செவ்வாய், 12 நவம்பர், 2013

MINI STORIES.. KATTRIL PARAKKUM KAAGITHA THUNDUGAL.....சின்னஞ்சிறு கதைகள்.. காற்றில் பறக்கும் காகிதத் துண்டுகள்!!


ஒரு ஊரில், வயதான ஒரு பெரிய மனிதர் வாழ்ந்து வந்தார். எக்காலத்திலும் தனக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென்ற கொள்கையுடையவர் அவர். 

அவரது அண்டை வீட்டுக்காரர் நற்குணங்கள் நிரம்பியவர். உழைப்பாளி. கடுமையான உழைப்பினால் செல்வம் சேர்ந்தது அவரிடம். பெரிய மனிதருக்கு இதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. 'எங்கே நமக்குப் போட்டியாக வந்து விடுவாரோ' என்ற பயத்தில், அவரைப் பற்றி அவதூறு பரப்பலானார். அண்டை வீட்டுக்காரர் ஒரு திருடர் என்றும் அதன் காரணமாகவே விரைவில் செல்வம் சேர்த்தார் என்றும் பார்ப்போரிடமெல்லாம் கூறலானார். பெரிய மனிதரின் கூற்று என்பதால், செய்தி விரைவாகப் பரவலாயிற்று.

இதன் காரணமாக, ஊர்க்காவல் படையினருக்கு விஷயம் விரைவில் போய்ச் சேர்ந்தது. அவர்கள், இதை நம்பி, பெரிய மனிதரின் அண்டை வீட்டுக்காரரை பிடித்துக் கொண்டு போய், காவலில் வைத்தனர். அதன் பின், தக்க விசாரணை நடந்து, அண்டை வீட்டுக்காரர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.

ஆனால், அண்டை வீட்டுக்காரருக்கு, தான் பட்ட அவமானத்தை மறக்க இயலவில்லை. கடும் கோபம் கொண்ட அவர், பெரிய மனிதர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். பெரிய மனிதர், நீதிபதியின் முன் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

பெரிய மனிதர் நீதிபதியிடம்,'நான் ஏதோ நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன். நாங்கள் இருப்பது சிறிய ஊர்... அதில் நான் சொன்னதால் இவர் மதிப்புக் குறைகிறது என்பது அபத்தம். அதுதான் இவர் யோக்கியர் என்பது நிரூபணமாகிவிட்டதே?!!. இனி, சொற்ப மனிதர்களே இருக்கும் எங்கள் ஊரில் இவர் நிச்சயம் மதிக்கப்படுவார்' என்றார். தான் பெரிய மனிதர் என்பதால், தன்னைத் தண்டிக்க தயங்குவார்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது அவருக்கு!!!

ஆனால்,  நீதிபதி, நீதிக்கு மட்டும் பயப்படுபவர். பெரிய மனிதரின் தோரணைக்கு அஞ்சுபவரல்ல.. 

நீதிபதி, பதில் ஏதும் சொல்லாமல், அவரை அருகே வரவழைத்து, ஒரு காகிதத்தைக் கொடுத்து, அதைத் துண்டுகளாகக் கிழிக்கச் சொன்னார். பின், அந்தப் பெரிய மனிதரை ஊருக்குப் போகும்படியும், போகும் வழியெல்லாம், துண்டுகளை வரிசையாகப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்றும் கூறி,  நாளை மீண்டும் நீதிமன்றம் வரவேண்டுமென்று கூறினார்.

பெரியமனிதரும் அவ்வாறே செய்து, தம் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். மறு நாள் நீதிமன்றம் சென்றார். நீதிபதி அவரிடம், 'போய், நேற்று நீங்கள் போட்ட காகிதத் துண்டுகளை சேகரித்து வாருங்கள்!!' என்றார். விக்கித்துப் போனார் பெரிய மனிதர். 'அது எப்படி முடியும்... அவை காற்றிலே எங்கெங்கு சென்றனவோ யாருக்குத் தெரியும்?' என்று கேட்டார்.

நீதிபதி,  'தெரிந்து கொள்ளுங்கள்..இதைப் போன்றதே நீங்கள் சொன்ன அவதூறு வார்த்தைகளும். அவை திரும்பப் பெற முடியாதவை. உங்கள் ஊரில் இருப்பவர்களை மட்டும் வைத்து எடை போடக் கூடாது அவர்கள் மூலம் வாய்மொழியாக, காற்றில் கலந்து, அண்டை ஊர்களில் எல்லாம் பரவியிருக்கும். அவைகளை நீக்குவதென்பது முற்றிலும் இயலாத செயல். நிச்சயம் உங்கள் செயலுக்கு நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்..' என்றார் கடுமையாக.

பெரிய மனிதர் உண்மை உணர்ந்து தலை கவிழ்ந்தார். 

நீதிபதி, மிகப் பெரும் தொகையை  நஷ்ட ஈடாக அண்டை வீட்டுக்காரருக்கு வழங்க உத்தரவிட்டார்.

"பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்!" --- சுவாமி விவேகானந்தர் 

"மற்றொருவன் தன்னைவிட அறிவாளியாக இருப்பதைப் பார்த்தோ அல்லது அவன் தன்னைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தோ பொறாமை கொள்வது அல்லாவின் ஏற்பாட்டில் குறைகாண்பதாகும்".. திருக்குர் ஆன்

"உங்கள் உள்ளத்தில் பொறாமையும், மனக்கசப்பும், கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம், உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம் " ----யாக்கோபு: 3:14

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

7 கருத்துகள்:

  1. படித்ததில் பிடித்ததாகப் பகிர்ந்துள்ளது மிகவும் அருமையான கதை. நல்லதொரு நீதி நயம் படக்கூறப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா!!. கதையின் மூலம் மட்டுமே 'படித்ததில் பிடித்தது'.. கதையாக்கம் அடியேனுடையது... .:-))))))

      நீக்கு
    2. //பார்வதி இராமச்சந்திரன். has left a new comment on the post "MINI STORIES.. KATTRIL PARAKKUM KAAGITHA THUNDUGAL...":

      மிக்க நன்றி ஐயா!!. கதையின் மூலம் மட்டுமே 'படித்ததில் பிடித்தது'.. கதையாக்கம் அடியேனுடையது... .:-)))))) //

      அப்படியா, மிக்க மகிழ்ச்சி. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

      நான் லேபிளில் இருந்ததைப் படித்துவிட்டு அவ்வாறு எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

      கதையை நான் மிகவும் ரஸித்தேன்.

      என் தளத்தில் இன்றைய புதிய வெளியீடு: http://gopu1949.blogspot.in/2013/11/79.html

      விருப்பம் + நேர அவகாசம் இருந்தால் வாங்கோ. இது Just ஒரு தகவலுக்காக மட்டுமே. VGK

      நீக்கு
  2. பொறாமைத்தான் புறம் பேசவைக்கிறது என்பதை எடுதுச்சொல்லி ரசிக்க வைத்த நீதிக்கதை.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு