வெள்ளி, 31 ஜூலை, 2015

SRUNGERI DHARISANAM... PART 4....SRI KERE ANJANEYA SWAMY TEMPLE...சிருங்கேரி தரிசனம்.. பகுதி 4..ஸ்ரீ கெரே ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்...

IMAGE COURTESY: WWW.SRINGERI.NET
ஸ்ரீ பகவத் பாதர், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் நான்கு திசைகளிலும் பிரதிஷ்டை செய்த நான்கு க்ஷேத்ர பாலகர்கள் திருக்கோயில்களுள் ஒன்று இது..ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை, மேற்கு திசையில் பிரதிஷ்டை செய்திருக்கிறார் ஸ்ரீ ஆசாரியர்.

சிறிய அளவிலான கோயிலே ஆனாலும், மிக பிரசித்தி வாய்ந்தது... உள்ளூர் வாசிகள், ஆட்டோக்காரர்களிடம் கேட்டால் வழி தெரியும்...சற்று குறுகலான தெருவில் அமைந்திருக்கிறது.. ஆஞ்சநேயர், அவர் மகிமை போல், மிக உயரமான இடத்தில் அமர்ந்திருக்கிறார்!...கீழிருந்து, மிக உயர்ந்த படிக்கட்டு வரிசை, அவரை தரிசிக்க நம்மை அழைத்துச் செல்கிறது.. 

நாங்கள் சென்றிருந்த சமயம், ஸ்ரீ ராமநவமி உற்சவ நிறைவு நாள் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதையொட்டி, சிறப்பு அபிஷேகங்களும் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. படிக்கட்டுக்களின் கீழே அன்னதான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

படிக்கட்டுகள் ஏறினால், ஒரு பெரிய கூடம் போன்ற அமைப்பு, மையத்தில், நாலைந்து படிகள் கடந்து, ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியின் கருவறை.. கல்லிலே புடைப்புச் சிற்பம் போல் செதுக்கப்பட்ட மூர்த்தி.. சுயம்பு மூர்த்தியா என்று தெரியவில்லை...

அஞ்சனை மைந்தனின் தேஜஸ் பொங்கும் திருவுருவ தரிசனம்.. ஸ்ரீ ராம தூதர், பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் ஏற்றுக் கொண்டிருந்தார். மிக சிரத்தையாக அபிஷேகங்கள் செய்து கொண்டிருந்தார் அங்கிருந்த பூஜகர். இளநீர் அபிஷேகத்திற்கென, 'இளநீர் மலை' ஒன்று அருகிருக்க, அதை சிலர் உரித்து, அபிஷேகத்திற்கு அளித்துக் கொண்டிருந்தனர்.

மிகக் குறைந்த அளவே பக்தர்கள் கூட்டம்.. ஆயினும் பக்தியுடன் ராம நாம ஜபம்  நடைபெற்றுக் கொண்டிருந்தது.. மிகுந்த சாந்நித்யத்தை உணர முடிந்தது.. அபிஷேகம் நடந்து கொண்டிருந்ததால், மலர்கள் மட்டும் பிரசாதமாக வழங்கினர். நமஸ்கரித்து வணங்கி விட்டு வெளி வந்தோம்..

ஒவ்வொரு சனிக்கிழமையும், விசேஷ பூஜைகள் பஜனைகளும் நடைபெறுகின்றன. பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது, ஸ்ரீ ஆஞ்சநேய‌
மூர்த்திக்கு விசேஷ பிரார்த்தனையாக இருக்கிறது.

இங்கு தீபோத்சவம் மிக விசேஷம் என்கின்றனர். கார்த்திகை மாதத்தில், ஏதேனும் ஒரு சனிக்கிழமை, ஸ்ரீ ஜகத்குருவின் திருமுன்பாக, மிகப் பெரிய அளவில் தீபோத்சவம் நடைபெறுகிறது..

அடுத்த பகுதியில் மற்றொரு திருக்கோயில்....

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:  கூகுள் படங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக