திங்கள், 26 நவம்பர், 2012

THIRUVILAKKKU AKAVAL....திருவிளக்கு அகவல்

குத்து விளக்கு தெய்வாம்சம் பொருந்தியது. இதன் அடிப்பாகம் பிரம்மா,   நடுப்பகுதி விஷ்ணு, மேற்பகுதி சிவன் ஆகியவர்களின் அம்சமாகும். விளக்கில் ஊற்றும் நெய், திரி, சுடர் ஆகியவை முறையே, சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகியவர்களின் அம்சமாகும். ஆக, விளக்கை வழிபாடு செய்தால் சகல தேவர்களையும் வழிபாடு செய்த பலன் பெறலாம். ஐந்து முக தீபம் கோயில் கருவறையில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தைத் தரக் கூடியது. குத்துவிளக்கு பூஜை சகல நன்மைகளையும் தர வல்லது.

திருவிளக்கு அகவல் என்று போற்றப்படும் இந்தத் துதியைப் பெரும்பாலான இல்லங்களில் விளக்கேற்றும் சமயத்தில் பாராயணம் செய்கிறார்கள். அழகு தமிழில் அமைந்துள்ள இந்த அருமையான துதியைப் பாராயணம் செய்து வணங்குபவர்களுக்கு இறையருளால் எல்லா நலமும் கிடைக்கும். திருக்கார்த்திகை தீப தினத்தன்று இந்தத் துதியைப் பாராயணம் செய்து விளக்கேற்றுவது சிறப்பு.

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
சோதி மணிவிளக்கே  ஸ்ரீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே  காமாக்ஷித் தாயாரே
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளக்கு
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷண‌ங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன் முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணியாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
குடும்பக் கொடி விளக்கே குற்றங்கள் பொறுத்திடம்மா!
குறைகள் தீர்த்திடம்மா!! குடும்பத்தைக் காத்திடம்மா!
கற்பகவல்லித்தாயே வளமெல்லாம் தாருமம்மா!!
சகலகலாவல்லி நீயே! சகல வித்தைகளும் தாருமம்மா!!
அபிராமவல்லியே! அடைக்கலம் நீயே அம்மா!
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

வெற்றி பெறுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக