திங்கள், 29 ஜூலை, 2013

மாறுவது நெஞ்சம்...

அம்மாவோடு வீட்டுக்குள் நுழையும் போது அத்தை மெலிதாகச் சொன்னாள். 

'அவெ  வந்திருக்கா...... கடப்பக்கம் போயிருக்காப்புல...'

அம்மா  திடுக்கிடுவது தெரிந்தது.  பதில் ஏதும் வரவில்லை.  அது அம்மாவின் சுபாவம்.

அமைதியாகக் கொல்லைப்பக்கம் போனாள் அம்மா. 

'அவெ'என்ற விளி, அத்தையின் தம்பியை, அம்மாவின் கணவனை, என் தகப்பனை ஒரு சேரக் குறிப்பது.  

அம்மா, லோகுவை பிள்ளை பெறப் பிறந்த வீடு போயிருந்த போது, அப்பா என்ற அந்த மனிதர், அந்தச் சமயம், படிப்பதற்காக எங்களோடு வந்து தங்கியிருந்த அத்தையின் மகளை இரண்டாவதாகமணம் செய்து கொண்டார். அப்போது விலகியது, இப்போது எதனால் நெருங்குகிறது என்று தெரியவில்லை.

அத்தை, சமையலறையில், சுருங்கிய முகத்தோடு டீ ஆற்றுவது தெரிந்தது. தம்பி வீட்டிலிருந்து கல்லூரியில் படிக்கட்டும் என்று அனுப்பிய தன் மகள், ஒரு நாள் மாலையும் கழுத்துமாக, தன் தம்பியோடு வந்து நிற்கவும், அடிவயிற்றிலிருந்து வெகுண்டெழுந்த கனலோடு, பொறி பறக்கச் சண்டையிட்டவள். 

'இப்ப என்னா?!!....நா ஆரு வாழ்க்கயயும் பாழடிக்கல... அவுங்க பாட்டு இருக்கட்டும், நானும் இருந்துக்குறேன்' என்று, என்னமோ, தன் நிலை தான் உயர்த்தி போல பேசிய மகளை 'சீ' என்று வெறுத்தவள்.

'மனுசனா நீ....' என்று தம்பி மேல் மண்ணிறைத்தவள். 

விஷயம் தெரிந்து.... ஊர், உறவுமுறைகளின் முன், அப்பாவை விட்டு அம்மா விலகியதும்,  'ஒங்கப்பா இல்லாம, ஒரு பொட்டப்புள்ளய வச்சி வளக்க வம்பாடு பட்டே...... அந்தக் கெதி இன்னொரு பொண்ணுக்கு எம்புள்ளயாலயே வந்திருச்சு. ஆனா அவ தனியாளா இருக்கவுடமாட்டே......  நாம் போறே....' என்று மகளிடம், ஊர் முன்னால் உரக்கச் சொல்லிவிட்டு எங்கள் வீடு தேடி வந்தவள். அம்மா எத்தனை சொல்லியும் திரும்பச் செல்லவில்லை.

'நீ எங்குட்டாச்சும் வேல பாத்துக்க சரசு.... புள்ளகள, வூட்ட நாம் பாத்துக்குறே....' என்று எங்களோடு வந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாகி விட்டது.

அம்மா தனியான போது எனக்குப் பத்து வயது. என் தம்பி லோகு ஆறு மாதக் குழந்தை.

'டீ ஆறிப்போகுது' அத்தை கவனப்படுத்தியதும், அம்மா, டீ பருகினாள். நெற்றியில் சுருக்கம் விழ யோசிப்பது புரிந்தது.

'என்னா....பணப்பிரச்னையா?'

'அதுதாங் கெடக்குதே.... ரெண்டு பேரும் போட்டி போட்டு சம்பாரிச்சி வச்சிருக்காங்க.. ஆள ஆள் இல்லாம...'

'பின்ன என்னாவாம்?'

'ஆரு கண்டா?..

வாசலில் அரவம் கேட்டதும், நான் சட்டென எழுந்தேன்.  அம்மா எழுந்திருக்கவில்லை.

உள்ளே வந்தவர் நல்ல சிவப்பாக, உயரமாக இருந்தார். கைகளில், பழங்கள், தின்பண்டங்கள் கொண்ட  பைகள் இருந்தன. திரைப்படங்களில் சுற்றியடிக்கும் ஃப்ளாஷ்பேக் போல, நினைவலைகளில் மிதந்து, பன்னிரண்டு வருடங்கள் முந்திய அவர் உருவம் தேடிப் பிடித்தேன்.  சற்று மங்கலாக.....கலங்கலாக……

ஊர்ப் பஞ்சாயத்தின் முன், கம்மிய குரலோடு 'வேணும்னுட்டு பண்ணலை சரசு, தகப்பன் இல்லாதது... நாங்காட்டுன பாசத்த தப்பாப் புருஞ்சுக்கிட்டு, 'கட்டுனா ஒன்னதான் கட்டுவே...  இல்லன்னா செத்துடுவே...ன்னுட்டு அழுதுச்சு...எவ்வளவோ சொல்லியுங்கேக்கல.. எதாச்சும் செஞ்சுருமோன்னுட்டுத்தான்...........ஒன்னயும் புள்ளங்களயும் விட்டு இருக்க முடியாது... அது இங்க அக்கா கூட இருக்கும்.  நம்ம வீட்டுல நாம மட்டுந்தேன். நா அப்பப்ப இங்க வந்து போறே... எஞ்சம்பளம் மொதக்கொண்டு ஒங்கிட்ட குடுத்துர்றே….ஒனக்கு ஒரு சங்கட்டமும் வராது...' என்று திருப்பி திருப்பி சொன்னது....  ,

'இவ இன்னாரு சம்சாரம்னு சொன்னது போயி, இன்னாரு மொத சம்சாரம்னு சொல்ல வச்சுட்டீங்க..... இனிமேப்பட்டு எப்படி இருக்க?... ஊரு முன்னாடி பேச்சுப்பட்டு போச்சு... மகராசனா போயி இருங்க..... அடுத்தவ புருசன்னு ஆனப்புறம் எனக்கென்னா இருக்கு?....' என்று  நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டு, ஊர்ப்பெரியவர்களின்  முன் அம்மா விலக்கு வாங்கிக்கொள்ள, பேச நா எழும்பாமல், விழிகளில் நீர் திரள நின்றது.... எல்லாம் தொடர்ந்து நினைவு வந்தது.

கடைசியாக எப்போது பார்த்தேன்?.

அம்மாவோடு நான் கிளம்பிய போது, மெல்ல என் கை பிடித்து அழுத்தி... 'அம்மாவ பாத்துக்கம்மா....' என்று சொன்ன போதா….. அப்போதுதானிருக்க வேண்டும்.

படிகளைக் கடந்து உள்ளே வந்தவர், நின்றிருந்த என்னைப் பார்த்ததும், விழிகளில் வியப்பு மின்ன 'மலரூ..... நீயாப்பா.... ' என்று முகமெல்லாம் விகசிக்க அருகில் வந்தார்.  அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்ததும் சட்டென்று முகம் மாறினார். 

கொஞ்சம் சமாளித்து, 'நல்லாருக்கியா சரசு...?' என்றார் அம்மாவைப் பார்த்து...

அம்மா 'ம்' என்றதும், 'என்னா படிக்குறப்பா?' என்றார் என்னிடம். 'டாக்டருக்குப் படிக்குறா.... கடசி வருசம்.'  என்று அத்தை பதில் சொல்ல, 'பேசமாட்டாயா?' என்பது போல என்னைப் பார்த்தார்.

'என்னா திடீர்னு?' நேரடியாக அம்மா விஷயத்துக்கு வர... சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின் மெல்ல 'அதுக்கு ஒடம்பு சரியில்ல.... கான்சர்னு சொல்லீட்டாங்க.... குணப்படுத்திரலாம்கிறாக...ஆனா... அப்படித் தெரியில... ரண்டு மூணு வருசமா அது படுற பாடு சகிக்கல... 'மாமா, ஒன்ன ஒங்குடும்பத்துலருந்து பிரிச்சது தப்புத்தே... அன்னைக்கே நா மன்னிப்பு கேட்டுருக்கணும்.... செய்யல.... என்னக் கூட்டீட்டுப் போ... அத்தகிட்ட நாங் கால்ல கைல வுழுந்தாவது ஒன்ன சேத்து வக்கிறே... இல்லாட்டா.... எங்கட்ட வேகாது'ன்னு கதறுது.’ என்றார்.

அத்தையின் முகத்தில் அலமறுதல் தெரிந்தது. பெற்றவள் அல்லவா?

அம்மா, 'அதான் சரிபண்ணிறலாம்னுட்டாங்க இல்ல...' என,

'எங்களுக்குன்னு ஆரு இருக்கா?, அக்காவும் ஒன்னோட வந்திருச்சு. ஒடம்பு சரியானாலும் எத்தன நாளு இப்படியே ஓட்டுறது? எனக்கு புள்ளங்கன்னு இவுங்க ரெண்டு பேருந்தான... நீ புடிசாதனயா வந்துட்ட.  ஊர வுட்டும் வந்தாச்சு...அடிக்கடி  பாக்கக்கூட‌  முடியாம போச்சு...'

அம்மா அர்த்தத்துடன் என்னைப் பார்த்து சிரித்தாள். ‘ஊரவுட்டு’ன்னா கண்காணாத தூரத்திலேயே இருந்தோம் பார்க்க முடியாமல் போனதற்கு...பக்கத்து டவுனில் தானே!!

'நீங்களா தேடிக்கிட்டது தான இது..'

'நா ஒங்கள வேண்டான்னு சொன்னேனா... எம்புட்டு கெஞ்சுனே..... ஒனக்கு ஒங்கௌரவத்த விட்டுக் குடுக்க முடியல...' 

‘நீங்க மட்டும்?!!. பெத்த புள்ளங்களக் கூட பாக்க வராம இருந்தீங்கல்ல?

‘அது ஒனக்குத் தெரிஞ்சு பாக்க வரல்ல... அடிக்கடி இல்லன்னாலும், மாசத்துல ஒரு நா  அதுங்க பள்ளிக்கூடம் போக வரச்சொல்ல அதுங்களுக்கே தெரியாம பாத்துக்கிட்டுத்தான் இருந்தே. எங்க அதுங்கள நாம்பாக்குறது ஒனக்குத் தெரிஞ்சா பெரச்சனையாயிரும்னுதான் ஒளிஞ்சு நின்னு பாத்தே. மலரு சடங்கான அன்னிக்கு நீ அதக் கூட்டிட்டு ஸ்கூல்ல இருந்து வந்தபோது நா பக்கத்து கடயிலருந்து பாத்துட்டுதா இருந்தே. நீ எனக்கு சடங்கு பத்திரிக அனுப்பலன்னாலும், வேலு கிட்டயிருந்து பத்திரிக வாங்கி,  அது போட்டோவ நிதக்கும் பாக்குறே.’

மடியிலிருந்து அழுக்குப் பத்திரிகையை உருவிக்காட்டினார். அம்மா திகைப்பது தெரிந்தது.

‘போன ரண்டு மூணு வருசமா,  அது கூட ஆசுபத்திரி அது இதுன்னு அலஞ்சுதான் வந்து பாக்க முடியாம போயிருச்சு...’

'நடந்தது நடந்து போச்சு... இப்ப என்னா சொல்லுங்க’

'இல்ல.. நா ஒங்கூட இங்க இருக்கே...   இல்லாட்டா...'

'இல்லாட்டா...?' அம்மாவின் குரலில் கோபம் தெரிந்தது.

'இங்கிட்டு பக்கத்துல வீடு பாத்து வந்திர்றோம்!'

'வேல?' அத்தை கேட்க, 'வி.ஆர்.எஸ் கொடுத்திரலாம்னு இருக்கேன். அது உடம்புக்கும் வேலைக்குப் போக முடியாது' என்றார் அப்பா.

'மிந்தி, அது அழுவுதுன்னு கல்யாணம் கட்டுனேன்னீங்க.. இப்பயும் அது அழுவுதுன்னு வர்றேங்கிறீங்க....'

'அது அழுவுதுன்னு வரல.  இன்னமேப்பட்டு தூரமா இருக்க சரிவராது. எனக்கும் வயசாச்சு. அதுக்கு என்னமாச்சும் ஆயிப்போச்சுன்னா... எல்லாம் இருந்தும் இல்லாம நா எப்படி இருக்குறது?'

'இது வரைக்கும் எப்படி இருந்தீங்களோ அப்படி' …அம்மாவின் பேச்சு அப்பாவைக் கோபப்படுத்தியது.

அத்தையின் பார்வை கெஞ்சுதலாக ஆகியிருந்தது.

‘என்னா பேசுற? கொஞ்சமாச்சும் இத்தன வருசத்துல கோவம் கொறஞ்சு எரக்கப்படுவன்னு தா வந்தே. இப்பயும் இப்படிச் சொன்னாக்க என்ன செய்யுறது?. ஒனக்கு புருசன் வேண்டான்னா வுடு. நா ஒன்ன ஒரு தொந்தரவும் பண்ணல. புள்ளக என்ன பாவம் பண்ணுச்சு? அப்பென்னு நா ஒருத்த இருந்தும் அதுகளுக்கு ஒரு புரோசனமும் இல்லாம?

அம்மா சரேலென்று நிமிர்ந்தாள். 'அதுங்கள வளக்கக் கஷ்டப்படமட்டும் நா செய்யணும். அதுங்க வளந்தப்புறம் அப்பா உரிம கொண்டாட வருவீகளா?'

‘திருப்பியிம் சொல்லுறே. நானா வேண்டான்னே?. நீ தான போன?.

'அப்ப நீங்க செஞ்சத சகிச்சுட்டு, வேற ஒருத்திக்கிட்ட எல்லா உரிமயயும் தூக்கிக் கொடுத்துட்டு, அவ பிச்ச போடறது வாங்கிக்கிட்டு ஒங்ககூட இருந்தா நா உத்தமி. இல்ல?'

'அப்படி இல்ல சரசு..' அப்பா நிதானத்துக்கு மாறினார். பேச்சில் அழாக்குறை தெரிந்தது. ‘இதப்பாரு... இதுவரக்கும் சரி. ஆனா, நாளக்கு மலருக்கு ஒரு கல்யாணங்கட்டணுன்னா கேப்பாகல்ல அப்பா எங்கன்னு? என்னா சொல்வீக?. இப்ப  அக்கம் பக்கத்துல‌ நா வெளிநாட்டுல இருக்குறதா சொல்லியிருக்கீகன்னு கேள்விப்பட்டே... கல்யாணத்துக்கு வரணுன்னா என்னா பண்ணுவீக?’.

இருநாட்களுக்கு முன் வீடு வந்த நெருங்கிய‌ உறவுக்காரப் பெண்மணி, தன்னிடம் ஒரு நல்ல மாப்பிள்ளை ஜாதகம் இருப்பதாகவும் நல்ல பெண்ணாகத் தேடுவதாகவும் சொன்ன கையோடு, பேச்சோடு பேச்சாக‌ 'ஒன் மகளப்பத்தி சொல்லலாமுன்னா அப்பா என்ன செய்றாருன்னு கேப்பாகளேன்னு சொல்லல..' என்றது எனக்கு நினைவுக்கு வந்தது.

 அம்மா ஒரு நிமிடம் மௌனமானாள். 'எல்லாம் சொல்லித்தான் மாப்புள தேடணும். ஊருல சொன்னது எங்க தற்காப்புக்காகச் சொன்ன பொய்யின்னு சொல்லணும். ஏன்னா, இப்ப நா ஒங்க‌ மொத சம்சாரங்கூட இல்ல.. முன்னாள் சம்சாரம்'.

'இதெல்லா சட்டப்படி நடந்துது இல்லயே.. ஊர் பஞ்சாயத்துதான... நாளக்கே போயி சொன்னா சேத்துவுட்டுருவாங்க. நான் பெரியண்ணன பாத்து பேசிட்டே... இத்தன வயசுக்கப்புறம் ஏன் தனியா இருக்கீங்க.  போயி பேசுங்க, சேத்துவுட்டுறேன்னு அவருதா சொன்னாரு...'

'ஓ.. எல்லா பேசிட்டுதான வந்துருக்கீங்க?'

நிலைமை எனக்கு சுத்தமாகப் புரிந்தது. அப்பா வயதான காலத்திலாவது விண்டு போனதை ஒட்டவைக்கப் பிரயத்தனப்படுகிறார்.

'இத்தன வருசத்துக்கப்புறம் நீங்க எங்ககூட வந்தா கேக்குறவங்களுக்கு என்ன பதில் சொல்றது?'

'வெளிநாட்டுல வேல பாக்குறதாதான சொல்லியிருக்கீக..... வந்துட்டேன்னு  சொல்லுங்க'

'ஒங்ககூட இருக்குறவள‌ என்ன சொல்லுறது?'

'அது பெரச்சன இல்ல. ஒறவுக்காரப்புள்ள, ஒடம்பு முடியல, புள்ளகுட்டியு இல்ல.  புருசெ வூட்டுல அனுப்பீட்டாக. நாங்க தான் நாதி அதுக்குன்னு சொல்லிரலாம். இது நாஞ்சொன்னதில்ல. அதுவே சொல்லுச்சு.'

தன் தவறுக்குத் தண்டனையாக, யாருமற்ற அனாதையென்ற சொல்லை வலிய‌ ஏற்கிறாள் அத்தை மகள் என்று புரிந்தது. மரணம் ஒரு மிகப்பெரிய ஆசான். அது வருவது நிதர்சனமாகும் போது மனம் எப்படி புடம் போட்ட தங்கமாகிவிடுகிறது!!!.

அம்மா ஏதும் பதில் பேசாமல் எழுந்து போனாள். அத்தை சமையல் கட்டில் தஞ்சம் புகுந்தாள். அப்பா,  இனி செய்வதற்கு ஏதுமில்லா பாவனையில் கூடத்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.


நான் வெளியில் போய் டியூஷனில் இருந்து தம்பியைக் கூட்டி வந்தேன். உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு மாற்றத்தை உள்ளுணர்வு உணர்த்தியது. டைனிங் டேபிளில் அப்பா சாப்பிட்டுக் கொண்டிருக்க, அத்தையைத் தேடினேன்.

சமையல் கட்டுக்குள் போனதும், அத்தை என்னிடம் மெதுவாக 'அம்மா, அப்பாவ இங்க வந்து இருக்கச் சொல்லிருச்சு. வேற ஏரியாவுல வீடு பாத்துரலாம்னுச்சு. கொஞ்சம் பெருசா, இன்னும் ரெண்டு ரூம்பு இருக்கா மாதுரி.. வீடு பாத்ததும் வந்துருவாங்க...' என்று விட்டு என்னை ஏறிட்டாள். கண்கள் சிவந்து, முகம் வீங்கி இருந்தது. கூடவே நான் ஏதாவது மறுத்து விடுவேனோ என்கிற பயமும் தெரிந்தது.

'அம்மா எங்க?..' 

'கொல்லக்கட்டுல..., ஆத்தா... ஒங்களுக்கு ஒரு எடஞ்சலும் நா வரவுடமாட்டே... நானே பூரா பாத்துக்குறே... பின்னாடி ஒரு ரூம்பு கொடுத்தாக்கூட போது...அதுபாட்டு இருந்துரு.. பெத்துப்புட்டே..... என்னா செய்ய?' அழுகிறாளா தெரியவில்லை.

கொல்லையில், மாடிப்படிக்கட்டில் அம்மா வானம் பார்த்து அமர்ந்திருந்தாள். நான் போய் தோள் தொட்டதும் திரும்பினாள். 

'அத்த சொல்லுச்சா?'

நான் தலையாட்டியதும் என் கையைப் பற்றினாள். நான் அவள் கையை எடுத்து என்னுடையதில் பொதிந்தேன். லோகு ஓடி வந்து 'நானூ...' என்று அம்மாவின் அருகில் அமர்ந்தான். நான் இருவரையும் அணைத்துக் கொண்டேன்.  மெல்ல அம்மாவின் தலையை வருடிக்கொடுத்தேன்.
===================================
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது சிறுகதைகள்.காம் தளத்திற்காகவே எழுதப்பட்டு அதில் வெளிவந்தது.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!

10 கருத்துகள்:

  1. குழந்தைகளுக்காக விட்டுக் கொடுத்தல்...

    // மரணம் ஒரு மிகப்பெரிய ஆசான். அது வருவது நிதர்சனமாகும் போது மனம் எப்படி புடம் போட்ட தங்கமாகிவிடுகிறது...! //

    உண்மை...

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான படைப்பு.

    ”மாறியது நெஞ்சம் ....
    மாற்றியவர் யாரோ?
    காரிகையின் உள்ள்ம் .....
    காண வருவாரோ?”

    என்ற அழகான பாட்டு.

    “பண்மா ? பாசமா? என்ற திரைப்படத்தில் வருவது.

    அதுபோன்ற தலைப்புக்கொடுத்துள்ளீர்கள்.

    இங்கு மாறியது நெஞ்சம் .... மாற்றியது கேன்சர் ..... ஆக உள்ளது.

    >>>>>.

    பதிலளிநீக்கு
  3. ஒரு பெண் தவறாக முடிவெடுப்பது. அவளைத் திருத்த வேண்டிய ஆண் ஏதேதோ நொண்டிச்சாக்கும் சமாதானங்களும் சொல்லி, தனக்கே உள்ள சபலத்தால், அவளை இரண்டாம் தாரமாக ஏற்பது, அதனால் ஒவ்வொருவரும் படும் கஷ்டங்க்ள், மன வருத்தங்கள், சந்திக்கும் அவமானங்கள், பெண்ணாய்ப் பிறந்துவிட்ட மூத்த மனைவியின் போராட்டங்கள், நடுவில் குழந்தைகள் பாடு திண்டாட்டமாவது, என ஆங்காங்கே கதை அசத்தலாகக் கொண்டு போகப்பட்டுள்ளது. ஸ்பெஷல் பராட்டுக்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. நியாயமில்லாமல், இரண்டாம் தாரமாகத் தன் பெண்ணையே மணந்துவிட்ட தன் தம்பியைத் திட்டித்தீர்த்து, ஒதுங்கி வந்து இவர்களுடன் வாழும் கதாபாத்திரமான அத்தை விசித்திரமாகத் தோன்றுகிறாள், எனக்கு.

    படத்தேர்வும் மிக அருமை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று பின்னூட்டங்கள் இட்டு தங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்த தங்களுக்கு என் நெஞ்சார்ந்த‌ நன்றிகள்.

      நீக்கு
  5. ///தன் தவறுக்கு தண்டனையாக, யாருமற்ற அனாதை என்ற சொல்லை வலிய ஏற்கிறாள் அத்தை மகள்.//// என்ற வரிகள் கதையில் நேரடியாக வராத இந்த அத்தைமகள் கதாபாத்திரத்தின் குணத்தையும் கதை சொல்ல வருவது என்ன என்பதைடும் அழகாக எடுத்து வைக்கிறது.

    தறுதலை தனமாக நடந்த தன் மகனை விட்டு பிரிந்து மருமகளுடன் வந்த அத்தை பேசும் வார்த்தைகளும் அதன் பின் கடைசியில் பெத்த மனம் பித்தாகி தன் பேத்தியிடம் பேசும் வார்த்தைகளும் நம் தமிழர்களுக்கே உரிய கோபம், பரிவு இரக்கம் இவைகளை கதையில் கொண்டு வந்தது அருமை.

    கதையில் அத்தனை கதாபாத்திரங்களும் நெஞ்சை தொடுகின்றன. நல்ல கதை பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை ஆழ்ந்து படித்து ரசித்து பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  6. மாறியது நெஞ்சம் ...!

    மாற்றம் ஒன்றே மாறாதது ...!

    பதிலளிநீக்கு