வெள்ளி, 8 நவம்பர், 2013

PARANGIRI VAZH PARANE...பரங்கிரி வாழ் ப‌ரனே!! (ஸ்கந்த சஷ்டி..8/11/2013)

அறுபடை வீடு கொண்ட ஆறுமுக வேலவனே
அறுவர் வளர்த்தெடுத்த ஆரமுதே!! சோதியனே!!
ஆறிரு தடந்தோளும் கூர் வேலும் கொண்டருளும்
அறுங்கோண அதிபதியே!! பரங்கிரி வாழ் பரனே!!

ஆறெழுத்து மந்திரத்தை ஓதி தினம் துதிக்கின்ற‌
அன்பர் மனத்திருப்போனே!!அருள் ஞான தத்பரனே
அழகென்ற சொல்லுக்கு ஒரு பொருளே குருபரனே
அகலாது காத்தருள்வாய் பரங்கிரி வாழ் ப‌ரனே!!

பன்னிரு விழிகளிலும் பொழி கருணைக்கு ஈடுண்டோ!!
பைந்தமிழ்  கடவுளே நின் அருளுக்கு இணையுண்டோ!!
பொன்னடி  தொழுது நின்றால் பொன்னகர் தனையருள்வாய்
நின்னையே போற்றுகின்றேன்! பரங்கிரி வாழ் பரனே!!

ஞான வழி மேவுகின்றோர் நாடுகின்ற குருகுகனே!!
மோன நிலை தந்தருளும் முழுமுதலே சிவைமகனே!!
வானவரும் ஞானியரும் தாள் பணியும் அருள்நிலவே!!
நானுனையே போற்றுகின்றேன் பரங்கிரி வாழ் பரனே!!

சித்தர்களும் முக்தர்களும் நித்தம் உனதடி பணிவர்
பக்தர்களோ பல கோடி, பணிந்து தினம் துதித்திடுவர்!!
சித்தம் அதில் உன்னுருவே நின்றிடவே வேண்டுகிறேன்
புத்தியிலே நின்றருள்வாய் பரங்கிரி வாழ் பரனே!!

செந்தூரான் கழலடி சிந்தையில் தினம் வைத்து 
வந்தனை  செய்திடுவோம் வாழ்த்துவோம் வாழ்த்தாது
நிந்தனை செய்வோர்தம் தமிழுக்காய் வரமளிக்கும்
கந்தனே உன்னடி தொழுதேன் பரங்கிரி வாழ் பரனே!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

5 கருத்துகள்:

 1. கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரவாயில்லை டிடி சார்!!.. நானே நினைத்தேன் ஏதாவது இணையப் பிரச்னை இருக்கும் என்று..தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!..

   நீக்கு
 2. அருமையான ஆக்கம். இன்றைய தினத்திற்கு பொருத்தமான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பதிவுக்கும் ஆக்கமும் ஊக்கமும் தந்து வரும் தங்கள் நல்லாசிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா!!.. ஒரு சிறு விண்ணப்பம்..தங்களது கருத்துரை, முன்னெப்போதும் இல்லாத வகையில் 'ஸ்பேம்'ல் சிக்கியிருந்தது..கூகிளாரின் திருவிளையாடலை அறிய இயலவில்லை....சில சமயம் இம்மாதிரி நேர்கிறது. இது தங்களது மற்றும் பதிவினைப் படிப்பவர்கள் மேலான கவனத்துக்காக....

   நீக்கு
  2. //பார்வதி இராமச்சந்திரன். has left a new comment on the post "PARANGIRI VAZH PARANE...பரங்கிரி வாழ் ப‌ரனே!! (ஸ்க...":

   ஒவ்வொரு பதிவுக்கும் ஆக்கமும் ஊக்கமும் தந்து வரும் தங்கள் நல்லாசிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா!!.. ஒரு சிறு விண்ணப்பம்..தங்களது கருத்துரை, முன்னெப்போதும் இல்லாத வகையில் 'ஸ்பேம்'ல் சிக்கியிருந்தது..கூகிளாரின் திருவிளையாடலை அறிய இயலவில்லை....சில சமயம் இம்மாதிரி நேர்கிறது. இது தங்களது மற்றும் பதிவினைப் படிப்பவர்கள் மேலான கவனத்துக்காக...//

   அதனால் பரவாயில்லை மேடம். இதுபோல எனக்கும் ஆவது உண்டு. என்ன காரணம் என்றும் தெரியாது தான். அவ்வப்போது 2 நாட்களுக்கு ஒருமுறை SPAM ஏதும் உள்ளதா எனப்பார்த்து, அவற்றையும் பிறகு தாமதமாக வெளியிடுவது உண்டு தான்.

   தகவலுக்கு நன்றிகள்.

   நீக்கு