வெள்ளி, 26 ஜூன், 2015

SRUNGERI DHARISANAM.. PART 3.. SRI DURGAMBA TEMPLE...சிருங்கேரி தரிசனம்..பகுதி 3... ஸ்ரீதுர்காம்பிகை திருக்கோயில்..

Image courtesy..Google Images
சிருங்கேரி திருத்தலத்தில்,  ஜகத்குரு  ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீசாரதாம்பிகையின் திருக்கோயிலைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் நான்கு காவல் தெய்வங்களை (க்ஷேத்ர பாலகர்கள்) பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த தெய்வங்களில், ஸ்ரீதுர்காம்பிகையும் ஒருவர். அம்பிகை, தெற்கு திசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். 

ஸ்ரீ துர்கா தேவி, மரங்கள் சூழ்ந்த, அடர்ந்த வனப்பகுதியில் கொலுவிருந்து அருளுவதால், 'வன துர்கா தேவி' என்றும அழைக்கப்படுகின்றாள்.

ஒரு நாள் அதிகாலையில், இந்த திருக்கோயிலை தரிசிக்கும் பேறு வாய்த்தது. மிக அழகான சூழலில் சாந்நித்யம் மிகுந்த திருக்கோயில்.

திருக்கோயிலின் வடிவமைப்பு சற்று வித்தியாசமானது. ஏறத்தாழ கேரள தேசத்தின் திருக்கோயில் வடிவமைப்பு முறைகளை ஒத்திருக்கிறது. கோபுரங்கள் அமைக்காமல், ஓட்டுக் கூரை போன்ற அமைப்பு.. பெரும்பாலும் மரத்தால் ஆன கட்டுமானம். இத்திருக்கோயிலில், மரத்தாலான திருச்சுற்றுக்கள்  அமைந்திருக்கின்றன. திருக்கோயிலின் வெளிப்பகுதியில், கல்லால் ஆன த்வஜஸ்தம்பம் அமைந்திருக்கிறது.

அந்த அதிகாலை வேளையில், அம்பிகையைத் துதித்தவாறு, திருக்கோயில் நுழைகையில், கோயிலின் சாந்நித்யத்தை உணர முடிகிறது.  கோயிலின் முன்பாக, நந்தி அம்பிகையை நோக்கியவாறு அமர்ந்திருக்க, அதைத் தாண்டிய முன் மண்டபத்தில், தேவியின் மைந்தர்களான ஸ்ரீகணபதியும், ஸ்ரீமுருகனும், கர்ப்பக்கிருகத்தின் இரு மருங்கிலும் அமர்ந்தருளுகின்றனர். அதைத் தாண்டி, மிக விஸ்தாரமான கர்ப்பக்கிருகம். அநேகமாக, மிகச் சில திருக்கோயில்களிலேயே இப்படி பார்த்திருக்கிறேன்.

கர்ப்பக்கிருகத்தில் மகிடன் தலை மேல் அந்தரி,  அற்புத சொரூபிணி,
அருள் மழை பொழிந்து பவ வினை அழிக்கும் வனதுர்க்கா தேவியின் திவ்யமான தரிசனம். ஸ்ரீ பகவத் பாதர், தம் திருக்கரங்களால் பிரதிஷ்டித்த தேவி!... புன்முறுவல் பூத்த திருமுகம். அம்பிகையின் திருவடிவம் காலத்தால் முற்பட்டதென்பது பார்த்தாலே தெரியும். அம்பிகையின் திருமுன்பாக, கரம் கூப்பித் தொழும் போது, இயல்பாகவே மனம் ஒருப்படுகின்றது..

அம்மையின் வலப்புறம், சற்றுப் பின்பக்கமாக, ஐயனும் லிங்கத் திருமேனியில் அமைந்திருக்கிறார். இவர் சுயம்பு மூர்த்தி. ஸ்ரீஆதிசங்கரர், இந்தத் திருத்தலத்திற்கு வருகை தருமுன்பாகவே இவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார் என்கிறார்கள். ஸ்வாமியின் திருநாமம், ஸ்ரீமல்லிகார்ஜூனர்.

அம்பிகையையும், ஸ்வாமியையும் மனதார வணங்கி வழிபட்டோம்.. திருக்கோயிலிலிருந்து வெளி வர மனமேயில்லை... சற்று நேரம் நின்று தரிசித்த பிறகு, பிரசாதம் பெற்றுக் கொண்டு, நமஸ்கரித்து வெளி வந்தோம்.

கோயிலில் பக்தர்கள் பலர் அமர்ந்து, ஜப சாதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அங்கு நாங்களும் சிறிது நேரம் இருந்து அம்பிகையைத் தொழுதோம்.

இந்தத் திருக்கோயிலின் ரதோத்சவம் மிகவும் பிரசித்தம்..சிருங்கேரியை சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு, இது குடும்பத்துடன் பங்கு கொள்ள வேண்டிய முக்கியத் திருவிழா.. ஆண்டு தோறும், பால்குண (பங்குனி) மாதம் மிருகசீரிஷ நக்ஷத்திரத்தில், திருக்கோயில் மலர்களால் மிக அற்புதமாக அலங்கரிக்கப்படுகின்றது. ஸ்ரீஜகத்குரு, திருக்கோயிலுக்கு வருகை தந்து, தம் திருக்கரங்களால், அம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றார். அதன் பின்னர், அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையின் உற்சவ மூர்த்தி, அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்ட திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்படுகிறது. அதன் பின், நாதஸ்வரம், வாத்தியங்கள் முழங்க, வேத கோஷங்களுடன், வித்யாரண்யபுரத்தை ஒட்டிய தெருக்களில் தேரோட்டம்   நடைபெறுகிறது.

அன்று மாலை, ஸ்ரீஜகத்குருவின் திருமுன்பாக, தீபோத்சவம் நடைபெறுகிறது.

அம்பிகை மிகுந்த வரப்பிரசாதி. வினையால் வரும் பிணியாவையும் தீர்க்கும் மஹாசக்தி. ஒரு முறை, இந்தப் பகுதியில் ப்ளேக் நோய் பரவியிருந்ததாம். அப்போது, ஸ்ரீ சாரதா பீடத்தின் பீடாதிபதியாக இருந்தவர், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள்.. மக்களின் பிணி தீர்க்கும் பொருட்டு, ஸ்ரீ ஸ்வாமிகள், அம்பிகையின் பிரார்த்தனை செய்தார். அதன் பலனாக, இன்று வரை, இந்த நோயால் இங்கு பாதிக்கப்பட்டவர் என எவருமில்லை என்கிறார்கள்.

அம்பிகையின் கருணை, மழையெனப் பொழிந்து மக்களை காத்து வருவது கண்கூடு!... அம்பிகைக்கு வேண்டுதல்கள் செய்வோர், வேண்டுதல்கள் நிறைவேறியதும், இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். அம்பிகைக்கு பானக நிவேதனம், பானக அபிஷேகம் செய்வதும், துர்கா சப்தசதி பாராயணம் செய்விப்பதும், (குறித்த தொகை கட்டினால், நமக்காக அம்பாள் முன்பு பாராயணம் செய்வார்கள்) விசேஷம்..தன் தண்மையான அருளினால் மனங்குளிரச் செய்யும் அம்பிகைக்கு, தயிர் சாதம் நைவேத்தியம் செய்வதால், நோய்கள் அகலும். கொடும் துயரங்கள் நீங்கும். தம் வாழ்வின் இருள் நீக்கி ஒளியேற்றிய ஸ்ரீ துர்க்கைக்கு, தீப வழிபாடும் செய்கிறார்கள் பக்தர்கள்..

இதையெல்லாம் அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

மீண்டும் ஒரு முறை, திருக்கோயிலின் வெளியிலிருந்தவாறே அம்பிகையை வணங்கி, 'மீண்டும் உன்னை வந்து தரிசிக்க அருள்வாய் அம்மா!' என்று பிரார்த்தனை செய்து கிளம்பினோம்.. ஒவ்வொரு திருக்கோயில் தரிசிக்கும் போதும், நம் வேண்டுதல்களுடன், அங்கு மீண்டும் தரிசிக்க வேண்டுமென்ற வேண்டுதலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.. பின்னர் அங்கிருந்து வேறொரு கோயிலுக்கு கிளம்பினோம்..

(அடுத்த பதிவில், சிருங்கேரியின் மற்றொரு திருக்கோயில்..)

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக