வியாழன், 27 டிசம்பர், 2012

ARUNACHALEESAR PATHIGAM,,,,,அருணாசலீசர் பதிகம்காப்பு - விருத்தம்

கண்ணாலும் வண்ணக் கமலனுங் காண்டற்குரிய
அண்ணா மலையாரடி மீதி - லொண்ணார்
துதியுரைக்க நாளுந் துணையா யன்பர்க்கு
கதியளிக்குந் தும்பிகன் காப்பு.

ஆசிரிய விருத்தம்

1. நினைவாகிமூல நிலையாகிநேச
நிஜரூபமான வடிவே
மனமாய்கை மூடியறிவே கலங்கி
மனமும் மயங்கி வெகுவாய்
இனமோடிருந்து வசதிக்குலைந்து
எமதூதர் ஓடிவருமுன்
மனவேகமாக அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

2. கயிலாயமேரு அதிலாறு வீடு
கரைகண்டதில்லை யொருவர்
வயிலான ஜோதி விளையாடும் வீடு
வெளிமாய்கை ஏதுமறியேன்
பயிலான கொம்பிற் பசுங்காயுமாகி
பழமாயுதிர்ந்து விழுமுன்
மனவேகமாக அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

3. நதியோடு தும்பை முடிமீதணிந்து
நலமான வெள்ளை விடைமேல்
பதியாயிருந்து  உமைபாதி கொண்ட
பரனேயுன் நாமமறவேன்
விதினாதனேவ எமதூதர்வந்து
வெகுவாதை செய்துவிடுமுன்
மதியேபுனைந்த அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

4. உற்றாருமில்லை யுறவில்லையாரு
முறை சொல்லி ஒப்பவரவே
பெற்றாருமில்லை மறை தேடுகின்ற
பிரானேயுன் நாமமறவேன்
கற்றாரு மேற்ற வடியாரிருந்து
தனியாயமர்ந்த கனியே
மற்றாருமில்லை அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

5. கொங்கைக் குரும்பை முலைமாதராசை
கொடிதான மோகமதனாற்
சங்கற்ப மென்று மறியாமல் வீணே
தடுமாறியாவி விடுமுன்
திங்கட்கொழுந்து முடிமீதணிந்த
சிவனேயுன் நாமம் மறவேன்
மங்கைக்கிரங்கும் அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

6. உருவானகாய மதிலாறு வீடு
உதிரங் கலந்த தேகம்
கருவாக நின்று புவிமீதில் வந்து
கபடேதுமொன்று மறியேன்.
குருவாகி நின்ற சிவஞானஜோதி
குருவேநின் நாமமறவேன்
மருவீசுசோலை அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

7. பணியாத கோயில் அணியாத நீறு
பசியாத சோறு தருவாய்
துணியான வாசி சிவஞான மோன
சுகமேயெனக் கருளுவாய்
தணியாத கோபமுட லோடிருந்து
சலியாத மாய்கை வெளியே
மணியாடு நாதர் அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

8. சூதாகி நின்ற சிவசூத்திரங்கள்
சுளுவாயமர்ந்த சுழியே
பாதாதி கேச முடிவோடிருந்து
படுகானிலாடு நடனம்
வேதாவு மாட மதியாட மூவர்
விளையாடி நின்ற வெளியே
வாதாடி நின்ற அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

9. அடிமூலவட்ட மதிலாறுதிட்ட
வதின் மேலிருந்த பரனே
துடியான சக்தி சிவரூபவல்லி
சுகமான வேதவடிவே
அடியார்களுள்ளத் தெளிவாய் விளங்கு
மரனே நின் நாம மறவேன்
வடிவான ஜோதி அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

10. கல்லால நிழலிலினி நால்வர் முன்பு
காணாத யோக நிலையைச்
சொல்லாது சொன்ன மெய்ஞ்ஞான மூர்த்தி
சுடராயிலங்கு மரசே
வல்லாள மன்னனரு மைந்தனாகி
வரு ஞானமான  வடிவே
வல்லானுகந்த அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

11. உரைதங்கி நின்ற உயிரெங்குமாதி
உலகெங்குமே ஞானவடிவாய்
கரை கண்டதில்லை வெகுகோடி காலங்
கலிகாலமாய் கையதனால்
இரைதேடியாசை பசியான் மெலிந்
துயிர் கண்டியங்கி விழுமுன்
வரை தங்கிநின்ற அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

 வெற்றி பெறுவோம்!!!!

1 கருத்து: