வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியப் பெண்களின் பங்கு.!..


இந்திய சுதந்திரப் போரில், பெண்களும் பங்கு கொண்டதை நாம் அறிவோம்.. ஆயினும், வெளியுலகத் தொடர்பு அதிகம் இல்லாதவர்கள் என்று கருதப்படும் இஸ்லாமியப் பெண்களும், இந்தப் போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். இவர்களது வீரமும் நாட்டுப் பற்றும் மிகவும் போற்றப்படவேண்டிய ஒன்று.

இத்தகைய வீரப் பெண்மணிகள் நால்வரைப் பற்றி, இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பேகம் ஹஸ்ரத் மஹல்;

நவாப் வாஜித் அலி ஷாவின் மனைவி பேகம் ஹஸ்ரத் மஹல். 1820ல் ஃபைஸாபாத்தில் பிறந்த இவர்,  1857ல்  கிழக்கிந்தியக் கம்பெனியை தீரமுடன் எதிர்த்தவர். தம் கணவர், கல்கத்தாவுக்கு கடத்தப்பட்டதும், தமது அவாத் நிஜாம் (லக்னோ) மின் நிர்வாகப் பொறுப்பேற்றார். முதல் இந்திய சுதந்திரப் போரில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தம்மை எதிர்த்த திறமையான ஆங்கிலேயத் தளபதி , சர் ஹென்றி லாரன்ஸை முறியடித்து சுட்டுக் கொன்றார் பேகம். அவரை அடுத்து வந்த, ஜெனரல் ஹாவ்லாக் என்பவரையும் தோற்கடித்தார். ஆனால், சர் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்ட இவர் 'மன்னிப்புக் கோரினால் விடுதலை' என்ற கோரிக்கையை உறுதியுடன் மறுத்து, தப்பியோடி, தம் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

1879ல் மறைந்த இவரது கல்லறை, நேபாளத்தில், காட்மண்டுவில் இருக்கும் ஜாமி மசூதிக்கருகில் இருக்கிறது. இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, லக்னோவில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு, 'பேகம் ஹஸ்ரத் மஹல் பூங்கா' என்று பெயரிடப்பட்டதோடு, அங்கு ஒரு நினைவு ஸ்தூபியும் எழுப்பி மரியாதை செய்யப்பட்டது.

ஆஸிசன்

இவர் லக்னோவில், 1832ம் ஆண்டு பிறந்தார். ஜூன் 4, 1857ல்,  சுதந்திரப் போரில் தம்முடன் கலந்து கொள்ளுமாறு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நானா சாஹேப் விடுத்த வேண்டுகோளால் ஈர்க்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி, சுதந்திரப் போரில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பெண்களுக்கான பிரிவை திறம்பட நடத்திய இவர், போர்க்கலையின் நுணுக்கங்கள் அனைத்தும் அறிந்த தீரப் பெண்மணி. ஆயுதங்களை கையாளுவதில் திறமை மிக்க இவர், தமது படையிலிருக்கும் பெண்களுக்கு பயிற்சியும் அளித்தார். ஆங்கிலேயர்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை ரகசியமாகத் திரட்டி, தம் தலைமைக்கு உடனுக்குடன் செய்தி அனுப்பி வந்தார். இறுதியில்,  ஜெனரல் ஹாவ்லாக்கினால் பிடிபட்ட போதும், மன்னிப்புக் கேட்டு விடுதலையடைய மறுத்து, சித்ரவதையுடன் கூடிய மரணத்தை விரும்பி ஏற்ற வீராங்கனை இவர்.

ஜூலைகா பேகம்:

மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவி இவர். மிகவும் மனவுறுதி படைத்தவர் இவர். ஆசாத், தொடர்ந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்ததால், குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போதும், கலங்காமல் குடும்பத்தை நடத்தி வந்தார்.

ஆசாத், 1942ம் வருடம்,  ஒரு வருட சிறை தண்டனை பெற்ற போது, தன் கண‌வருக்குப் பதிலாக, தாம் வங்காள மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்களை முன்னின்று நடத்துவதாக காந்திஜிக்குக் கடிதம் எழுதிய தீரப் பெண்மணி இவர். கணவர் சிறை சென்றதை விடவும், நாட்டு விடுதலை பெரிதென எண்ணி,  சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகள் முடங்கி விடாமல் தொடர்ந்து நடக்க,  தன் முழுமையான பங்களிப்பை நல்கினார்.

அபாதி பானு பேகம்.. 

புகழ்பெற்ற, முகமது அலி, சௌகத் அலி சகோதரர்களின் தாய் இவர். மிக இளம் வயதிலேயே, சௌகத் அலி கான் என்பவருக்கு மணமுடிக்கப்பட்ட இவர், ஒரு பெண்ணும், ஐந்து ஆண்குழந்தைகளுமாக, ஆறு குழந்தைகளுக்குத் தாயானார்.  முப்பது வயதிலேயே கணவரை இழந்தாலும், மன உறுதியோடு குழந்தைகளை வளர்த்தார். தன் நகைகளை அடமானம் வைத்து, குழந்தைகளைப் படிக்க வைத்தார்.

1921ம் வருடம், டிசம்பரில் அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்ட செய்தி வந்த போது, அதை அமைதியாகக் கேட்டார் பேகம். மேலும், முகமது அலி மன்னிப்புக் கேட்பாராயின் விடுவிக்கப்படுவார் என்ற செய்தி வந்த போது, 'அவன் இஸ்லாத்தின் மகன். ஒரு போதும் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட மாட்டான்' என்று வீரமுடன் கூறினார்.

காந்திஜி, 'இந்த வயதான பெண்மணிக்குள், ஒரு இளவயதுப் பெண்ணின் வேகம் இருக்கிறது!' என்று புகழ்ந்துரைத்திருக்கிறார். கதர் துணிகள் பயன்படுத்துவதை ஊக்குவித்த இவர்,   தம் கையால் நெய்த கதர் ஆடைகளையே பயன்படுத்தினார்!.

மன உறுதி மிக்க இந்தப் பெண்களின் வாழ்வு, நமக்குள்ளும் ஒரு நம்பிக்கை விதையை ஊன்றுகிறது. பெண்கள் வலிமையானவர்கள் தான் எப்போதும்!..

இந்தக் கட்டுரை, வல்லமை குழுமத்தில் இன்று வெளியாகியிருக்கிறது.


அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் .பயணத்தில் இருந்ததால் தாமதமாகிவிட்டது.

    அறிந்திராத செய்தியை அறிய தந்தமைக்கு பாராட்டுக்கள்.இந்திய சதந்திர போராட்டத்தில் வங்காளத்து இஸ்லாமிய மக்களும் சீக்கிய மக்களும் காந்தியின் அகிம்சையை ஒதுக்கிவிட்டு ஆயுதம் ஏந்திய மக்களில் இவர்களே பெரும்பான்மையோர்.

    தென்னிந்தியாவிலும் ஆரம்பகால விடுதலை போரில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோர் அந்த வகையில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே.

    இந்திய சுதந்திர போரில் பலரது தியாகங்கள் வெளிவராமலேயே போய்விட்டது. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்கள் ஆங்கிலேயேருக்கு எதிராக கப்பல் வாங்கி விட்டபோது பல லட்சம் பணம் கொடுத்து அவருக்கு உதவியது அவருக்கு உற்ற நண்பராக இருந்த அவரின் இஸ்லாமிய நண்பர் தான்.

    ஆனால் இங்கு கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள இஸ்லாமிய பெண்களின் பங்களிப்பு இதுவரை அறிந்திராத செய்தி .

    இந்த பெண்களுக்கும் போராட்டக்குணமும், வீரமும் ,துணிச்சலும் வந்தது என்றால் அதை தந்தது இந்திய மண், இந்தியா என் தேசம், நான் இந்தியன் எனும் உணர்வு தான் தவிர வேறு எதுவுமில்லை.

    அந்த வீரத் தாய்களுக்கும் அவர்களை அறியத்ந்த சகோதரி பார்வதி அவர்களுக்கும் நெஞ்சுயர்தி சிரம் தாழ்த்தி என் வணக்கங்களை சமர்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் உணர்ச்சிமிக்க கருத்துரைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி சகோதரரே!.. நாம் எல்லோரும் ஒரு நாட்டு மக்கள். ஒரு தாயின் பிள்ளைகள்!.. இறைவன் நமக்கு நல்வழி காட்டியருள்வான்!..

      நீக்கு