ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

MINI STORIES, MAAN SOLLUM RAGASIYAM..சின்னஞ்சிறு கதைகள் 1....மான் சொல்லும் ரகசியம்.....


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

வாழ்க்கைக்குத் தேவையான அற்புத அறிவுரைகள் அடங்கிய சின்ன சின்ன கதைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம். நான் படித்த, கேட்ட, தெரிந்து கொண்ட கதைகளும், சொந்தமாக எழுதியவையும் இதில் அடங்கும். அந்த வகையில், ஒரு கதை இதோ உங்களுக்காக...

அது ஒரு அடர்ந்த காடு. பாய்ந்து வேகமாக சுழித்தோடும் ஆறு, செங்குத்தான பாறைகள், பாதைகள், கொடும் விலங்குகள், கானம் பாடும் பறவைகள், அழகிய மலர்கள் பூத்து மணம் பரப்பும் செடிகள், நெடிதுயர்ந்த மரங்கள் என, ஒரு காட்டிற்குரிய  அனைத்தும், குறைவற நிறைந்திருந்தது.

வேகமாக ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையில், கர்ப்பமாக இருந்த மான் ஒன்று, தட்டுத் தடுமாறி நடந்து வந்தது. அதற்கு பிரசவ நேரம். பசும் புற்கள் நிறைந்த பள்ளமான இடம் ஒன்றை, ஆற்றோரத்தில் கண்ட மான், அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்த இடம், குட்டியை ஈனுவதற்கு பாதுகாப்பானது என்ற எண்ணம் அந்த மானுக்கு.

புதரை நெருங்கும் நேரத்தில் அந்த மானுக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது!.

வலியோடு புதரை நெருங்கும் நேரத்தில் திடீரெனத் தோன்றியது விபரீதம்!

திடீரென்று கண்ணைப் பறிக்கும் மின்னலொன்று தோன்றியது. ஆம்!. வானில் கருமேகங்கள் சூழ ஆரம்பித்திருந்தது. அந்த மின்னலின் விளைவாக, புதரின் மேற்புறத்தில் காட்டுத்தீ தோன்றி விரைவாகப் பரவ ஆரம்பித்தது.

மிரண்ட மான், கீழ்நோக்கி நகரத் துவங்கியது. ஆனால் ஐயோ!!. கீழே ஆற்று நீரின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்திருந்ததைக் கண்டது மான். இடது புறம் திரும்பியது. அங்கும் ஒரு ஆபத்து. ஒரு வேடன், தன் அம்பால் அந்த மானை நோக்கிக் குறிவைத்தான்.

வலது புறம் திரும்பியது மான். அங்கு ஒரு சிங்கம்,மிகுந்த பசியோடு இந்த மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.

நாற்புறமும் ஆபத்து!

அந்த மான் இப்போது என்ன செய்யும்?. அது உயிர் பிழைத்து, நல்ல முறையில் குட்டியை ஈனுமா? அல்லது மானும், வேடனும், சிங்கமும் காட்டுத் தீயில் பொசுங்குமா?.

நெஞ்சு பதறும் இந்த வேளையில் அந்த மான் இப்போது என்ன செய்தது தெரியுமா?

அமைதியாக, மெல்ல நடந்து அந்த புதரை நோக்கிச் சென்று, தன் முழு கவனத்தையும், ஒரு புதிய உயிரை இந்த மண்ணுக்குக் கொண்டு வருவதில் செலுத்தியது. வேறெதிலும் அதன் கவனம் பதியவில்லை.

ஆனால், கண்ணிமைப்பதற்கும் குறைவான பொழுதில் பின்வரும் சம்பவங்கள் நடந்தேறின.

கண் கூசச் செய்யும் மற்றொரு மின்னலொன்று விண்ணை கிழித்து வந்து, வேடனின் கண்ணைப் பறித்தது. அதனால் குறி தவறிய வேடனின் அம்பு, சிங்கத்தைக் கொன்றது. கருமேகக் கூட்டங்கள் பொழிந்த மழையால் காட்டுத் தீ அணைக்கப்பட்டது.

மான் பத்திரமாகக் குட்டியை ஈன்றது. மிக மகிழ்வுடன், குட்டியை நாவால் தடவிக் கொடுத்தது.

நம் வாழ்விலும் இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும். நாற்புறமும் எதிர்மறை எண்ணங்கள், எதிரான போக்குக் கொண்ட மனிதர்களை சந்திக்க நேரும். சில சமயம் அவற்றின் வேகம், நாம் நினைப்பதை விடவும் கூடுதலாக இருக்கலாம்.

ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும், 'தப்பிக்க இயலாது' என்றோ, 'எல்லாம் முடிந்தது' என்றோ எண்ணாது, கைக்கருகில் இருக்கும் கடமையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். நிலையில்லாத வாழ்வில், எல்லா சூழலும் மனிதர்களும் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டியவையே. நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருந்தால், நம்மை மீறிய ஒரு சக்தி, அது இறை நம்பிக்கை உடையவர்களுக்கு இறைவன், இல்லாதோருக்கு இயற்கை, நம் நல்வினை என்று ஏதோ ஒன்று நிச்சயம் நம்மைக் காப்பாற்றும் என்பது சத்தியமான உண்மை!!

மான், அந்த சந்தர்ப்பத்தில், வாழ்வின் மதிப்பைப் புரிந்து கொண்டு, தன் முழு கவனத்தையும் குட்டியை ஈனுவதில் செலுத்தியதைப் போல், கடமையைச் செய்வதில் முழுகவனத்தையும் செலுத்த வேண்டும். கீதை சொல்வதும் இதைத்தானே!!

வாழ்வு மகத்தானது. அதன் ஒவ்வொரு கணத்தையும்,  அது தரும் திருப்பங்களையும் அனுபவித்து வாழ கற்பதோடு, அது தரும் அனுபவங்களை நேர்மறை சிந்தனையோடு ஏற்பவருக்கு, வாழ்வே ஒரு திருவிழா!!

பொன்னான இந்த சிந்தனையோடு,

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

7 கருத்துகள்:

  1. நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருந்தால், நம்மை மீறிய ஒரு சக்தி, அது இறை நம்பிக்கை உடையவர்களுக்கு இறைவன், இல்லாதோருக்கு இயற்கை, நம் நல்வினை என்று ஏதோ ஒன்று நிச்சயம் நம்மைக் காப்பாற்றும் என்பது சத்தியமான உண்மை!!

    காலம் பொன் போன்றது

    கடமை கண் போன்றது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் அம்மா!

      நீக்கு
  2. /// கைக்கருகில் இருக்கும் கடமையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்... ///

    சிறப்பான கதையுடன் கருத்துக்கள் அருமை... வாழ்வே ஒரு திருவிழா...!

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அம்மா...

    தங்களை இன்றைய வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
    நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள இணைப்பின் வழியாக சென்று பாருங்கள்...

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4216.html

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள், 'தொகுப்பு' வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். சென்று பார்த்து விட்டேன்.

      நீக்கு
  4. ///நம்மை மீறிய ஒரு சக்தி, அது இறை நம்பிக்கை உடையவர்களுக்கு இறைவன், இல்லாதோருக்கு இயற்கை, நம் நல்வினை என்று ஏதோ ஒன்று நிச்சயம் நம்மைக் காப்பாற்றும் என்பது சத்தியமான உண்மை!!///

    குட்டிக்கதையில் எத்தனை பெரிய உண்மை. சபாஷ் சகோதரி .

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு