செவ்வாய், 14 மே, 2013

KASI YATHRA .. ...PART 11, AKSHAYA VADAM.......அக்ஷய வடம்.(காசி யாத்திரை.....பகுதி 11).


முந்தைய பதிவின் தொடர்ச்சி...

அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தின் அடிப்பாகம் கயாவில் இருக்கிறது. அக்ஷய வடத்தின் அடியில் பிண்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், முன்னோர்கள், நல்ல கதியை அடைவார்கள் என்பது ஐதீகம். குறிப்பாக, அகால மரணமடைந்தோருக்கும், தனுஷ்டை(குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் இறைவனடி சேர்தல்)யில் மேலுலகம் சென்றோருக்கும் நற்கதி கிடைக்கும். மேலும் கயாவில் சிரார்த்தம் செய்த பலன், அக்ஷய வடத்தின் அடியில் பிண்டங்கள் சமர்ப்பிப்பதாலேயே கிடைக்கும்.

அக்ஷய வடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. சதுர்யுகங்களின் முடிவில், பிரளயம் வரும் பொழுது பரமாத்மா, அக்ஷய வடத்தின் இலையிலேயே சிறு குழந்தையாக(ஆலிலைக் க்ருஷ்ணர்) சயனித்து மிதந்து வருவார். அவர் திருவடிகளில் உலகனைத்தும் ஒடுங்குகிறது. இதை நினைவுபடுத்தும் விதமாக, அக்ஷய வடத்துக்கு அருகில் சிறு மண்டபம் போன்ற அமைப்பில் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கொண்டிருக்கிறார். 

இத்தகைய பெருமை வாய்ந்த அக்ஷய வடத்துக்கு ஒரு வேனில் சென்றோம். அக்ஷய வடத்தைச் சுற்றிலும் பெரிய விஸ்தீர்ணமான இடம் இருக்கிறது. அதை அடுத்து பெரிய சுற்றுச் சுவர். ஏறவும் இறங்கவும் தனித் தனி வழிகள், பெரிய பெரிய படிகளுடன் கட்டப்பட்டிருக்கிறது.

வேனிலிருந்து இறங்கி, நடந்து படிகளின் அருகில் சென்றால், 'ஓடு, ஓடு' என்ற குரல். விழுந்தடித்து ஓடி, படிகளில் ஏறிவிட்டுத் திரும்பினால், ஒன்று, இரண்டு அல்ல, எக்கச்சக்க குழந்தைகள்!!!. யாராவது யாத்ரீகர்கள் வந்தால் பிச்சைக்காகத் துரத்துகிறார்கள். எங்களுடன் கூட வந்தவர், 'அவர்கள், வந்து தருவார்கள், போங்க, போங்க' என்று சொல்லி எங்களை விடுவித்தார்.நானும் என் கணவரும், முதலில் மேலேறி வந்தோம். அருகிலேயே கை, கால் அலம்ப இடம் இருக்கிறது. பிறகு, அக்ஷய வடத்தைத் தரிசித்தோம். 

யுகம் யுகமாக, பல்வேறு நிகழ்வுகளுக்கு சாக்ஷியாக இருக்கும் மகிமை பொருந்திய அக்ஷய வடம். மிக அமைதியாக, உறுதியாக, இலைகள் காற்றில் படபடக்க, சுற்றிலும் பக்தர்களால் கட்டப்பட்ட பல வண்ணத்துணிகள் தோரணம் போல் விளங்க, கிட்டத்தட்ட பார்க்கும் போது, ஒரு மரம் என்ற உணர்வே தோன்றவில்லை. இரு கரம் குவித்து வழிபடவே தோன்றுகிறது. மிக வயது முதிர்ந்த உறவினர்களைப் பார்க்கும் மனநிலையே இருந்தது.

எதிர்ப்புறம் இருந்த மேடையில் நாங்கள் இருவரும் அமர்ந்தோம்.  சிரார்த்தம் செய்த தம்பதியினர்,  அக்ஷய வடத்தின் கீழ் அமர வைக்கப்பட்டார்கள். அங்கிருந்த பண்டா,  சிரார்த்தம் செய்த தம்பதியினரை சங்கல்பம் செய்யச் சொன்னார்.  பிறகு கீழ் வருமாறு கூறினார்.

'காசி யாத்திரையின் மிக முக்கியமான கட்டம் இது. உங்கள் முன்னோர்கள் நல்ல கதி அடைவதற்காக, உங்களுக்கு விருப்பமான, இலை, காய்(கிழங்குகள் அல்ல), பழம் முதலியவற்றை விட வேண்டும். அதாவது அவற்றை இனி உணவில் உபயோகிக்கக் கூடாது. உங்களைப் பெற்றவர்கள், உங்களுக்காக, எவ்வளவோ தியாகங்களைச் செய்திருப்பார்கள், அவர்களுக்காக நீங்கள் செய்யும் தியாகம் இது' என்று கூறி விட்டு, கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் கூறினார்.

1. அவரவர் இல்லத்தில் திதி கொடுக்கும் போது செய்யப்படும் சமையலில் (இது வீட்டுக்கு வீடு மாறுபடும்) உபயோகிக்கும் காய், கனிகளை விடக்கூடாது. முக்கனிகள், திதியில் உபயோகிப்பதால் அவற்றையும் விடக்கூடாது.

2. வாழைக்காய், எல்லா வித சிரார்த்தங்களிலும் உபயோகிப்பதால் அதை விடக் கூடாது.

3. வாழை இலை, தாமரை இலை (சாப்பிட உபயோகிப்பதால்) முதலியவற்றை விடக்கூடாது.

4.இங்கு சங்கல்பம் செய்து விட்ட பின்பு, போகும் வழியில் அவற்றைச் சாப்பிட நேர்ந்தால் பரவாயில்லை. ஊருக்குப் போய்ச் சேர்ந்த பின்பே, நியமத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

5. காசி யாத்திரை பூர்த்தியான பின், காசியில் விட்ட காய், கனிகளை எங்காவது வேறு வழியில்லாமல்,சாப்பிட நேர்ந்து விட்டால், அடுத்து வரும் கார்த்திகை மாதம், அந்தக் காய், கனிகளை கணிசமான அளவில் வாங்கித் தானம் செய்ய வேண்டும் (அதுக்காக, தானம் செய்து விட்டுச் சாப்பிடக் கூடாது).

6. முக்கியமான விஷயம், இந்த நியமம், இங்கு வந்து சிரார்த்தம் செய்து, சங்கல்பம் செய்த கணவன் மனைவி இருவருக்கு மட்டுமே பொருந்தும். மற்ற குடும்ப உறவினர்களை இது கட்டுப்படுத்தாது.

7. ஆகவே, காசியில் விட்ட காய் கனிகளை வீட்டில் வாங்கலாம், சமைக்கலாம். வேறு யாருக்கேனும் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால், காய் கனிகளை விட்ட தம்பதியர் மட்டும் சாப்பிடக்கூடாது. சிலர் நினைப்பதைப் போல், அந்த காய் கனிகளைக் கையாலும் தொடக்கூடாது என்றெல்லாம் இல்லை.

8. இங்கிலீஷ் காய், கனிகள் விடுவதில்லை.

இந்த விஷயங்களைக் கூறிவிட்டு, 'எந்தெந்த இலை, காய், கனிகளை விடப் போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள். கணவன், மனைவி இருவரும் ஒத்த மனதினராக, ஒரே ஒரு இலை, காய், கனியின் பெயரைக் கூற வேண்டும். தனித்தனியாக, வெவ்வேறு பெயர்களைக் கூறக் கூடாது' என்றும் சொன்னார்.

என் அபிப்பிராயத்தில், 'அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்பதற்கிணங்க, மோக்ஷ கதி அடைய வேண்டுமெனில் உலகப் பற்றை விட்டொழிக்க வேண்டும். சம்சார சாகரத்தில் கதியற்றுச் சுழலுவோருக்கு அது மிகச் சிரமமான காரியம் என்பது தெளிவு. ஆகவே, ஒரே ஒரு காய், பழம், இலை முதலியவற்றில் இருக்கும் பற்றுதலையாவது விட்டொழிக்க முயல்வது, சிறுகச் சிறுக, உலகப் பொருட்களில் இருக்கும் பற்றுதலை விட்டொழிப்பதை நோக்கிச் செலுத்தும். அது, இப்பிறவியில் இயலாவிட்டாலும் இனி வரும் பிறவிகளில், நம் ஆன்மாவில் ஒட்டியிருக்கும் ஜென்மாந்தர வாசனையாக மாறி, கொஞ்சம் கொஞ்சமாக ஆன்ம முன்னேற்றத்தை நோக்கிச் செலுத்தி, ஏதேனும் ஒரு பிறவியில் மோக்ஷமடைதலைச் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த சம்பிரதாயம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனா நம்ம மக்கள்!!!. என்னத்தச் சொல்றது!!. அங்கு நடைபெற்ற 'டிஸ்கஷன்களை' சொல்ல வேண்டுமெனில் தனிக் கட்டுரையே எழுத வேண்டும். இருக்கும் டெக்னிகல் நாலெட்ஜ் எல்லாம் அப்டேட் பண்ணி, குறுக்கு மறுக்காகச் சிந்தித்து, காய் கனிகளை டிஸைட் செய்தார்கள். சாம்பிளுக்கு ஒன்று இங்கே...

(கணவன், மனைவி உரையாடல் பாணியில் கற்பனை செய்து கொள்க...)

' சீதாப்பழத்த  விட்டுறலாம். அதத்தான் நாம வாங்கறதே இல்ல. காய்க்கு, கத்தரிக்கா விட்டுறலாம். அது தான் எனக்கு ரொம்பப் புடிக்கும். புடிச்ச ஒண்ணுத்தயாவது விடுவோமே....'

'முலாம்பழத்தயும்  கொத்தவரங்காயயும் விட்டாளாம்  உங்கண்ணா மன்னி... அதயே விட்டுடலாமா..'

'அவா விட்டதத்தான் நாமளும் விடணுமா..'

'இல்ல, நாள் கெழமைல சேர்ந்து சமைக்கும் போது குழப்பம் வராம இருக்குமே.'

'இல்லடி..ஒனக்கு அவியல் புடிக்கும்.. கொத்தவரங்கா இல்லாம எப்படி பண்ணுவ?'

'கொத்தவரங்காவும் வாயுங்கறா.... அதுக்குப் பதிலாத்தான் பீன்ஸ் போட்டுடலாமே... இப்பல்லாம்  எங்க போனாலும்  சமயல்ல‌ கத்தரிக்கா தான் போடறா...ஒரு காய் கணிசம் கொறஞ்சாலும்  கத்தரிக்கா போட்டா நெறக்கறது.  உங்கம்மாக்கு சுமங்கலிப் பிரார்த்தன பண்றச்ச கத்தரிக்கா பிட்ல தான பண்ணியாறது...'

'இல்ல, விருப்பமான ஒரு காயவாவது விட்டுடலாம்னு.... சரி.. நீ சொல்றபடி செய்துர்லாம்' . (இத மொதல்லயே சொல்லியிருக்கலாம்).

ஆகக் கடைசியில், பெரும்பாலும், 'விருப்பமான' சீதாப்பழம், நாவல்பழம், முலாம்பழம், சுரைக்காய், அரச இலை, புங்க இலை, புரச இலை முதலானவைகளை விட்டு விடுவதாகச் சங்கல்பங்கள் நிறைவேறின. ஓரிருவரே உண்மையாக, மனச்சான்றுடன் செயல்பட்டார்கள். ஸ்ரீகிருஷ்ணர், அக்ஷய வடத்தின் கீழ் அமர்ந்திருந்தவாறு அனைத்தையும் பார்த்து புன்னகைத்த வண்ணம் இருந்தார்.

பண்டா, ஒவ்வொரு தம்பதியையும் கேட்டு, அவர்கள் சொன்ன காய், கனி, இலை முதலியவற்றை விடுவதாகச் சங்கல்பம் செய்யச் சொன்ன பின்னர், அவருக்குத் தக்ஷிணை தர வேண்டும். குறைந்தது 50, 100 என்று தருகிறார்கள். அதன் பின், அவரை. 'திருப்தியா, நாங்கள் காசி யாத்திரை செய்த பலன், கயா சிரார்த்தம் செய்த பலன் சித்திக்க வேண்டும் என ஆசி கூறுகிறீர்களா....' எனத் தம்பதிகள் கேட்டு, அவர், 'திருப்தியடைந்தேன்'  என்று பதில் சொன்னார்.  பின், பிண்டம் சமர்ப்பிக்க வேண்டியவர்களைத் தவிர, மற்றவர்களை, அக்ஷய வடத்தைப் பிரதக்ஷிணம் செய்து வெளியேறச் சொன்னார்கள். பிண்டம் சமர்ப்பிக்கும் போது அதைப் பார்க்கலாகாது என்று ஐதீகம். ஆகவே, நானும் என் கணவரும், அக்ஷய வடத்தைப் பிரதக்ஷிணம் செய்து, அக்ஷய வடத்தையும் ஸ்ரீகிருஷ்ணரையும் வணங்கிக் கீழிறங்கினோம். மற்றவர்கள், அக்ஷய வடத்தின் பாதங்களில் பிண்டங்களை சமர்ப்பித்து, தர்ப்பணம் செய்து விட்டு வந்தார்கள்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். சிலர் நினைப்பது போல், காசி யாத்திரை சென்று விட்டு வந்து விட்டால், பிறகு, இல்லத்தில் திதி, அமாவாசை தர்ப்பணம் முதலியவை செய்ய வேண்டாம் என்பது கிடையவே கிடையாது. காசி, கயா சிரார்த்தம் செய்து விட்டாலும் கூட இல்லத்தில் திதி முதலியவை செய்வதை நிறுத்தவே கூடாது என்று அங்கு இருந்த பண்டாக்கள் கூறினர்.

கீழே வரும் போது, மறுபடியும் பெருங்கூட்டமாகக் குழந்தைகள் துரத்துகிறார்கள். பணத்தை ஒருவரிடம் கொடுத்து, 'எல்லோரும் பிரித்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

தங்கும் இடம் வந்து சாப்பிட அமரும் போது மணி, மாலை ஐந்தாகி விட்டது.
அதன் பின் காசிக்குக் கிளம்பினோம். வழியில் புத்த கயா பார்த்து விட்டு, இரவு காசியை அடைந்து, காலை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கங்கா பூஜை முடித்து, உணவுக்குப் பின் ஷாப்பிங் அப்புறம் விமானப் பயணம் என்று பெரிய ப்ரொக்ராம் லிஸ்ட் காத்திருந்தது. பரபரப்புடன் கிளம்பிய எங்களுடன் மழையும் சேர்ந்து கொண்டது. (அடுத்த பதிவில் நிறையும்..).

சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!!.


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

5 கருத்துகள்:

 1. அன்புநிறை சகோதரி...
  இனிய வணக்கம்
  உங்கள் எழுத்துக்களை வல்லமையில் வாசித்து அறிந்தேன்...
  வீரியமிக்க சிறந்த படைப்புகள் உங்களுடையது...
  இங்கே உங்கள் தளத்தில்
  உங்கள் படைப்புகளை முதன்முறையாகப் படிக்கின்றேன்...
  ==
  எங்களையும் விரல்பிடித்து காசிக்கு அழைத்துப்போவது போல
  இருக்கிறது பதிவு...
  முந்தைய பதிவுகளை படிக்கவில்லை இன்னும்...
  நேரம் வாய்க்கையில் படித்துவிடுகிறேன் சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரரின் வருகை மிகுந்த உவகை அளிக்கிறது. தங்கள் மனம் நிறைந்த பாராட்டு,என்னை மேன்மேலும் எழுதத் தூண்டும் தூண்டுகோல் எனில் மிகையில்லை. என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

   தங்கள் வலைப்பூவையும் கண்டு கொண்டேன். மிக அற்புதமான எழுத்தோவியம். பின் தொடர்ந்து வருகிறேன் அங்கு.

   நீக்கு
 2. யுகம் யுகமாக, பல்வேறு நிகழ்வுகளுக்கு சாக்ஷியாக இருக்கும் மகிமை பொருந்திய அக்ஷய வடம் பற்றிய சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் அம்மா. தங்கள் எழுத்துக்கள் என்னை மேன்மேலும் எழுத ஊக்குவிக்கின்றன. நன்றி.

   நீக்கு
 3. அக்ஷய வடம் பற்றி அனைத்தும் அறிய முடிந்தது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்.

  பதிலளிநீக்கு