் ஏறி வந்தாளே!.. என் கண்ணாத்தாள்
வேதனைகள் மாற்ற வந்தாளே!...

பொன்னும் மணியும் புதுமலர் பட்டும்.. என் கண்ணாத்தாள்
பூண்டருளும் கோலம் பாருங்கள்!..(2)

வெற்றி தரும் சக்தி வந்தாள் வேதனைகள் தீர்க்க வந்தாள்
 சுற்றி வரும் பகை விரட்டி..சூழ்வினைகள் அறுக்க வந்தாள்!...

தேரிலேறி பவனி வராளே!.. என் கண்ணாத்தாள்..
திருவுருவ காட்சி தராளே!...

முத்து முத்து கோலமிட்டிடுவார் என் கண்ணாத்தாள்
முன்னே வரும் வீதி பூச்சொரிவார்!...(2)

வண்ண வண்ண வாணங்களாம்!....வரிசைகளாம் தோரணமாம்!
ரத்தினத்தில் தீபங்களாம்!..ரக ரகமாய் வாத்தியமாம்!..

ரதத்திலேறி அம்மன் வராளாம்!.. என் கண்ணாத்தாள்
ராஜ ராஜி பவனி வராளாம்!...

அம்மன் பதம் தொழுதிடுமடியார்..... என் கண்ணாத்தாள்
அன்பு நோக்கில் ஆடி வருகிறார்!...(2)

வாசனையாய் தூபங்களும் வாசலெல்லாம் தீபங்களும்
வாழ வைக்கும் எங்கள் தேவி வரும் வழியை நிறைத்திருக்க‌

வெள்ளி ரத பவனி வராளாம்!.. என் கண்ணாத்தாள்..
வைசாகத்தில் அருள வராளாம்!...

கண்ணாத்தாளின் தேர் பவனியடி!..என் கண்ணம்மா..
காண கண்கள் கோடி போதுமோ!....(2)

தாயாய் எம்மைக் காக்க வந்தாள் தயவுடனே அருள வந்தாள்
ஓயாதாட்டும் பெருவினைகள் ஓட வைத்துநற் பதமும் தந்தாள்

மாயை நீக்கும் மஹாமாயையடி!.. என் கண்ணாத்தாள்..
மனம் நிறைய, மங்கா இன்பமடி!..

(நாட்டரசன் கோட்டை அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான வெள்ளி ரத பவனி, இம்மாதம் (மே மாதம்) 31ம் தேதி ஞாயிறன்று நடைபெறுகின்றது. கண் கொடுக்கும் தெய்வமாம் அருள்மிகு கண்ணாத்தாளின் வெள்ளி ரத பவனியை மனக்கண்ணாலேனும் நோக்கும் ஆவலில் எழுந்த பாடல் !...)..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக