செவ்வாய், 12 மார்ச், 2013

KASI YATHRA. PART 1....முதலில் இராமேஸ்வரம்...(காசி யாத்திரை.....பகுதி 1)


இந்து தர்மத்தில், ஒருவரின் வாழ்நாள் கடமைகளுள் ஒன்றாக மதிக்கப்படுவது காசியாத்திரை. காசி யாத்திரை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்றும், கங்கா ஸ்நானம் புண்ணிய வசத்தாலேயே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இறைகருணையால், காசியாத்திரை செய்யும் ந‌ல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

அது தொடர்பான அனுபவங்களை, தெய்வீகமாக மட்டுமல்லாது லௌகீகமாகவும் உங்களோடு பகிர விரும்புகிறேன். இதை  முதலிலேயே சொல்வது நல்லது என்று தோன்றியது. ஏனென்றால், காசியாத்திரை போய் வந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். அதில் எவ்விதமான அனுபவங்கள் ஏற்படும் என்று அறிந்துமிருப்பார்கள்.  காசியாத்திரையைப் பற்றிய தெய்வீகப் பதிவுகள் பலவும் இருக்கின்றன. ஆகவே, இனி காசி யாத்திரை செய்ய விரும்புவோருக்கு கிட்டத்தட்ட ஒரு கைடு போல, எல்லாவித அனுபவங்களும் கலந்ததாக இக்கட்டுரை வர வேண்டுமென நினைக்கிறேன்.

முறையான கிரமமான காசியாத்திரை செய்ய வேண்டுமெனில், இராமேசுவரம், அலகாபாத்(பிரயாகை), காசி, கயா மீண்டும் இராமேசுவரம் என்று முடிப்பது இப்போது வழக்கத்தில் இருக்கிறது. மிக முற்காலத்தில், இராமேசுவரம், அலகாபாத், காசி, கயா, மீண்டும் காசி, அலகாபாத் இராமேசுவரம் என்று முடிப்பது வழக்கமாம்.

இதன் தெய்வீகக் காரணங்கள் பலவும் இருந்தாலும், முற்காலத்தில் நம் முன்னோர்கள், பாரத தேசத்தின் ஒற்றுமைக்கென்றே இவ்விதமான கிரமத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றியது. வடக்கு, தெற்கு இணைப்பு தெய்வீகத்தால் தான் சாத்தியப்படும் என்று வார்த்தையால் சொல்லாமல் சாஸ்திர விதியாக செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பொதுவாக, காசியாத்திரை, தெய்வ தரிசனத்திற்காக மட்டுமல்லாது, நம்மை இந்த மண்ணில் உருவாக்கி, உயிர்கொடுத்து, அன்பையும் அன்னத்தையும் சேர்த்து ஊட்டி, பசி நோக்காமல் கண் துஞ்சாமல் நம்மை வளர்த்தெடுத்து ஆளாக்கிய பெற்றோர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவர்களையும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த முன்னோர்களையும் பிறவிப்பெருங்கடலில் இருந்து கரையேற்றுவதற்காகவுமே முக்கியமாகச் செய்யப்படுகிறது.

காசியாத்திரை என்பது தெய்வசங்கல்பத்தாலேயே கிடைக்கும் என்பதால், யாத்திரை செய்வதென்று தீர்மானித்த உடனே, யாத்திரை நல்ல விதமாக நிறைவேற வேண்டுமென குலதெய்வத்திற்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைப்பது வழக்கம். ஒவ்வொரு நிலையிலும் தடங்கல் பல வரும். அதை மீறி யாத்திரையை நல்லவிதமாக நிறைவு செய்வது ஈசன் செயலன்றி வேறெதுவும் இல்லை.

பொதுவாக, பிள்ளை இருக்கிறவர்கள், பிள்ளையுடனேயே காசியாத்திரை செய்ய வேண்டுமென விதி இருக்கிறது. காசி என்பது கர்ம பூமி. மிக முற்காலத்தில் காசியாத்திரை சென்றவர்கள் திரும்புவதே அபூர்வம் என்பார்கள். ஆகவே பிள்ளையும் உடன் செல்ல வேண்டும். லௌகீகமாகப் பார்த்தால், பெரும்பாலும் வயதானவர்களே காசிக்குச் செல்கிறார்கள். அவர்களை அழைத்துச் செல்ல, படிகளில், படகுகளில் ஏற்றி இறக்க உதவியாக‌ பிள்ளையும் உடன் செல்வது நல்லதல்லவா?.

இந்த விதிப்படியே, நானும் என் கணவரும் என் மாமனார் மாமியாருடன் காசி சென்றோம். பொதுவாக, யாராவது காசி யாத்திரை செல்வதானால், அவரது குழந்தைகள், உற்றார் உறவினர்கள், அவர்களை, பயணத்திற்கு முன்பாகச் சந்தித்து ஆசி பெறுதல் அவசியம். யாத்திரை நிறைவு செய்த பின்னும் கண்டிப்பாக, ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பெண் ம‌க்கள், தாய் தந்தையருக்கு, தாம்பூலம் தந்து, யாத்திரைப் பணம்(இதை காசியில் உண்டியலில் சேர்ப்பார்கள்) தர வேண்டும். இது பெரும் புண்ணியம் என்று கூறப்படுகிறது.
முதல் கட்டமாக,  இராமேஸ்வர யாத்திரை செய்ய வேண்டும். வீட்டில், இறைவனை வேண்டிக்கொண்டு புறப்பட்டு இராமேஸ்வரம் போய், தனுஷ்கோடியில், சங்கல்ப ஸ்நானம் செய்ய வேண்டும். தெரிந்த வைதீகர்களை துணை கொள்வது மிக முக்கியம். இல்லையென்றால் பட்ஜெட் படுத்தி விடும். இதை, முறையாக, கிரமமாகத் தெரிந்து செய்பவர்களை விசாரித்து ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்த உடன், காசி யாத்திரை சங்கல்பம் செய்வார்கள். மணலினால் சேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என்று மூன்று லிங்கங்கள் பிடித்து பூஜை செய்ய வேண்டும்.  மூன்று லிங்கங்களில், சேதுமாதவரை, சேதுக் கரையிலேயே கரைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். பிந்து மாதவரை, நமக்குச் செய்து வைத்த வைதீகர் தானம் பெற்றுக் கொள்வார். வேணி மாதவரை, பத்திரமாக ஒரு டப்பாவில் வைத்து வாங்கி வர வேண்டும். இதுவே பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட வேண்டியது.

வேணிமாதவரை ஒரு கவரில் போட்டு வாங்கி வருவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிலிருந்தே தகுந்த டப்பாவைக் கொண்டு செல்வது அவசியம். ஏனெனில் அதில், வேணி மாதவரை பிராணப் பிரதிஷ்டை செய்து வாங்கி வருகிறோம். கவரிலிருந்து அது சிதறிவிடக்கூடாது.

அதை வீட்டுக்கொண்டு வந்ததும் பூஜை அறை/அலமாரியில் வைத்து, காசி யாத்திரை செல்லும் வரை அந்த டப்பாவிற்கு பூ வைத்து, இயன்றதை தினம் நிவேதனம் செய்ய வேண்டும். காசி யாத்திரை செல்லும் தினத்தில், மறக்காமல் அதை எடுத்து வைத்துக்  கொள்ள வேண்டும். பிரயாகையில் வேணி தானத்திற்கு முன் சங்கல்பம் செய்யும் போது அதை தவறாமல் கேட்பார்கள். மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, அதை 'மண்' என்று சொல்லாமல், வேணி மாதவர் என்றே சொல்லிப் பழக வேண்டும். பிரயாகையில் ஒரு பாட்டி, 'இராமேஸ்வரத்திலிருந்து மண் எடுத்து வந்தோமே, அந்த டப்பாவ எடு ' என்று உரக்கச் சொல்லி அங்கிருந்த வைதீகரிடம் சரியாக 'வாங்கி'க் கொண்டார்.

இராமேஸ்வர யாத்திரை செய்து முடிக்க, சுமாராக ஒரு தம்பதிக்கு ரூ.6000லிருந்து  எட்டாயிரம் வரை (இராமேஸ்வரத்தில் தங்கும் செலவு, தனுஷ்கோடி போய்வரும் செலவு, வைதீகச் செலவு எல்லாம் சேர்த்து) ஆகும். உணவு, நம் இருப்பிடத்திலிருந்து போய்வரும் செலவு தனி. முதல் நாள் மாலையிலேயே இராமேஸ்வரம் சென்று தங்கிக் கொண்டால், மறு நாள்  காலையில், தனுஷ்கோடி சென்று விடலாம். மதியத்துக்குள் எல்லாம் நிறைவடைந்து விடும். ஸ்வாமி தரிசனம் முடிந்து இரவு புறப்பட்டு விடலாம். (தொடரும்....)

சிவனருளால்,

வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. ஒவ்வொரு நிலையிலும் தடங்கல் பல வரும். அதை மீறி யாத்திரையை நல்லவிதமாக நிறைவு செய்வது ஈசன் செயலன்றி வேறெதுவும் இல்லை.

    மிகச்சிறப்பான பகிர்வுகள் பயனுடையவை ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. ////இராஜராஜேஸ்வரி said...
    ஒவ்வொரு நிலையிலும் தடங்கல் பல வரும். அதை மீறி யாத்திரையை நல்லவிதமாக நிறைவு செய்வது ஈசன் செயலன்றி வேறெதுவும் இல்லை.

    மிகச்சிறப்பான பகிர்வுகள் பயனுடையவை ..பாராட்டுக்கள்.////

    தாங்கள் தரும் ஊக்கத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை. என் மிகப் பணிவான நன்றிகளும் வணக்கங்களும் அம்மா.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான் பதிவு. இராமேஸ்வரம் பயணம் இனிதே முடிந்தது. இனி நானும் காசிக்கு தங்களுடனேயே தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    வேணி மாத்வர் என்றே சொல்ல வேண்டும். ;)))))

    பதிலளிநீக்கு
  4. காசி யாத்ரா என்று தாங்கள் சொல்லவும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. கல்யாணம் என்றால் காசி யாத்ரா என்று ஒன்று பண்ணுகிற பழக்கம் நினைவிருக்கலாம். அதன் உண்மையான ஸ்வரூபம் என்ன?

    வித்யாப்யாஸம் முடிந்ததும் ஒரு பிரம்மச்சாரி தனது குருவின் (வேதம் சொல்லிக்கொடுத்தவர், சந்யாச குரு அல்லர், அவர் அப்புறம் வருவார்) அனுமதியுடன் காசிக்கு சென்று பாகீரதியில் ஸ்நானம் பண்ணி காசி விஸ்வநாதரையும் அம்பாள் விசாலாக்ஷியையும் தர்சனம் பண்ணி அகத்துக்கு திரும்ப வேண்டும். பிரம்மச்சர்ய ஆஸ்ரமம் நியமம் காத்து விரதம் தீர்த்து அதே சமயம் இன்னும் விவாகமும் ஆகாமல் அகத்துக்கு திரும்பும் அந்த நிலையில் உள்ள உத்தம பிரம்மச்சாரி பிராம்மணனுக்கு "ஸ்நாதகன்" என்று பெயர். அகத்துக்கு வந்ததும் அவன் தாய் தந்தையர் பார்த்த உத்தம குல ஸ்த்ரீ ரத்னத்தை (பெண்மணியை)அவன் விவாஹம் பண்ணிக்கொண்டு க்ருஹஸ்தாஸ்ரமத்தில் ப்ரவேசிக்கிறான்.

    இது தான் கல்யாணத்தில் வரும் காசியாத்ரா. ஆனால் இன்றைக்கு அதை ஒரு கேலிக்கூத்தாக்கி விட்டார்கள். கேலிக்கூத்து மட்டும் அல்ல, சந்யாசி ஆகிறேன் என்று பையன் போவதாகவும் அவனை மீண்டும் சம்ஸாரத்தில் இழுத்து விடுவதாகவும் காட்டுவது அபத்தம் மட்டும் அல்ல, மஹத்தான நிஷித்தமும் கூட.

    ஏதோ பகிரத் தோன்றியது, சொல்லி விட்டேன்.

    வணக்கங்களுடன்,
    புவனேஷ்

    பதிலளிநீக்கு