சனி, 13 ஜூலை, 2013

நினைவு நல்லதானால்...


'நல்லதே நினைக்கணும்....'. இதைச் சொல்லாத சமய  நூல்களில்லை. சுயமுன்னேற்ற நூல்களில்லை. உளவியல் நிபுணர்களில்லை. ஏனோ இதைப் பற்றி நானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அதை நடைமுறைப்படுத்த கொஞ்சமேனும் முயல வேண்டுமென்பது என் ஆசை.

எண்ணங்கள் எப்படிச் செயல்படுகிறதென்பதை அறிய வேண்டுமென்பது என் நெடுநாளைய அவா. எண்ணங்கள் பரந்த இப்பிரபஞ்சம் முழுவதையும் ஆளும் இறைவனின் உணர்வில் ஒரு சிறு துளிதான்.  நாமே இறைவனது குழந்தைகள் எனும் போது நம் எண்ணங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?.

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் இப்பிரபஞ்ச வெளியில் அலைகளாக  உருவெடுத்து பயணிக்கின்றன. அவை யாவும் தொடர்ந்து அதிர்ந்தவாறே இருக்கின்றன.

இந்தக் கருத்து, சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த, 'ஒரு யோகியின் சுயசரிதம்' எனும் புத்தகத்தில்(புத்தகமல்ல இது... ஆன்மீகம் நாடுவோருக்கு இது ஒரு பொக்கிஷம்)ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரால் மிகப் பலமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

"ஆழ்ந்த ஒரு முனைப்படுதலின் மூலம், ஒரு ஞானி, எந்த ஒரு மனிதனுடைய எண்ணங்களையும், அவன் வாழ்கிறவனாக இருந்தாலும் சரி, இறந்தவனாக இருந்தாலும் சரி, அறிந்து கொள்ள முடியும். எண்ணங்கள் எங்கும் நிறைந்ததாகவே இருக்கின்றன. அவை தனி மனிதனில் வேரூன்றியில்லை. மனம் அமைதியாக இருக்கும் போது, ஆன்மாவின் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான வழிகாட்டுதல் உள்ளுணர்வின் வாயிலாக வந்து சேருகிறது. மனிதனின் தவறான புரிந்துணர்வே, நல்ல தீய எண்ணங்களுக்குக் காரணமாயிருக்கிறது. யோக நெறிகள், மனதை அமைதிப்படுத்தி, நம் உள்ளிருந்து அழைக்கும் தெய்வீகக் குரலைக் கேட்குமாறு செய்கின்றன".

இதைப் படித்ததும் எனக்கு கீழ்க்கண்டவாறு தோன்றியது. நம்மில் பலருக்கும் இந்த அனுபவங்கள் நேர்ந்திருக்கும்.

1. அமைதியான மனநிலையில், ஆழ்ந்து யோசிக்கும் போது, சிக்கலான பிரச்னைகள் எளிமையான தீர்வுகள் மூலம் தீர்க்கப்படுகின்றன.

2. நாம் ஒருவரைச் சந்திக்க வேண்டுமென மிகுந்த தீவிரத்துடன் நினைக்கும் போது, அந்த நபரை, எதிர்பாராத வகையில் சந்திக்க நேர்வது.

3. நம்மை கடுமையாக வெறுக்கும் நபரைப் பார்க்க நேர்ந்த கொஞ்ச நேரத்தில், நம் மனம் இனம் புரியாமல் அலைக்கழிக்கப்படுவது அல்லது உடல் நோயுறுவது.

4. நாம் மிகவும் அன்பு செலுத்தும் நபர், ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், அது அறியாத சூழலிலும் நம் மனம் நிலை கொள்ளாமல் தவிப்பது.

இப்படி எத்தனையோ கூறிக்கொண்டே போகலாம். நம் எண்ண அலைகள், நம் மூன்றாவது கண்(ஆஜ்ஞா) வழியாக வெளியாகி, நம்மையும் நம்மை சுற்றி இருக்கும் சூழலையும் பாதிப்பதாலேயே இவ்வாறு நிகழ்கிறது. நம்மைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகள் பரவிக்கிடக்கின்றன. நாம் எண்ணும் நேர்மறை எண்ணங்கள், நம் உடலிலிருந்து வெளியேறி அவற்றுடன் கலக்கும் போது, மின்காந்த அலைகள், நமக்கு நலம் தரும் முறையில் செயல்படுகின்றன. எதிர்மறை சிந்தனைகள், நம்மிடமோ அல்லது நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமோ காணப்பட்டால், அவை, நம்மை உடனடியாகத் தாக்குகின்றன. நம் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன.

நேர்மறை எண்ணங்களின் சக்தி குறித்து நம்மில் அறியாதார் யார்?. எதிர்மறை எண்ணங்கள், கோபம், பொறாமை முதலிய உள் எதிரிகள், நம் உடல்நிலையில் பலத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாரடைப்பு வந்தவர்களுக்கு மருத்துவர் முதலில் கூறும் அறிவுரை, 'டென்ஷனாகாதீங்க' என்பது தானே....

'ஆட்டோ சஜஷன்' எனும் நமக்கு நாமே அறிவுரைத்துக் கொள்ளும் திறன் பற்றி அறியாதவர்கள், நம்மில் மிகச் சிலரே இருக்கக் கூடும். மிகக் கடினமான சூழலில் சிக்கியிருக்கும் போது, நமக்கு நாமே 'நாம இதை சமாளிக்கலாம்' என்றோ, இதுவும் கடந்து போகும்' என்றோ திரும்ப திரும்ப உச்சரிப்பது, நம் மனதை சமனப்படுத்தி, அமைதிப்படுத்தும்.

இவை அனைத்துமே, எண்ணங்களின் செயல்பாடுகள் குறித்த எளிய உதாரணங்களே. சமீப காலமாக, ஆழ்மன செயல்பாடுகளை அதிகரிப்பது குறித்த வகுப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஒருவர் நம்மீது வெறுப்பாக இருந்தால், அவரது மனநிலையை மாற்றவோ, அல்லது நம்மைப் பற்றி ஒருவருக்கு சரியாகப் புரிய வைக்கவோ, நமது ஆழ்மன அலைகளைப் பயன்படுத்தலாம் என்று கூறி, அதன்படி பயிற்றுவிக்கிறார்கள்.

தவத்திரு வேதாத்திரி மஹரிஷி அவர்கள், ஒருவரை நம் மனதுள் 'வாழ்க வளமுடன்' என்று கூறி வாழ்த்துவது, அவருக்கும் நமக்கும் உள்ள உறவில் நல்ல மாறுதல்களை ஏற்படுத்தும் என நிரூபித்திருக்கிறார்.

'எண்ணம் போல் வாழ்வு', 'உள்ளத்தனையது உயர்வு' என்பன போன்ற அறிவுரைகள், அறவுரைகள் எல்லாம், நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை கூர்ந்து நோக்கி, அவற்றை பரிசீலித்து, சரிவர பயன்படுத்த வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்றவையே.

இம்மாபெரும் பிரபஞ்சத்தில், எல்லா செயல்களும், சிந்தனை உட்பட, அதனதன் சரியான எதிர்விளைவுகளைக் கொண்டுள்ளன. ஆகவே, யாராவது ஒருவர் நம் மீது சுடுசொற்களை வீசினாலோ, பழி சுமத்தினாலோ பதறிப் போக வேண்டியதில்லை. தர்மம், ஒரு போதும் முறை தவறாது தன் வேலையைச் செய்யும். நாம் ஒருவரது எதிர்மறையான செயலுக்கு எதிர்வினை ஆற்றினாலும், அதுவும் எதிரிடையான விளைவுகளையே நமக்குக் கொண்டு சேர்க்கும். ஒருவர் பேசிய வார்த்தையும் செய்த செயல்களும் வட்டியும் முதலுமாக திரும்ப வந்து சேருவதை எத்தனை இடத்தில் பார்க்கிறோம். இயற்கையை வஞ்சித்த மனிதன், அதனால் வரும் சேதங்களை சமீபத்தில் கூட பெருவெள்ளமாய் அனுபவித்தானே!.

நான் முன்பு தெரிவித்த 'ஒரு யோகியின் சுய சரிதம்' புத்தகத்தில், ஒரு நிகழ்ச்சி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த யோகிகளுள் ஒருவரான மஹான் லாஹிரி மஹாசயர்,   தன் சீடன் ஒருவனிடம் பின்வருமாறு கூறுகிறார், 'மின்சாரம், அல்லது புவி ஈர்ப்பு இவைகளைப் போல், எண்ணமும் ஒரு சக்தி தான் மனிதனின் மனம் என்பது எல்லாம் வல்ல இறைவனின் உணர்வின் ஒரு சிறு பொறிதான். உன் சக்தி வாய்ந்த மனம் எதைத் தீவிரமாக நம்புகிறதோ அது உடனே நடக்கவே செய்யும்'.

எல்லாம் வல்ல இறைவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைந்து நம் செயல்களைக் கண்காணிக்கிறார் என்பதை வலுவாக நம்பி, நம் எண்ணங்களை முறைப்படி செயல்படுத்தினால், நம் நியாயமான விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும். பாஸிடிவ் திங்கிங் எனப்படும் நேர்மறை சிந்தனைகள், நம் மனதில் நிரம்பி வழியுமானால், நிச்சயம் வெற்றிக்கான வழி நம் கண்முன்னே தோன்றும்.

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

11 கருத்துகள்:

  1. பாஸிடிவ் திங்கிங் எனப்படும் நேர்மறை சிந்தனைகள், நம் மனதில் நிரம்பி வழியுமானால், நிச்சயம் வெற்றிக்கான வழி நம் கண்முன்னே தோன்றும்.


    அருமையான ஆக்கம் ..பாராட்டுககள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா!.

      நீக்கு
  2. குறிப்பிட்டது அனைத்தும் உண்மை... அனுபவித்து உள்ளேன்...

    // நேர்மறை சிந்தனைகள், நம் மனதில் நிரம்பி வழியுமானால், நிச்சயம் வெற்றிக்கான வழி நம் கண்முன்னே தோன்றும்... //

    சத்தியமான வரிகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!!

      நீக்கு
  3. POSITIVE THINKING பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!

      நீக்கு
  4. 'எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லதே எண்ண வேண்டும்'என்ற மகாகவியின் வாசகங்கள் தான் முதலில் நினைவுக்கு வந்தது.

    நல்ல பதிவு.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!.

      நீக்கு
  5. எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம் என்பதை சொல்லும் நல்லதொரு கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுதல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சகோதரரே!!!

      நீக்கு
  6. சித்தம், மனஸ், புத்தி, அஹங்காரம் - இவை அந்தஃக்கரணம் ஆவன என்போர் மேலாம் பெரியோர். மனஸின் சலனம் பயனறுவதில்லை. மனஸ் அடங்கி ஹ்ருதயத்தில் ஒடுங்கும் வரை அதை நற்பாதையில் செலுத்துவதே வீரனின் கடன். அங்ஙனம் குவிந்த அடங்கிய மனம் உடைய முனிகளின் கோபமே சாபம் ஆகிறது. இதனின்று ஒருவன் மனஸின் சக்தியை தெள்ளென அறிதல் இயலும். மோக்ஷத்துக்குத் தடையை உள்ள மனஸ், சரியான வீரனது கட்டுப்பாட்டில் மோக்ஷத்துக்கு துணையாம். பிணஞ்சுடு கோல் போலும் அஃது இறுதியில் தானும் நசிக்கிறது. யாண்டும் அடக்கம் இலாதோர் சிறுவன் ஒத்த மாந்தரிடத்தோ, அந்தோ, அம்மனஸ் துக்க ஹேதுவாகின்றது.

    பதிலளிநீக்கு