திங்கள், 11 மே, 2015

SIRUNGERI DHARISANAM!...PART..2..சிருங்கேரி தரிசனம்.. பகுதி 2.. ஸ்தம்ப கணபதி!!.....

Image courtesy: Google pictures...


சிருங்கேரியில், ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில் அருகில் இருக்கும் கோயில்களுள் ஒன்று, ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் திருக்கோயில். இது  நடந்து செல்லும் தூரத்திலேயே இருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கோயிலில் குடிகொண்டருளும் சிவபெருமானுக்கு, வருடத்தின் முக்கிய தினங்களில், ஸ்ரீ சிருங்கேரி ஸ்வாமிகள், தம் திருக்கரங்களாலேயே அபிஷேக ஆராதனைகள் செய்வார். இந்த ஆலயத்திலேயே 'ஸ்தம்ப கணபதி' சன்னதி அமைந்திருக்கிறது.
ஸ்ரீ தோரண கணபதி சன்னதியும், ஸ்ரீ ஸ்தம்ப கணபதி சன்னதியும் வேறு வேறானவை. ஸ்ரீ தோரண கணபதி, ஸ்ரீ சாரதாம்பிகை திருக்கோயிலில் குடி கொண்டுள்ளார். இவர் ஸ்தம்ப கணபதி. சிருங்கேரிக்குச் செல்பவர்கள் யாராயினும்,   ஸ்ரீ ஸ்தம்ப கணபதியை  தரிசிக்காமல் செல்வதில்லை.. 

ஸ்ரீ ஸ்தம்ப கணபதியை தரிசிக்கவென்றே, இந்தத் திருக்கோயிலுக்கு வருபவர்கள் உண்டு.

இந்த கணபதி, இந்தத் திருக்கோயிலில்  குடிகொண்ட விருத்தாந்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 24வது ஆசார்யராகிய ஸ்ரீஅபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள், இந்தத் திருக்கோயிலில் வழிபாடு செய்யும் போது, கணபதியின் திருவுருவம் இங்கு இல்லாததைக் கண்டு, திருக்கோயிலின் முன் புறத் தூண் ஒன்றில், மஞ்சளால் கணபதி திருவுருவத்தை வரைந்து வழிபட்டார். ஆனைமுகன், ஆசார்யரின் வழிபாட்டினால் அகமகிழ்ந்து, அவர் வரைந்த வண்ணமே அங்கு குடிகொள்ளத் திருவுளம் கொண்டான். ஒவ்வொரு நாளும் அவர் வரைந்த அந்தத் திருவுருவம், தூணிலிருந்து புடைத்து எழும்பலாயிற்று. ஸ்ரீ ஆசாரியரின் தபோ பல மகிமை!!.. தூணின் மற்ற பகுதிகள் கெட்டியாகவே இருக்க, இந்த புடைப்புச் சிற்பம் மட்டும், தட்டினால், ஒலி எழுப்பலாயிற்று. அதாவது, சிற்பத்தின் உட்புறம், திடமாக இல்லாமல், வெளியாக இருந்தது.

இந்தத் தூணைச் சுற்றி, ஒரு சன்னதி எழுப்பப்பட்டது. ஸ்தம்ப கணபதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறலாயின. ஸ்ரீசாரதா பீடத்தின் ஆசார்யர்கள் ஒவ்வொருவரும், இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தரும் சமயத்தில், ஸ்ரீஸ்தம்ப கணபதிக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.

கன்னடத்தில், 'கம்பத கணபதி ' (கம்பம்= தூண்) என்றழைக்கப்படும் 'ஸ்தம்ப கணபதி'யை, சிருங்கேரி செல்லும் ஒவ்வொரு முறையும் தரிசிக்கத் தவறுவதில்லை என்றாலும், இம்முறை, கிரகண காலத்தில் வழிபடும் பேறு கிட்டியது. ஆம்!, இங்கே கர்நாடகாவில், கிரகண காலங்களில் திருக்கோயில்களை மூடுவதில்லை. மாறாக, கிரகண காலங்களில் செய்யப்படும் பூஜைகள், ஜபம் முதலியவற்றுக்குப் பலன் அதிகம் என்பதால் திறந்தே வைக்கிறார்கள். மேலும் பூஜகர்கள், கிரகண காலங்களில், நீராடிய பின்னரே திருக்கோயிலுக்கு வருகின்றார்கள். கிரகணம் முடிந்த பின்னரும் நீராடி, அனுஷ்டானங்கள் செய்கிறார்கள்.

நாங்கள் சென்ற போது, பலர், பெண்கள் உட்பட, திருக்கோயிலில் அமர்ந்து ஜபம், ஸ்தோத்திர பாராயணம் செய்வதைப் பார்க்க முடிந்தது.

ஸ்தம்ப கணபதி சன்னதியில் விளக்குகள் ஏற்றப்பட்டு, பூஜைக்கு எல்லாம் தயார் நிலையில் இருந்தன. கிரகணம் முடியும் சமயத்தில் (மாலை சுமார் 4.30 மணிக்கு) பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்தார்கள். மிக நல்ல தரிசனம் இறையருளால் கிட்டியது!..

மலஹானிகரேசுவரர் ஆலயத்தினைப் பற்றி அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. பல்வேறு புதிய + நல்ல தகவல்களுடன் பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ;fசிருங்கேரி ஒருமுறை போனதுண்டு. இதெல்லாம் தெரிந்து கொள்ளவே இல்லை. நீ எழுதுவதைப் பார்த்து மனதாலேயே தரிசித்துக் கொண்டேன். அன்புடன். எவ்வளவு அழகான விஷயங்கள்.

    பதிலளிநீக்கு