முந்தைய பதிவின் தொடர்ச்சி....
கயா... பித்ருகர்மாக்கள் கயாவில் செய்யப்பட்டால் கிடைக்கும் புண்ணியம் அளவில்லாதது எனப் புராணங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் கயாவில் செய்யப்படும் ஸ்ரார்த்தத்தாலேயே த்ருப்தியடைந்து, பிறவித் தளையிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைகிறார்கள்.
கயாவைத் தவிர வேறெங்கு ஸ்ரார்த்தம் செய்ப்பட்டாலும், அதன் நிறைவில், 'கயாவில் செய்த பலன் கிடைக்கட்டும்' என்று பிரார்த்தித்து, அக்ஷய வடம் இருக்கும் திசை நோக்கி சில அடிகள் நடப்பது சம்பிரதாயமாக இருக்கிறது.
கயாவில் செய்யப்படும் ஸ்ரார்த்தம் மிக அதிக நேரம் எடுப்பதாக இருக்கிறது. கிட்டத்தட்ட பகல் 9 மணிக்கு ஆரம்பித்தால், பிற்பகல் குறைந்தது மூன்று மணியாவது ஆகும் முடிவதற்கு. அதற்கேற்றாற்போல் பசி தாங்காதவர்களுக்கு, க்ளூகோஸ் மாத்திரை முதலியவை தேவைப்படும். இது தவிர, கயாவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் குறித்து, இரண்டாவது பகுதியில் ஏற்கெனவே தெரிவித்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.
காசியிலிருந்து கயாவிற்கு ரயிலில் பயணப்படுவதே உத்தமம். மிகுந்த சிரமம் இல்லாது விரைவில் சென்று விடலாம். மறுநாள் களைப்பும் அதிகம் தெரியாது. ஆனால் நாங்கள் காரில் சென்றதால், கிட்டத்தட்ட 6 மணி நேரம் பயணிக்க நேர்ந்தது. வழியில் ரோடு அவ்வளவாக சரியாக இல்லை. ஆகவே மிகுந்த தாமதமேற்பட்டது. ரயிலில் சென்றால், குறைந்த பட்சம் நாலரை மணி நேரத்தில் கயாவை அடைந்து விடலாம்.
காலையில் கயாவை அடைந்ததும் நேராக, தங்கும் இடத்துக்குச் சென்றோம். விடுதி மிக வசதியாக இருக்கிறது. மிகப் பெரியதும் கூட. நல்ல பெரிய, காற்றோட்டமான அறைகள், சுத்தமான குளியலறைகள் எல்லாம் இருந்தது. வெந்நீர் கேட்டால் தந்தார்கள். சற்றே பெரிய பேப்பர் கப்களில் நல்ல தரமான காபி வழங்கப்பட்டது.
போனதும் குளித்துத் தயாராகச் சொன்னார்கள். எனக்கும் என் கணவருக்கும் காலை உணவாக அவல் உப்புமா கிடைத்தது. மிக ருசியாக இருந்தது. சிற்றுண்டி முடிந்ததும் வண்டிகளில் கிளம்பினோம்.
பெரியவர்கள் எல்லோரும் முதலில் பல்குணி நதியின் கரையை அடைந்தார்கள். நதி என்று பெயரே தவிர, வறண்ட பூமி தான். ஆங்காங்கே ஊற்றுகள் இருக்கிறது. ஒரு படித்துறையில், தேயிலைத் தோட்டத்தில் வைக்கும் ஸ்ப்ரிங்ளர் போல் அமைத்து நீர் தெளிக்கிறார்கள். அதை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டோம்.
ஸ்ரீவிஷ்ணுபாதக் கோவிலின் படிகள். |
மிகப் பெரிய கூட்டங்களாக அமர்ந்து இன பேதமின்றி அனைவரும் பித்ருகடன்
நிறைவேற்றுகிறார்கள். எங்கள் குழுவினர், விஷ்ணுபாதக் கோவிலின் படிகளின் மேல் அமர வைக்கப்பட்டனர்.
நான் பல்குணி நதி நீரின்றி வறண்டு இருப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, அங்கு இருந்தவர் ஒருவர், இது சம்பந்தமான புராணக் கதை ஒன்றை விவரித்தார்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், சீதா தேவியும் கயாவில் சிரார்த்தம் செய்ய வந்த போது, ஸ்ரீ ராமர், 'இதோ அனுஷ்டானங்களை முடித்து விட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தம் தம்பிகளுடன் சென்று விட்டார். பல்குணி நதியின் கரையில், ஸ்ரீராமருக்காக, ஆற்று மண்ணை அளைந்தவாறு சீதா தேவி காத்திருந்த வேளையில், திதி கொடுக்கும் நேரம் நெருங்கி விட்டது. பொதுவாக, நண்பகல் வேளையிலேயே பித்ருலோகத்திலிருந்து பித்ருக்கள் வருவார்கள். முற்காலத்தில் அந்த நேரத்திலேயே ஸ்ரார்த்தம் செய்யும் வழக்கம் இருந்தது.
பல்குணி நதி |
தெய்வங்கள் மனிதர்களுடன் நேரடியாகப் பேசிய காலம் அது. எல்லாச் செயல்களும் அதற்கென குறித்த பொழுதுகளிலேயே தவறாமல் நடத்தப்பட்ட யுகம் அது. ஸ்ரார்த்த சமயம் நெருங்கியதும், ஆற்று மண்ணிலிருந்து தசரதர் சீதை முன் தோன்றினார். தமக்குப் பசி எடுப்பதாகவும், தம்மால் காத்திருக்க முடியாதென்றும் கூறினார். ஸ்ரீராமர் இன்னும் வரவில்லையெனினும், தசரதருக்கு பிண்டம் அளிக்க வேண்டிய சூழலில்,சீதை, ஆற்று மண்ணைப் பிசைந்து உருண்டைகள் பிடித்து, உள்ளன்போடு தன் மாமனாருக்கு அளித்து, தன்னை ஆசீர்வதிக்க வேண்டினாள். தசரதரும் மகிழ்வோடு அதனை ஏற்றார். அச்சமயம், அங்கிருந்த பல்குணி நதி, அக்ஷய வடம் என்னும் ஆலமரம், துளசிச் செடி, ஒரு பசு, மற்றும் அந்தணர் ஒருவர் ஆகியோர் அந்த நிகழ்வுக்கு சாட்சிகளாக நின்றனர்.
ஸ்ரீராமர் வந்தார். முறைப்படி ஸ்ரார்த்த கர்மாவை நிறைவேற்றினார். ஆனால் தசரதர் வந்து பிண்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. 'தாம் செய்த கர்மாவில் ஏதேனும் தவறு நிகழ்ந்ததோ' எனும் பதற்றம் ஸ்ரீராமருக்கு. சீதை, தான் செய்த செயலைக் கூறினாள். ஸ்ரீராமர், சீதையின் கூற்று உண்மையென்று நன்கு உணர்ந்தாராயினும், அதை வெளிக்காட்டாது, 'நீ செய்த செயலுக்கு யார் சாட்சி?' என்று கேட்டார். தெய்வங்களின் லீலைகளெல்லாம், மானிடருக்கு நல்வழி காட்டத்தானே!!.
அச்சமயம், பல்குணி நதி, துளசிச் செடி, பசு, அந்தணர் முதலியோர், சீதையின் செயலை தாம் பார்க்கவில்லை என பொய்யுரைத்தனர். அக்ஷய வடம் எனும் ஆலவிருக்ஷம் மட்டும், சீதையின் சொல் உண்மையென்று சொன்னது.
அக்ஷய வடம் |
கோபமே வராத சீதைக்கும் கோபம் வந்தது. பொய்யுரைத்த பல்குணி நதி, துளசி, பசு, அந்தணர் முதலானோருக்கு சாபமிட்டாள். கயாவில் பல்குணி நதி எப்போதும் வறண்டு காணப்படும் என்றும், ஊற்றுகள் மட்டுமே இருக்கும் என்றும், கயாவில் துளசி முளைக்காது என்றும், பசுவின் பின்பாகம் மட்டுமே பூஜிக்கப்படும் என்றும், கயையில் வாழும் அந்தணர்கள், தாம் கற்ற வித்தையை விற்று வாழவேண்டிய நிலை உருவாகும், மேலும் எவ்வளவு கொடுத்தாலும் அதனால் அவர்கள் திருப்தியில்லாமல் வாழ்வார்கள் என்றும் சாபம் தந்தாள். அக்ஷய வடத்தை, யுக யுகாந்தரங்களுக்கு நீடுழி வாழ வாழ்த்தி, யுகங்களின் முடிவில் பிரளயம் தோன்றும் போது, அக்ஷயவடத்தில் இலையிலேயே, பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார், அவரது திருவடிகளில் உலகங்களனைத்தும் லயமாகும் என்றும் அருளினாள். மேலும் கயாவிற்கு வருவோர் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள். அப்போது தான் கயாவில் செய்யும் ஸ்ரார்த்தத்தின் பலன் கிடைக்கும் என்றும் ஆசீர்வதித்தாள்.
அதே போல் கயா க்ஷேத்திரத்தின் பெருமைக்குக் காரணமான கயாசுரனின் வரலாற்றையும் விவரித்தார். இது பல்வேறு புராணங்களில் பலவிதமாகக் கூறப்படுகிறது. நான் இங்கு கயாவில் வழங்கப்படுவதை மட்டும் சொல்கிறேன். மற்ற புராணங்களை பின்னொரு பதிவில் காணலாம்.
கயாசுரன், அசுரனெனினும், தம் மக்களை நல்ல முறையில் அரசாண்டவன். சிறந்த விஷ்ணுபக்தன். ஆனாலும் அவன் அசுரனென்பதால் தேவர்களுக்குக் கடும் பகைவனாக விளங்கினான். அவனைக் கொல்ல வேண்டுமென தேவர்கள் அனைவரும் ஸ்ரீவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர். அதன்படி, ஸ்ரீ விஷ்ணு, கயாசுரனை அணுகி, தாம் ஒரு யாகம் நடத்த இருப்பதாகவும், அதற்கான யாக பூமியாக அவன் உடலைத் தர வேண்டுமென்றும் கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். யாகம் முடியும் வரை அவன் உடலை அசைக்காது இருக்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்பட்டதற்கும் உடன்பட்டான்.
யாகம் துவங்கியது. யாகத்தீயின் வெம்மை தாங்காமல் கயாசுரன் மாண்டு விடுவான் என எண்ணியதற்கு மாறாக, அவன் செய்த தர்மம் அவன் தலை காத்தது. எனவே,யாகம் நிறைவடையும் நேரத்தில், பகவான் ஸ்ரீவிஷ்ணு, தம் பாதத்தை அவன் தலையில் வைத்து பூமியில் அழுத்தினார். அவ்வாறு செய்வதற்கு முன், அவனது இறுதி விருப்பம் எதுவாயினும் தாம் அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்.
கயாசுரன், தம் விருப்பங்களாகக் கீழ்க்கண்டவற்றைத் தெரிவித்தான்.
1. இந்தப் புனிதமான க்ஷேத்திரம், தம் பெயராலேயே வழங்கப்பட வேண்டும்
2. பித்ருகர்மாக்கள் நிறைவேறும் புனிதத் தலமாக இது திகழ வேண்டும். இங்கு வரும் அனைவரும், தம் தாய், தந்தையருக்கு மட்டும் அல்லாது, தமக்குத் தெரிந்தவர், அறிந்தவர், தூரத்து உறவினர், நண்பர்கள், வளர்ப்புப் பிராணிகள் முதலிய யாவருக்கும் பிண்டம் அளித்து அவர்களை நற்கதி அடையச் செய்ய வேண்டும்.
3.எந்த நாளில் பிண்டங்கள் ஸ்ரீவிஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையோ அன்று தனக்கு மீண்டும் உயிர் பிச்சை அளிக்க வேண்டும் என்றும் வேண்டினான். அவன் வேண்டுகோள்கள் நிறைவேறும் என்று ஸ்ரீவிஷ்ணு உறுதியளித்தார்.
அதன்படி, இந்த க்ஷேத்திரம் 'கயா' என்றே வழங்கப்படுகிறது. இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தம் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து, விஷ்ணு பாதத்தில் பிண்டங்களை அர்ப்பணம் செய்து வருகின்றனர். திதி நடக்காத தினமே இல்லை. கயாவில் மட்டும் எந்தத் திதியிலும் பித்ருகர்மா செய்யலாம். இங்கு ஒவ்வொருவரும் தம்தம் தாய், தந்தையருக்கு மட்டுமல்லாது, தெரிந்தவர் அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் ஸ்ரார்த்தத்தில், தாய், தந்தை வழிகளில் மூன்று தலைமுறையினருக்காக, மூன்று பிண்டங்கள் மட்டுமே அளிக்கப்படும். பிரயாகையிலும், காசியிலும் தீர்த்த ஸ்ரார்த்தத்தின் போது 16 பிண்டங்கள் அளிக்கப்படும். ஆனால் கயாவில் மட்டும் 64 பிண்டங்கள் அளிக்கப்படும்.
இதில் 32 பிண்டங்கள் தாய்க்கு மட்டும். இதிலிருந்து,பெற்றெடுத்த தாய் எத்தனை உயர்ந்தவள் என்பதை அறியலாம். 16 பிண்டங்கள் மூதாதையருக்காகவும், மீதி 16, நான் முன் சொன்னதைப் போல், மற்ற உறவினருக்காகவும் அளிக்கப்படுகிறது.
தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், கருச்சுமந்த காலத்திலிருந்து, தன்னைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்காகப் பட்ட ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் மன்னிப்பு வேண்டி ஒவ்வொரு மனிதனும் கயாவில் பிண்டங்களை அர்ப்பணிக்கிறான். கல் மனம் படைத்தவர் கூட, தன் தாய் தனக்காக பட்ட அவஸ்தைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லி, பிண்டங்களை அர்ப்பணிக்கும் பொழுதில் கதறி அழுது விடுவார்.
'என்னை வயிற்றில் சுமந்த போது, உனக்கு வாந்தி முதலிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமே, அதற்காக இந்தப் பிண்டத்தை அர்ப்பணம் செய்கிறேன். நீ விரும்பியதை உண்ண முடியாமல் தவித்திருப்பாயே அதற்காக இது. தூங்கும் நேரத்தில் கூட, புரண்டு படுத்தால் எனக்கு மூச்சு முட்டக்கூடும் என, எழுந்து கொண்டு மறுபுறம் படுத்தாயே அதற்காக இதை அர்ப்பணம் செய்கிறேன். நான் வயிற்றில் உதைப்பதை வலியாக எண்ணாமல், மகிழ்ந்தாயே அதற்காக இது, பொறுக்க முடியாத பெரும் வலியைத் தாங்கி என்னைப் பெற்றெடுத்தாயே அதற்காக இது, பிறந்ததும், தாய்ப்பால் தந்து என் பசி ஆற்றியதற்காக இது,...' இவ்வாறு ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் ஒன்று அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
'என்னை வயிற்றில் சுமந்த போது, உனக்கு வாந்தி முதலிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமே, அதற்காக இந்தப் பிண்டத்தை அர்ப்பணம் செய்கிறேன். நீ விரும்பியதை உண்ண முடியாமல் தவித்திருப்பாயே அதற்காக இது. தூங்கும் நேரத்தில் கூட, புரண்டு படுத்தால் எனக்கு மூச்சு முட்டக்கூடும் என, எழுந்து கொண்டு மறுபுறம் படுத்தாயே அதற்காக இதை அர்ப்பணம் செய்கிறேன். நான் வயிற்றில் உதைப்பதை வலியாக எண்ணாமல், மகிழ்ந்தாயே அதற்காக இது, பொறுக்க முடியாத பெரும் வலியைத் தாங்கி என்னைப் பெற்றெடுத்தாயே அதற்காக இது, பிறந்ததும், தாய்ப்பால் தந்து என் பசி ஆற்றியதற்காக இது,...' இவ்வாறு ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் ஒன்று அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
கயாவிற்கு வந்திருந்தவர்களில் மிகப் பலர், தமக்குத் தெரிந்தவர் யார் யாருக்கு பிண்டம் அளிக்க வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் போலவே எழுதிக் கொண்டு வந்திருந்தனர் (மறக்காமல் இருக்க).
அங்கு பல நெகிழ்வான நிகழ்வுகளைப் பார்க்க முடிந்தது. தன் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த ஒருவர், 'எங்கப்பாம்மாக்கு எதுவும் செய்ய முடியலையேன்னு வருத்தமா இருந்தது. இங்க வந்து எல்லாம் செஞ்சதும் திருப்தியாயிடுச்சு. அவங்க நிச்சயம் நல்ல கதிக்குப் போவாங்க...' என்றார் பரவசமாக.
என் மாமனார், மிகச் சிறு வயதில் தவறிப் போன தன் தம்பிக்கு பிண்டம் அளித்து விட்டு, கண்களில் நீருடன் 'இப்பத்தான் திருப்தியாச்சு' என்றதும் எனக்கு நிஜமாகவே இந்த யாத்திரையின் பலனை அடைந்தது போல் தான் தோன்றியது.
விஷ்ணு பாதக் கோவிலில் திதி முடிந்ததும், அங்கு அர்ப்பிக்கப்பட்ட பிண்டங்களை, ஒரு தாமரை இலையில் எடுத்துக் கொண்டு, ஸ்ரீவிஷ்ணு பாதம் பதிக்கப்பட்ட சந்நிதியை நோக்கிச் சென்று, அங்கு விஷ்ணு பாதத்தில் அர்ப்பணம் செய்தனர். வெள்ளிக் கவசம் சாற்றப்பட்ட தொட்டி போன்ற எண்கோண அமைப்பினுள் விஷ்ணுபாதம் இருக்கிறது. விஷ்ணு பாதத்திற்கு நேராக ஸ்ரீ விஷ்ணுவின் சந்நிதானம் இருக்கிறது. ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு சந்நிதகள் இருக்கின்றன. ஆனால் நிதானமாகத் தரிசனம் செய்ய முடியாதபடி பயங்கரக் கூட்டம். கூடுமானவரை தரிசனம் செய்தோம்.
அதற்குப் பின் தங்கும் இடம் வந்தோம். அங்கு ஒரு பெரிய கூடத்தில் ஹோமத்துடன் கூடிய சிரார்த்தம் ஆரம்பமாகியது. இங்கும் பிண்டங்கள் அர்ப்பணம் செய்வார்கள். அதன் பின், புது வேட்டிகளை அணிந்து, பெரிய வரிசையில் அமர்ந்திருக்கும் வைதீகர்களுக்கு உணவிட வேண்டும். ஒவ்வொரு தம்பதிக்கும் இரண்டு வைதீகர்கள் என்ற கணக்கு. முதலில் பெண்கள் அனைவரும் சேர்ந்தே, அனைத்து வைதீகர்களுக்கும் பரிமாறி விட்டு, அதன் பின் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வைதீகர்களைக் கவனித்துப் பரிமாற வேண்டும்.
என்னையும் என் கணவரையும் ஸ்ரார்த்தம் நடக்கும் போது அருகிலிருக்கக் கூடாது என்று சொல்லி விட்டதால், விஷ்ணு பாதக் கோவிலிலும், தங்கும் இடத்திலும், ஸ்ரார்த்தம் நடக்கும் இடத்துக்கு வெகு தொலைவிலேயே அமர்ந்திருக்க நேரிட்டது. வைதீகர்கள் சாப்பிட்டதும் அவர்களை வலம் வந்து நமஸ்கரிக்கும் சமயம் எங்களை அழைத்தார்கள். அவர்களை வலம் வந்து நமஸ்கரித்து விட்டு, பிண்டங்களை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அக்ஷய வடம் நோக்கிப் புறப்பட்ட பெரியவர்களுடன் பயணப்பட்டோம்....(தொடரும்)
என்னையும் என் கணவரையும் ஸ்ரார்த்தம் நடக்கும் போது அருகிலிருக்கக் கூடாது என்று சொல்லி விட்டதால், விஷ்ணு பாதக் கோவிலிலும், தங்கும் இடத்திலும், ஸ்ரார்த்தம் நடக்கும் இடத்துக்கு வெகு தொலைவிலேயே அமர்ந்திருக்க நேரிட்டது. வைதீகர்கள் சாப்பிட்டதும் அவர்களை வலம் வந்து நமஸ்கரிக்கும் சமயம் எங்களை அழைத்தார்கள். அவர்களை வலம் வந்து நமஸ்கரித்து விட்டு, பிண்டங்களை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அக்ஷய வடம் நோக்கிப் புறப்பட்ட பெரியவர்களுடன் பயணப்பட்டோம்....(தொடரும்)
சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
Nice, useful and informative.
பதிலளிநீக்குRegards,
S V Ramakrishnan
Thanks a lot for your comment Sir.
நீக்குதங்களுடைய கயா ஸரார்த்தம் பற்றிய (10வது பதிவுக்கு நன்றி) முந்தைய (1 முதல் ஒன்பது மற்றும் 11 முநல்) பதிவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். எதில் தேடினால் கிடைக்கும்.
நீக்குஅருமையான தகவல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்கள் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா.
நீக்குநேரில் மீண்டும் காசி யாத்திரை போய் வந்தது போல, பல தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்கள். நன்றி அம்மா. நேரில் செய்தது போல உணர்ந்தேன் 🙏
பதிலளிநீக்கு