சகோதரர் தனுசுவின் இரு சூழ்நிலைக் கவிதைகளை உங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
என் பள்ளித் தோழியே
நீண்ட நாள் பட்டு
உன் முகத்தைப்பார்த்தேன்!
கண்ணில் ஆனந்த நீர் பட்டு
நெஞ்சில் இனித்தாய் மீண்டும்!
நீ நலமா?
காலமும் நினைவும்
கால்வலி பார்க்காமல்
நம்மை கடந்து ஓடிவிட்டது!
இந்த தொய்வில்லா ஓட்டத்தில்
காலம் நம்மை பிரித்து
நினைவு மறதியானது!
உன் நினைவை
இப்போது மீட்டதும் அதே காலம்!
நான்
அந்த காலத்திற்கே வருகிறேன்!
நமக்கான சொர்க்கமாய் இருந்த
நம் பள்ளிக்காலம்
ஒரு பனி பொழிந்த காலம்!
தளிர் முகமும்
வெளிர் மனமும்
நம் சொந்தமாய் இருந்தது!
கனவுகளும் கதைகளும்
கையில் இனித்தது!
பயணமும் ஒரே பாதையானது!
அந்த பாதையில்
இலக்கு தெரியாமல்
பொருள் தெரியாமல்
கண் போன போக்கில் கால் போய்
மனம் போன போக்கில் இருந்தோம்!
ஆனால்
காலம் அதை புரியவைத்தது!
இனித்ததெல்லாம் புளித்தது!
அந்த புளிப்பை புரிந்துகொண்ட போது
பாதை மாறி
பயணமே பிரிந்தது!
இனிய தோழியே
நட்பின் மோகன இசையை பாடி சிரித்தோம்!
காலம்
இப்படித்தான் நடத்தும்
என தெரிந்திருந்தால்
பத்தோடு நாமும் சேர்ந்திருக்கலாம்!
சொல்லாமல் வந்த
சோகமும் துக்கமும்
சொல்லாமலேயே போனது!
அன்று
அர்த்தமின்றி ஆயிரம் பேசினோம்
இன்று பேச
ஆயிரம் இருந்தும் அர்த்தமுடன் மௌனம்!
இன்று நினைத்தாலும்
இனிக்கிறது அந்த காலம்!
காலம் கனிந்தால் மீண்டும் சந்திப்போம்!
உன்னை பார்த்தது முதல்
கனன்றுக்கொண்டு இருந்த நினைவுகள்
இங்கே குடிவந்து விட்டது!
உருவத்தில்
நீ
'செந்தாமரை"
பருவத்தில்
நீ
"செல்வி"
நீ
நலமும் வளமும் பெற
நாளும்
என் பிரார்த்தனை உண்டு!
பழைய நினைவுகள் உதித்ததால்
அம்பு பூட்டிய வில்லானது நெஞ்சு!
விரைப்பு வேதனையாவதால்
விடுவிக்கிறேன் வில்லிலிருந்து அம்பை!
இனி
இயல்பு நிலைக்கு தனுசு வரும்!
-தனுசு-
ஆராதனையில் ஒரு ஆரோகணம்
காய்ந்து சருகாய்ப்போன
பூ ஒன்று
மீண்டும்
பூத்தது போல் ஒரு உணர்வு
அந்த
முகத்தை பார்த்தவுடன்!
அவளா?
உருவம் மாறி
உருக்குலைந்து
உடைந்து நிற்பது
அவளா?
என்னை
ஆரம்பத்திலேயே மறுத்தாளே
அவளா?
இது
சாத்தியப் படாது என்றாளே
அவளா?
இருமனம் இணையலாம்
இரு மதம் இணையுமா?
என் காதலை மறுத்தாளே
அவளா?
தீவிரமாய் துடிக்கிறாய்!
"தீவிரவாதி எனும்
அடைமொழி இடிக்கிறதே" என்றாளே
அவளா?
என் தொல்லை இனித்து
சுட சுட சங்கு வெளுத்தது!
என்னையும் ஏற்று
என் காதல்
ஆரோகணம் அடைய வைத்தாளே
அவளா?
ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல
அவசரக்காரனுக்கும் புத்தி மட்டு!
தவளை மட்டுமல்ல
ஆசையும் தன் வாயால் கெடும்!
என் வாயால் கெட்டு
ஊர் மெல்ல அவலானாளே
அவளா?
அந்த 'செந்தாமரை" மீது
சேர் பட்டு போக
ஊர் மாறி மறைந்தாளே அந்த "செல்வி"
அவளா?
அவளே!
இன்று அவளை
பழைய காதலி என்று
புறம் தள்ள முடியவில்லை!
பஞ்சம் வந்தால்
மஞ்சள் மேனியும் கருகுமா?
வெண்பாலும்
திரிந்து போகுமா?
புகை பட்ட புகைப்படம் போல்
தீ எரித்த திரி போல்
ஒளியில்லா குரலொலியில்
என் முன்னால் முன்னாள் உயிர்!
அவள் கண்ணில் படுவதுபோல்
கவனத்தை ஈர்க்கிறேன்!
அவளே எனக்கு செல்லமாய் சூட்டிய
"அமரா" எனும் பெயரை
உச்சரித்தாள்!
என்னுள் ஆயிரம்
மத்தாப்பூக்கள் பூக்கும் போது....
"என்னம்மா..." என்றொரு குரல்.
மீண்டும்
"அமரா" என உச்சரித்து
அவள் மகனை
வாடா என அழைத்தாள்
என்னை கவனிக்காமலேயே!
என் மடிக்கணினியில்
கடவுச்சொல்லாக
அவளின் பெயர் இருப்பதைப்போல்
அவள்
மடியில் பிறந்தவனுக்கு
என் பெயர் வைத்திருக்கிறாளே!
ஒரு ஆரோகணம்
அவரோகணம் ஆகாமல்
ஆராதனையில் இருக்கிறது
இரு வேறு நிலையில்!
வாழ்க அந்த ராகம்!
-தனுசு-
வெற்றி பெறுவோம்!!!
முதல் வருகைக்கு இனிப்பு எதுவும் உண்டா பார்வதி?
பதிலளிநீக்குதனுசுவின் இரண்டு கவிதைகளையும் படித்து ரசித்தேன். ரொம்ம்ம்மம்ப பீலிங்கோட எழுதியிருக்கார் என்று புரிகிறது!!!!!
//Uma said...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு இனிப்பு எதுவும் உண்டா பார்வதி//
யாரங்கே!!!. நம்ம மேலிடத்தின் வருகைக்கு இனிப்பு மட்டும் தருவதாவது?!!. ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாலான ஒரு ஆளுயர மாலையைக் கொண்டுவாங்க...
என் இரண்டு கவிதைகளையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு இரட்டிப்பு மகிழ்சி தந்த சகோதரி பார்வதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தேர்ந்தெடுத்து பதிவிட்ட படங்களும் பொருத்தமாக இருந்தன.
பதிலளிநீக்குUma said...முதல் வருகைக்கு இனிப்பு எதுவும்.......
பதிலளிநீக்குதாங்களின் வருகையே இனிப்பு. இதில் இனிப்பு எதற்கு தனியாக.
இனிய வருகைக்கு
வண்ணபூங்கொத்து தந்து
வரவேற்கிறேம்
வருக வருக!
ரசித்து இட்ட பின்னூட்டத்திற்கு நன்றி உமா.