செவ்வாய், 12 நவம்பர், 2013

MINI STORIES.. KATTRIL PARAKKUM KAAGITHA THUNDUGAL.....சின்னஞ்சிறு கதைகள்.. காற்றில் பறக்கும் காகிதத் துண்டுகள்!!


ஒரு ஊரில், வயதான ஒரு பெரிய மனிதர் வாழ்ந்து வந்தார். எக்காலத்திலும் தனக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென்ற கொள்கையுடையவர் அவர். 

அவரது அண்டை வீட்டுக்காரர் நற்குணங்கள் நிரம்பியவர். உழைப்பாளி. கடுமையான உழைப்பினால் செல்வம் சேர்ந்தது அவரிடம். பெரிய மனிதருக்கு இதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. 'எங்கே நமக்குப் போட்டியாக வந்து விடுவாரோ' என்ற பயத்தில், அவரைப் பற்றி அவதூறு பரப்பலானார். அண்டை வீட்டுக்காரர் ஒரு திருடர் என்றும் அதன் காரணமாகவே விரைவில் செல்வம் சேர்த்தார் என்றும் பார்ப்போரிடமெல்லாம் கூறலானார். பெரிய மனிதரின் கூற்று என்பதால், செய்தி விரைவாகப் பரவலாயிற்று.

இதன் காரணமாக, ஊர்க்காவல் படையினருக்கு விஷயம் விரைவில் போய்ச் சேர்ந்தது. அவர்கள், இதை நம்பி, பெரிய மனிதரின் அண்டை வீட்டுக்காரரை பிடித்துக் கொண்டு போய், காவலில் வைத்தனர். அதன் பின், தக்க விசாரணை நடந்து, அண்டை வீட்டுக்காரர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.

ஆனால், அண்டை வீட்டுக்காரருக்கு, தான் பட்ட அவமானத்தை மறக்க இயலவில்லை. கடும் கோபம் கொண்ட அவர், பெரிய மனிதர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். பெரிய மனிதர், நீதிபதியின் முன் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

பெரிய மனிதர் நீதிபதியிடம்,'நான் ஏதோ நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன். நாங்கள் இருப்பது சிறிய ஊர்... அதில் நான் சொன்னதால் இவர் மதிப்புக் குறைகிறது என்பது அபத்தம். அதுதான் இவர் யோக்கியர் என்பது நிரூபணமாகிவிட்டதே?!!. இனி, சொற்ப மனிதர்களே இருக்கும் எங்கள் ஊரில் இவர் நிச்சயம் மதிக்கப்படுவார்' என்றார். தான் பெரிய மனிதர் என்பதால், தன்னைத் தண்டிக்க தயங்குவார்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது அவருக்கு!!!

ஆனால்,  நீதிபதி, நீதிக்கு மட்டும் பயப்படுபவர். பெரிய மனிதரின் தோரணைக்கு அஞ்சுபவரல்ல.. 

நீதிபதி, பதில் ஏதும் சொல்லாமல், அவரை அருகே வரவழைத்து, ஒரு காகிதத்தைக் கொடுத்து, அதைத் துண்டுகளாகக் கிழிக்கச் சொன்னார். பின், அந்தப் பெரிய மனிதரை ஊருக்குப் போகும்படியும், போகும் வழியெல்லாம், துண்டுகளை வரிசையாகப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்றும் கூறி,  நாளை மீண்டும் நீதிமன்றம் வரவேண்டுமென்று கூறினார்.

பெரியமனிதரும் அவ்வாறே செய்து, தம் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். மறு நாள் நீதிமன்றம் சென்றார். நீதிபதி அவரிடம், 'போய், நேற்று நீங்கள் போட்ட காகிதத் துண்டுகளை சேகரித்து வாருங்கள்!!' என்றார். விக்கித்துப் போனார் பெரிய மனிதர். 'அது எப்படி முடியும்... அவை காற்றிலே எங்கெங்கு சென்றனவோ யாருக்குத் தெரியும்?' என்று கேட்டார்.

நீதிபதி,  'தெரிந்து கொள்ளுங்கள்..இதைப் போன்றதே நீங்கள் சொன்ன அவதூறு வார்த்தைகளும். அவை திரும்பப் பெற முடியாதவை. உங்கள் ஊரில் இருப்பவர்களை மட்டும் வைத்து எடை போடக் கூடாது அவர்கள் மூலம் வாய்மொழியாக, காற்றில் கலந்து, அண்டை ஊர்களில் எல்லாம் பரவியிருக்கும். அவைகளை நீக்குவதென்பது முற்றிலும் இயலாத செயல். நிச்சயம் உங்கள் செயலுக்கு நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்..' என்றார் கடுமையாக.

பெரிய மனிதர் உண்மை உணர்ந்து தலை கவிழ்ந்தார். 

நீதிபதி, மிகப் பெரும் தொகையை  நஷ்ட ஈடாக அண்டை வீட்டுக்காரருக்கு வழங்க உத்தரவிட்டார்.

"பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்!" --- சுவாமி விவேகானந்தர் 

"மற்றொருவன் தன்னைவிட அறிவாளியாக இருப்பதைப் பார்த்தோ அல்லது அவன் தன்னைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தோ பொறாமை கொள்வது அல்லாவின் ஏற்பாட்டில் குறைகாண்பதாகும்".. திருக்குர் ஆன்

"உங்கள் உள்ளத்தில் பொறாமையும், மனக்கசப்பும், கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம், உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம் " ----யாக்கோபு: 3:14

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

PARANGIRI VAZH PARANE...பரங்கிரி வாழ் ப‌ரனே!! (ஸ்கந்த சஷ்டி..8/11/2013)

அறுபடை வீடு கொண்ட ஆறுமுக வேலவனே
அறுவர் வளர்த்தெடுத்த ஆரமுதே!! சோதியனே!!
ஆறிரு தடந்தோளும் கூர் வேலும் கொண்டருளும்
அறுங்கோண அதிபதியே!! பரங்கிரி வாழ் பரனே!!

ஆறெழுத்து மந்திரத்தை ஓதி தினம் துதிக்கின்ற‌
அன்பர் மனத்திருப்போனே!!அருள் ஞான தத்பரனே
அழகென்ற சொல்லுக்கு ஒரு பொருளே குருபரனே
அகலாது காத்தருள்வாய் பரங்கிரி வாழ் ப‌ரனே!!

பன்னிரு விழிகளிலும் பொழி கருணைக்கு ஈடுண்டோ!!
பைந்தமிழ்  கடவுளே நின் அருளுக்கு இணையுண்டோ!!
பொன்னடி  தொழுது நின்றால் பொன்னகர் தனையருள்வாய்
நின்னையே போற்றுகின்றேன்! பரங்கிரி வாழ் பரனே!!

ஞான வழி மேவுகின்றோர் நாடுகின்ற குருகுகனே!!
மோன நிலை தந்தருளும் முழுமுதலே சிவைமகனே!!
வானவரும் ஞானியரும் தாள் பணியும் அருள்நிலவே!!
நானுனையே போற்றுகின்றேன் பரங்கிரி வாழ் பரனே!!

சித்தர்களும் முக்தர்களும் நித்தம் உனதடி பணிவர்
பக்தர்களோ பல கோடி, பணிந்து தினம் துதித்திடுவர்!!
சித்தம் அதில் உன்னுருவே நின்றிடவே வேண்டுகிறேன்
புத்தியிலே நின்றருள்வாய் பரங்கிரி வாழ் பரனே!!

செந்தூரான் கழலடி சிந்தையில் தினம் வைத்து 
வந்தனை  செய்திடுவோம் வாழ்த்துவோம் வாழ்த்தாது
நிந்தனை செய்வோர்தம் தமிழுக்காய் வரமளிக்கும்
கந்தனே உன்னடி தொழுதேன் பரங்கிரி வாழ் பரனே!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 31 அக்டோபர், 2013

DEEPA OLI THIRUNAAL...தீப ஒளித் திருநாள்...

இந்தப் பாடலை,மிக அருமையாகப் பாடி, அழகான படங்களுடன் இணைத்திருக்கிறார், உயர்திரு.சுப்புத்தாத்தா.. கூடவே, மிக அழகாக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்த்திருக்கிறார். கீழ்க்கண்ட  காணொளியில்  கேட்டு, கண்டு மகிழுங்கள்...


திசையெட்டும் ஒளிரட்டும் தீபங்கள் பொலியட்டும்!!
தீமைகள் அகன்று நல்ல திருவருள் நிறையட்டும்!!
வாழ்வெல்லாம் வளம் தரவே வாழ்த்துக்கள் மலரட்டும்!!
வண்ணமிகு வாணங்கள் எங்கெங்கும் நிறையட்டும்!!

மத்தாப்பு வாணங்கள், மகிழ்வான நல்வாழ்த்து,
புத்தாடை, பூ வாசம், புகழ் சேர்க்கும் விருந்தோம்பல்,
சத்தான சிற்றுண்டி, சந்தோஷ சிரிப்பொலிகள்,
முத்தான நாளிதுவே மலர்மகளை வணங்கிடுவோம்!

பொன்மகளே!  திருமகளே!  பூவுலகின் தலைமகளே!!
பொன்னடிகள் எடுத்து வைத்து நம் இல்லம் எழுந்தருள்க!!
பொன்னொளியில் குடியிருந்து, புவி சிறக்க வரமருள்க!!
பொன்னினும் பெரிய நல் மனம் தந்து நலமருள்க!!!

எந்நாளும் எம் மக்கள் சிரித்திருக்க வரமருள்க!!!
எங்கெங்கும் இன்பமயம் என்றிருக்கும் நிலையருள்க!!
இல்லையெனும் சொல் இல்லா நல்லுலகம் தனையருள்க!!
ஏற்றமிகு நல்வாழ்வு எல்லோர்க்கும் நீ அருள்க!!!

ஒளிர்கின்ற விளக்கினிலே மிளிர்கின்ற மெய்ச்சுடரே!!!
பளிங்கொத்த மனம் தந்து பவ வினைகள் தீர்த்திடுவாய்!!!
வளி போல வருந்துன்பந் தனிலிருந்து காத்தருள்வாய்!!!
தளிரொத்த திருவடிகள் பணிந்து தினம் வணங்கிடுவோம்!!!

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!. பொங்கும் இன்பம் தங்குக எங்கும்!!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 28 அக்டோபர், 2013

MINI STORIES...UNGALIN NANBAN..சின்னஞ்சிறு கதைகள்...உங்களின் நண்பன்


அது ஒரு தொழிற்சாலை..

சில நூறு நபர்கள் மட்டுமே பணிபுரிந்தார்கள். ஆனால் அவர்களது வேலைத் திறமையின் காரணமாக, அந்தத் தொழிற்சாலைக்கு ஆர்டர்கள் குவிந்தன. தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு அருமையான தொழிற்கூடமாக அது திகழ்ந்தது.

தொழிற்சாலையின் அதிபர்.. தொழிலை விரிவு படுத்துவதற்காக சுற்றுப் பயணம் புறப்படத் தீர்மானித்தார்..தொழிற்சாலையை, தொழிலாளர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்.

திரும்பியதும்,  அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது..

 திடீரென்று ஆர்டர்கள்  குறைந்திருந்தன. தரம், மற்ற விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை. போட்டித் தொழிற்கூடங்கள், தரத்தில் போட்டியிட முடியவில்லை. ஆயினும் அங்கு ஆர்டர்கள் குவிந்தன...

தொழிற்கூடத்தின் அதிபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். காரணம் தேடினார். சில காலமாக, கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் சரியாக டெலிவரி செய்யப்படாதது தான் காரணம் என்று தெரிந்து கொண்டார்.

அவருக்குப் பேராச்சரியம்.. என்ன ஆச்சு தொழிலாளர்களுக்கு.. ஏதாவது பிரச்னை அல்லது குறையா.. ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பித்தார். காரணம் பளிச்சென்று புரிந்தது..

ஒவ்வொருவரிடமும் பெரிய புகார் பட்டியல்... என் திறமையை இவர் மதிக்கவில்லை. நான் முன்னேறக் கூடாதென திட்டமிட்டு வேலை செய்கிறார்...மட்டம் தட்டுகிறார்.. அவர் என்னைப் பற்றி துஷ்பிரசாரம் செய்கிறார்.' இப்படி நீண்டது பட்டியல்..

ஒரு அதிர்ச்சி வைத்தியம் தரத் தீர்மானித்தார் தொழிற்கூடத்தின் அதிபர்.

ஒரு நாள், தொழிலாளர்கள், தொழிற்கூடத்தின் வாசலில் ஒரு பெரிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தனர்..

'உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்த மிகக் கொடுமையான எதிரி இன்று மறைந்து விட்டார்.. தொழிற்கூடத்தின் உடற்பயிற்சி மையத்தில், அவரைக் காணலாம்..'

ஜிம்மை நோக்கி முண்டியடித்தது தொழிலாளர் கூட்டம்.. ஒருவருக்கொருவர் காரசாரமான உரையாடலில் ஈடுபட்டனர். சிலர், 'மலர் வளையம் கூட வைக்கக் கூடாது.. இவரெல்லாம் மரியாதைக்குரியவரல்ல..' என்பதாக மனிதநேயமில்லாமல் கூட பேசத் தலைப்பட்டனர். 

ஆனால், ஜிம்மின் உள்ளே நுழைந்து வந்தவர் யார் முகத்திலும் ஈயாடவில்லை. அதிர்ச்சி நிரம்பிய முகத்தோடு அவரவர் இடத்திற்குச் சென்ற‌னர். யாருடனும் பேசவில்லை.

சில நாட்களிலேயே தொழிற்கூடத்தில் நிலைமை சீராகியது..பழையபடி ஆர்டர்கள் குவிந்தன..

அப்படி ஜிம்மின் உள்ளே என்னதான் இருந்தது?!!..

ஒரு மேஜையில் அமரர் உடல் வைக்கும் பெட்டி, அதைத் திறந்தால் அதனுள்.....


ஒரு கண்ணாடி!!!!!!!

பக்கத்தில் கொட்டை எழுத்தில் ஒரு வாசகம்..

'ஒரே ஒருவர் தான் உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்..

அது நீங்கள் தான்..'

ஒருவரது மிகச் சிறந்த நண்பனும், மிகக் கொடுமையான எதிரியும் அவர் தான்.....

 அவர் மட்டுமே தான்..
+++++++++

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.

"நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும். "(சுவாமி விவேகானந்தர்..இந்த ஆண்டு சுவாமிஜி விவேகானந்தர் நூற்றாண்டு..)

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- Dr. David Schwartz

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
...ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

திங்கள், 21 அக்டோபர், 2013

THANUSUVIN KURUNGAVITHAIGAL... தனுசுவின் குறுங்கவிதைகள்..

என் கவலை

ஆந்திரா இரண்டாக பிரித்து
தெலுங்கானா உதயம்

எனக்கொரு குழப்பம்

எனக்கு பிடித்த
காரமான சாப்பாட்டை
இனி
எந்த பெயர் சொல்லி அழைப்பேன்?!!....





பேஸ் புக்

பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது
வெட்டியாய்
அரட்டை அடிக்க உட்கார்ந்த
குட்டிச் சுவரும்....





மடியில்

நான் பெற்ற குழந்தை
வேலைக்காரியின் மடியில்.
என் மடியில்
மடிக்கணினி.....

-தனுசு-