வெள்ளி, 3 மே, 2013

தனுசுவின் கவிதைகள்.....பாடவைக்கும் பாத கொலுசு!



கொஞ்ச தூரத்தில்
கொலுசொலி
கேட்கிறது
என்னை கொஞ்ச
வரச்சொல்லி அழைக்கிறது!

நெஞ்சம் நிறைய இனித்து
அந்த சப்தம்
என்னை
தனதாக்கி ஆள்கிறது!
இந்திரஜாலமாய் மலர்ந்து
அடி நெஞ்சில்
குளிர் தருகிறது!

அந்த ஜல் ஜல் ஒலி
ஜதி கூட்ட
சல் சல் ஒலி
சுதி ஏற்ற
என்னை மயக்கும்
வாத்யம்
தாளம்
ஸ்வரம்
கானம்
கலந்த நாத உபாசனையாகிறது!

இத்தனையும் செய்யும்
அந்த
கொலுசு அணிந்த
அழகிய மேகலையின்
அசைவும் ஓர் கலையாகிறது!
அந்த
அபிநயம் பூட்டிய ஒலி
தரும் இசை நவரசமாகிறது!
அந்த
கொலுசு கட்டிய பாதம்
வரும் திசை பாசுரமாகிறது

இவை தரும் அவள்
நர்த்தகியோ
நாட்டியப் பேரொளியோ அல்ல.....

மஞ்சள் தாம்பாளத்தின்
இளம்வெற்றிலை....
மல்லிகைச் செடியில் துளிர்விட்ட
புதுமொட்டு....
அதிகாலைப் பொழுதில்
எழும்கதிர்.....
அந்தி சாயும் பொழுதின்
முதல்பிறை.....

அவள் மங்கையல்ல
மழலை!
குமரியல்ல
குழந்தை!

ஓரெட்டு நிறைந்தவளுக்கு
தாலாட்டு பாட வரும் நான்
அவள்
காலடி பட்டு கிளம்பும் ஓசையில்
தலையாட்டி தூங்கி விடுகிறேன்!
இந்த
பூமியின் மற்ற இன்பம் மறந்துவிடுகிறேன்!



-தனுசு-
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. அழகிய அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கவிதையை ரசித்தமைக்கு நன்றி தனபாலன். அடிக்கடி வாருங்கள். வந்து உற்சாகமூட்டுங்கள்.

    பதிலளிநீக்கு