அக்ஷய வடம் பதிவின் தொடர்ச்சி...
எங்கள் புத்த கயா பயணம் துவங்கும் போதே மழை பிடித்துக் கொண்டது.
ஆயினும், புத்த கயாவைப் பார்க்க வேண்டும் என்ற உறுதியால் சென்றோம். வழியும் அவ்வளவு சரியாக இல்லை.
புத்தகயாவைப் பற்றி ஒரு சுருக்கமான முன்னுரை...
பௌத்தர்களின் புண்ணியத் திருத்தலங்களில் ஒன்றான புத்த கயா பீஹாரில் அமைந்துள்ளது. புத்தர் ஞானம் பெற்ற தலமாதலால் இது பௌத்தர்கள் போற்றி வழிபடும் புண்ணிய பூமியாகத் திகழ்கிறது.
மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படும் புத்தரின் மிகப்பிரம்மாண்ட ஆலயம் புத்தகயாவில் அமைந்துள்ளது. புத்தர் ஞானோதயம் பெற்றதாகக் கூறப்படும் போதி மரம் இந்த ஆலயத்தில்தான் இருக்கிறது.
நாங்கள் இறங்கி, மழையினூடே நடந்து சென்றோம். செருப்புகள், கைப்பைகள் முதலியவற்றை அதற்கான காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு, காமிராவுக்கான சீட்டை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றோம். வழியெங்கும் அழகழகான தூண்கள். கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். பிறகு வலப்புறமாகப் பெரிய படிகள் இறங்குகின்றன. படிகளின் மேலிருந்து பார்த்தால், அழகு கொஞ்சும் ஆலயம் தெரிகிறது. ஆலயத்திற்கு முன்னால், சிறிய, பெரிய அளவுகளில் கல்லால் ஆன வேலைப்பாடமைந்த மணிகள். சிறிய ஆலயங்களின் அழகழகான சிற்பங்கள் எல்லாம் இருக்கின்றன. அவற்றைத் தாண்டி, ஆலயத்திற்குச் சென்றோம்.
வழியெங்கும் பேச்சுக் குரல்கள் இருந்தாலும், ஆலயத்தினுள் அவ்வளவு அமைதி. தங்கத்தாலான அழகிய, பெரிய புத்தர் விக்கிரகம் நடுநாயகமாக ஒளி வீச, தூபங்கள் மணத்தன.
புத்தரின் சன்னிதி முன்னால், பாலி மொழியிலான வழிபாட்டுப் பாடல்களை, பௌத்த குருமார்கள் இசைத்த வண்ணம் இருக்கிறார்கள். மனதிற்கு மிகவும் இதமளிக்கும் சூழல்.
முழந்தாளிட்டு புத்தபகவானை வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்தோம். வெளியே வர மனமில்லாமல் வெளியே வந்தோம்.
சுற்றிலும் மழை கொட்டிக் கொண்டு இருந்தது. இருப்பினும் சுற்றி வந்தோம்.
சிற்பப் புதையல் என்றே இந்த ஆலயத்தைக் கூறலாம். அவ்வளவு அழகு. இருட்டு வேளையில் நாங்கள் சென்ற போதே, அந்த ஆலய அழகிலிருந்து, எங்கள் கண்களை எடுக்க முடியவில்லை. வெளிச்சத்தில் இன்னும் அழகாக இருக்கும் என்று தோன்றியது. பௌத்த மதத்தின் முக்கிய வழிபடு தேவியரான தாராதேவியரின் சிற்ப அற்புதங்கள் சுற்றுச் சுவர் முழுவதிலும் இருக்கின்றன. நீலதாரா, மஞ்சள் தாரா ஆகிய தேவியரின் சிற்பங்கள் இருளிலும் அவ்வளவு அழகாகத் தெரிந்தன .
புத்த பகவானின் சன்னிதிக்கு நேர் பின்புறத்தில், புகழ் பெற்ற 'போதி மரம்' இருக்கிறது. அதனருகில், புத்த பகவானின் திருவடிகளின் சுவடுகள் கல்லில் பதிந்திருக்கின்றன. கண்ணாடிப் பேழைக்குள் அவற்றைப் பாதுகாத்து வழிபடுகிறார்கள். அந்த மழை நேரத்திலும், பௌத்த குருமார்கள் போதி மரத்தின் அருகில் அமர்ந்து, மைக் வைத்து, வழிபாட்டுப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருந்தனர். அருகில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்து வழிபடும் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி விட்டுப் புறப்பட்டோம். நேராக காசி நோக்கிப் பயணம் தொடர்ந்தது.
காசியை நாங்கள் அடையும் போது இரவு மணி இரண்டு. மறு நாள் காலை எட்டு மணிக்குத் தயாராக வேண்டும் என்று எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி வெகு சீக்கிரமே எழுந்து, மீண்டும் கங்கையில் ஸ்நானம் செய்து தயாரானோம். நாங்கள் கொண்டு வந்திருந்த, சுமங்கலிகளுக்கான தாம்பூலக் கவர்களை, கங்கைக் கரையில் கோயில் கொண்டருளும் கேதாரீசுவரரைத் தரிசனம் செய்ய வந்திருந்த பெண்களுக்குத் தந்தோம். அதன் பின், நாங்களும், கேதாரீசுவரரை, கங்கை நீரால் அபிஷேகம் செய்து தரிசித்தோம்.
மீண்டும் காசிவிஸ்வநாதரைத் தரிசிக்கும் ஆவல் உந்தித் தள்ளியது. ஒரு ஆட்டோவில் விரைவாகக் கோவிலை அடைந்தோம். அவ்வளவாகக் கூட்டம் இல்லை. காசி விஸ்வநாதரை மீண்டும் தரிசித்துப் பரவசமடைந்தோம். அபிஷேகம் செய்து வணங்கினோம். அங்கிருந்த மற்ற சன்னதிகளையும் நன்றாகத் தரிசித்து வெளி வந்தோம். கோவில் வாசல் அருகிலிருந்த சனீஸ்வர பகவானையும் விளக்குகள் ஏற்றி வழிபட்டோம்.
காசி சங்கர மட ஆலயம் |
எங்கள் யாத்திரையைச் சிறப்பித்துத் தந்த திரு.மஹாதேவ சாஸ்திரிகள் தம்பதியினருக்கு மனமார நன்றி கூறினோம். அன்று அவரது இல்லத்திலேயே எங்களுக்கு உணவளித்து உபசாரம் செய்தனர். அவரிடமிருந்து பிரியா விடை பெற்றுக் கொண்டு, பாதியில் விட்டிருந்த 'ஷாப்பிங்' முடிக்க கடைகளுக்குச் சென்றோம்.
எங்களில் பலருக்கு ஜுரம் வேறு. அருகிலிருந்த மருத்துவரிடம் சென்று காண்பித்து, மருந்துகள் எடுத்துக் கொண்டனர். பிற்பகல் விமானத்தில் சென்னை திரும்ப ஏற்பாடாகியிருந்ததால் பரபரப்புடன் கிளம்பினோம்.
விமானம் மூலம் காசியிலிருந்து புது டில்லி வந்து,பின் புது டில்லியிலிருந்து சென்னை விமானம் பிடித்து சென்னை வந்தடைந்தோம். நள்ளிரவு தாண்டி விட்டது சென்னை வரும்போது.
இறையருளால் நல்ல விதமாக காசி யாத்திரை நிறைவடைந்தது. அதன் பின் மீண்டும் இராமேஸ்வரம் செல்ல வேண்டும். அதன் பின் இல்லத்தில் சமாராதனைகள் முதலியவை செய்து, மீண்டும் கங்காபூஜை செய்த பின்பே, காசிச் செம்பு முதலியவைகளை உறவினர்களுக்குத் தரவேண்டும். ஆகவே ஒரு வாரத்திற்குள் இராமேஸ்வர யாத்திரையும் செய்தோம்.
இராமேஸ்வரத்தில் ஸ்ரீபர்வதவர்த்தினி உடனுறை இராமநாதஸ்வாமிக்கு அபிஷேகிக்கவென்றே, பிரயாகையில், ஒரு நல்ல பெரிய செம்பைத் தேர்ந்தெடுத்து, அதில் கங்கா தீர்த்தம் சேகரித்து, சீல் செய்திருந்தோம். அதனோடு, அம்பிகைக்கும் ஸ்வாமிக்கும் வஸ்திரங்கள் வாங்கி ,அனைத்தையும் எடுத்துக் கொண்டு, இராமேஸ்வரம் கிளம்பினோம்.
இராமேஸ்வரம் அடைந்து, தீர்த்தங்களில் நீராடி, உடை மாற்றி,அதன் பின் ஸ்வாமி தரிசனம் செய்தோம்(ஈர வஸ்திரத்துடன் தரிசனம் செய்யக் கூடாது).கோவில் உள்ளேயே மாலைகள், அர்ச்சனைத் தட்டுகள் ஆகியவை கிடைக்கும். அவற்றை வாங்கிக் கொண்டோம்.
சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டால் நன்றாக அபிஷேகம் பார்க்கலாம். நம்மை சன்னிதி முன்பாக அமர வைத்து, முதலில் பால் முதலானவற்றை அபிஷேகம் செய்து, நாம் கொண்டு வந்திருந்த கங்கைச் செம்பின் சீலை உடைத்து, நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து, ஸ்வாமிக்கு அழகாக அபிஷேகம் செய்தார்கள். அபிஷேகம் பார்க்கும் போது,கண்களும் மனதும் ஒரு சேர நிறைந்தது.
அதன் பின் தீபாராதனை முடிந்து பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு, பிரகாரம் சுற்றி வந்தோம். அம்பிகையின் சன்னிதியிலும் நல்ல தரிசனம் கிடைத்தது. கோவிலைச் சுற்றி வந்து மற்ற அனைத்து சன்னிதிகளிலும் வழிபட்டோம். கோவிலை விட்டு வெளிவரும் வழியில் அமைந்திருக்கும் அழகான செந்தூர ஆஞ்சநேயரிடம் யாத்திரையை நல்ல விதமாக நிறைவு செய்து தந்ததற்காக, மனமார நன்றி கூறி பிரார்த்தித்தோம்.
இல்லத்தில் மறு நாளே சமாராதனை பூஜை ஏற்பாடாகியிருந்தது. ஏழுமலையானின் திருவுருவப்படத்தை வைத்து, அருகிலேயே, கங்கைச் செம்புகள், அன்னபூரணி விக்கிரகங்கள், காசிக் கயிறு, விஷ்ணு பாதம்(இது கயாவில் கிடைக்கும்) முதலியவை வைத்து அலங்கரித்திருந்தோம்.
இறையருளால், மிக நல்ல முறையில் பூஜைகள் நடந்தேறி, உறவினர்கள், நண்பர்கள் யாவரும் விருந்துண்ட பின் அவர்களுக்குத் தாம்பூலத்துடன், கங்கைச் செம்புகள், அன்னபூரணி விக்கிரகங்கள் முதலியவை வழங்கி நமஸ்கரித்தோம்.
ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதர் நினைத்தாலும், அழைத்தாலுமே காசி யாத்திரை சித்திக்கும். இது பூர்வ புண்ணிய வசத்தாலேயே ஒருவருக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எம்மையும் ஒரு பொருட்டாக எண்ணி, எங்களுக்கு இந்த மறக்க முடியாத நல்வாய்ப்பினை நல்கிய இறையருட்பெருங்கருணைக்கு என்றென்றும் நன்றி செலுத்தி வருகிறோம்.
இந்த யாத்திரைத் தொடரைப் படிக்கும் அன்பர்கள் அனைவருக்கும், இறையருளால், வெகு விரைவிலேயே காசியாத்திரை செய்யும் பொன்வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென, ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதரையும், ஸ்ரீபர்வதவர்த்தினி சமேத ஸ்ரீஇராமநாதஸ்வாமியையும் மனமார வேண்டுகிறேன்.
இந்தத் தொடரை எழுத என்னை ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
இறையருளால்,
வெற்றி பெறுவோம்!!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
சிற்பப் புதையல் என்ச்சிற்ப்பான ஆலயம் பற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் என் கனிவான நன்றிகள் அம்மா.
பதிலளிநீக்குwonderful articles written
பதிலளிநீக்குThank you so much. May I know your good name please.
நீக்குwonderful spiritual journey tips you have shared..
பதிலளிநீக்குthank you,,"God Bless You!"
gulf.yogi@gmail.com
Thank you so much Sir.
நீக்குஅருமையான தகவல்கள். புதையல் போலக் கொடுத்துள்ளீர்கள். நிறைவாக உள்ளது. நன்றிகள். சந்தோஷம்.
பதிலளிநீக்குதக்க சமயத்தில் தேவையான பதிவு நன்றி சொல்ல வார்த்தைகள் மட்டும் போதாது .தாங்கள்விரும்பும் அனைத்தையும் விரும்பும் வண்ணம் அளிக்க அந்த காசி விஸ்வநாதன் அருளவேண்டும்
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குகாசி யாத்திரை செல்ல முடிவெடுத்த சமயத்தில் தங்கள் கட்டுரை என் கண்ணில் பட்டது நான் செய்த பாக்யமே...
மிகவும் உபயோகமான தகவல்கள்...