வெள்ளி, 15 நவம்பர், 2013

தனுசுவின் கவிதைகள்..தூக்கு!

சட்டம்
தன் கடமையை
செய்து முடித்தது

ஒரு தூக்குக்கயிறு
தன்
பசி முடித்து தணிந்தது

ஒரு வெற்றுடல்
இறுதி
சம்பிரதாயங்களை
சந்தித்தது

தினசரிகள்
தலையங்கம் தாங்கி
வந்தது
தொலைக்காட்சி
நேரலையில் தந்தது

சமூக தளங்கள்
விருப்பம் நிறைந்து
தொடர்ந்தது

குற்றம் செய்தவன்
தண்டிக்கப்பட்டான்
காவலன்
உயர்வு பெற்றான்
ஆனால்
தர்மம்........?

பித்துப்பிடித்து
பெற்ற வயிறு
நடு வீதியில் கதற
பொட்டிழந்த
உற்ற துணை
மார் அடித்துப் பதற

அங்கு
நாளைய கேள்வி
நரம்புகளை குடைந்தது
நம்பி பிறந்த
ரத்தங்களும் தவித்தது

அவர்களின் ஓலங்களுக்கு
நிவாரணமற்று போனது
அவர்களின் காலங்கள்
நிர்வாணமாய் தெரிந்தது

பெரும் தியானத்துடன் போகும்
தூக்கின் பிரயாணம்
இவர்களுக்கு
உலகம் இனி ஒரு
மயானம் என்றாக்கி போனது

மக்களை
நெறிபடுத்தும் நீதி
உயிர் நெரிக்கிறது
அவர்களை
செதுக்க வேண்டிய சட்டம்
சிதைக்கிறது

நியாங்கள்
நியாபகமற்று
பாடை கட்டி செல்வது யாரை?
காலம்
கண்ணீரை மட்டும்
காப்பு கட்டி செல்வது யாரை?

சட்டம் ஒரு இருட்டறை
அது காப்பதில்லை குருடரை என்பதா?
இந்த முறையற்ற செயலை
கண்டும் காணாமலிருக்கவே
கண் கட்டி வாழ்கிறது
அந்த நீதி தேவதை என்பதா?

-தனுசு-

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

3 கருத்துகள்:

  1. சிந்தக்க வேண்டிய கேள்விகள்...

    From Friend's L.Top...!

    பதிலளிநீக்கு
  2. கவிதையை பாராட்டிய நண்பர் T.T அவர்களுக்கும், வைகோ ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு