புதன், 21 நவம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்.....அலறல் சத்தங்களின் இல்லம்


ராகங்கள் பதினாறு
ரோகங்கள் பலநூறு
இது நாம் அறிந்த வரலாறு!
நம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
இன்று 
நோய் வந்தால் 
தீரும் 
நாம் சேர்த்துவைத்த செல்வம்!

இதோ
இந்த மருத்துவ வளாகம்
இன்று
வியாபார நிலையம்!

உயிரா
உடலா
தாயா
சேயா
கடைவிரித்து விற்குது இந்த மருத்துவமனை
உறவுகளை
காசிருந்தால் மீட்கலாம் 
இது உண்மையில் வேதனை!

கை போனது
கால் போனது
கரு போனது
உரு போனது
கூடி நிற்குது ரத்தம் கேட்கும் பிரிவில்!

தீக்குளித்தது
பாலியல் களித்தது
காத்துக்கிடக்குது அவசரப் பிரிவில்!

இங்குள்ள பிரசவ அறை
சமயங்களில் 
சவங்களையும் பிரசவிக்கிறது!

இங்கு 
பணம் பத்தும் செய்யும்
பிணம் பிழைத்து எழும்!
நம் சினம் முற்றச் செய்து 
புதுவிதி கொண்டு சுழலும்
இந்த மருத்துவ உலகம்!

ஆண்டி என்றாலும் காசு
அரசன் என்றாலும் காசு
அது இல்லையெனில்
ஆண்டவனே என்றாலும்  தூசு!

பொன் நகை கொடுத்து
போராடுகிறார்
முடிவில் புன்னகையுமின்றி போகிறார்!

"கரணம் தப்பினால் மரணம்"
இது வித்தை.
இங்கு கட்டணம் குறைத்தால் மரணம்
இது என்ன விந்தை?

எம தர்மன் உலாவிடும் முக்கியச்சாலை
இந்த வைத்தியச்சாலை!
எம் தர்மம் பணசக்தி என்பதே 
இன்றைய வைத்திய மூளை!

மற்றவர் நலனை மதித்தால் 
பூக்கும் அழகிய கோலம்!
மற்றவர் பொருளை மதிப்பதால்
இங்கு
ஆவது அலங்கோலம்! 

இன்று
மனுஷனை மனுஷன்
சாப்பிடும் வளாகம்
இந்த
மருத்துவ வளாகம்!
அத்துமீறும் இந்த அதகளம்
மாற
தேவையா அதற்கும் ஒரு ரணகளம்?

நோய் மீட்டு காக்கும் ஈசனே...
நீ 
எம்மைக் காக்கும் இறைவனே
குறை கண்டு சொல்வதால்  
குற்றம் கொள்ள வேண்டாம் 
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே....

-தனுசு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக