வெள்ளி, 4 அக்டோபர், 2013

GOLU TIPS...கொலு வைக்க உதவியாக சின்ன சின்ன ஆலோசனைகள்...


அம்பிகையின் அருள் வேண்டி, நாடெல்லாம் கொண்டாடும் நவராத்திரி பண்டிகை வந்து விட்டது. உங்க வீட்டுல கொலு வைக்கிற வழக்கமிருக்கா...!!

இதோ கொஞ்சம் டிப்ஸ்..

1.முதல்ல இடம்.. எந்த இடத்தில் கொலு என்பதை அவரவர் வசதிக்கேற்ப தீர்மானம் செய்துக்கணும். இதில் மனம் சங்கடப்படக் கூடாதென்பது முக்கியம்.  முதலில் பண்டிகை கொண்டாடும் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வது முக்கியம். ஆடம்பரம் செய்தலோ, நம் வசதியைப் பிறர் அறியச் செய்தலோ நோக்கமாக கட்டாயம் இருக்கக் கூடாது. இருக்கும் இடத்தில் இயன்றதைச் செய்தாலே நிச்சயம் அம்பிகை அருள்வாள்.

2.ஃபோல்டிங் டைப் படிகள் இருந்தால் வைப்பதும் எடுப்பதும் பாதுகாப்பதும் எளிது. ஊர் விட்டு ஊர் மாறும் வேலைகளில் இருப்பவர்களுக்கு ரொம்ப சௌகரியம்.

3.பார்க் செய்ய வேண்டுமெனில் இரு நாட்கள்  முன்னதாகவே சட்டிகளில் மண் எடுத்து, கம்பு, வெந்தயம், தனியா விதைகள் தூவி வைக்கலாம். மறந்து போச்சா.. நோ ப்ராப்ளம், மரத்தூள் எடுத்துக்கங்க..பச்சை இங்க் ஊத்தி கொஞ்சம் காய வைச்சா, புல்வெளி, மலை, காடு எல்லாம் டக் டக்னு வைக்கலாம்.

அதுவும் புடிக்கலன்னா இருக்கவே இருக்கு பிளாஸ்டிக் செடிகள். அதிக அளவு தொட்டிச் செடிகள் (பார்க் செய்ய/ கிராமம் செய்ய) வேண்டுமென்றால், சின்ன சைஸ் பிளாஸ்டிக் கப்புகள் எடுத்து ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கரைத்து ஊற்றி, அது காய்வதற்குள் நடுவில் சின்ன பிளாஸ்டிக் செடிகளை நட்டு விடலாம். உலோகக் கப்புகளையும் உபயோக்கிக்கலாம். (பக்கத்துல இருக்கற படத்துல, பார்க்கின் தரைப்பகுதியெல்லாம் ஒரிஜினல் அல்லது செயற்கைப் புல்வெளியல்ல.. அப்புறம்?!!. தெர்மகோல் அட்டை ஒண்ணு எடுத்து, நியூஸ் பேப்பரில் வந்த இயற்கைக் காட்சியெல்லாம் வெட்டி.. ஒட்டி.. ஹி..ஹி.. இப்புடியும் சிந்திக்கலாம்!!)

4.கோட்டை மதில் செய்ய பேப்பர் கப் உதவும். கப்பில், வண்ணமடித்தோ, அல்லது டிசைன் வரைந்தோ செய்து விடவும். அப்புறம் வாய்ப்பகுதியில்  க்ளூ தடவி, வரிசையாக நிறுத்தினால் சூப்பர் மதில்!!. தீக்குச்சியில் பேப்பரால் கொடி செய்து ஒட்டி, கொடி கம்பம் வேண்டுமானாலும் செய்து நிறுத்தலாம்.

5. கறுப்பு வண்ணம்(அ) கரிப்பொடி தார்ச்சாலைகள் செய்ய உதவும். ஆனால் சிலருக்கு கறுப்பு வண்ணம் கொலுவில் வைக்க சங்கடப்படும். அவர்கள் கருநீலம் உபயோகிக்கலாம். பழைய டூத் பிரஷ் முனைகளில் மஞ்சள் வண்ண க்ளாஸ் பேப்பர் ஒட்டி தெருவிளக்காக்கலாம்.

6.நம்ம வீட்டுப் பொம்மை டல்லடிக்குது.. பளிச்சுனு இல்லையேன்னு தோணுதா..விதவிதமாக விற்கும் அம்மன் பாவாடைகள், டிரஸ்களை வாங்கி, பொம்மைகளுக்குக் கட்டலாம். கல் வைத்த ஸ்டிக்கர் பொட்டு, அல்லது கல் பொட்டு வாங்கி பொம்மைகளின் மேல் ஒட்டி, பொம்மைகளை டிசைனர் டிரஸ் போடவைக்கலாம். பழைய சி.டியில் குச்சி அல்லது ப்ளாஸ்டிக் ஸ்டிக் ஒட்டி, பெரிய பொம்மைகளுக்குப் பின்னால் ஒளிவட்டம் சுற்றுவது போல் வைக்கலாம்.

7.படிகளின் மேல் விரிக்கும் துணிகளைக் கட்டாயம் பின் செய்யவும். குழந்தைகள் துணியைப் பிடித்து இழுத்தாலும் பயப்பட வேண்டாம்.

8.குட்டி கொட்டாங்குச்சியில் தேங்காய் நாரை ஃபில் செய்தால் பறவைக் கூடு ரெடி. ஒரு சுள்ளிக் குச்சியை நட்டு,  அதன் மேல் விழாதவாறு கூட்டை வைத்து, பறவை பொம்மை வைக்கலாம். சின்ன கிண்ணத்தில் நீர் நிரப்பி, கொஞ்சம் போல ப்ளூ இங்க் கலந்தால் குளம் ரெடி.. பார்க்கின் நடுவில் வைத்து, சுற்றிப் புல் தரை வைத்து, கிண்ணத்தைச் சுற்றிலும் சின்ன சின்ன மிருக பொம்மைகளை வைத்து நீர் குடிக்க வைக்கலாம்.

சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் விளையாட்டுக்காக கலர் க்ளே (சைனா களிமண்) வாங்கியிருப்பீங்க.. அதை அழகாக உங்கள் கைவண்ணத்தில் முறுக்காகவோ, ஜிலேபியாகவோ செய்து கல்யாண செட் முன்னால் வைத்து அசத்தலாம். குட்டி குட்டி பால்ஸ் ஆக உருட்டி, சின்ன பிளாஸ்டிக் பந்தில் ஒட்டி லட்டுவாக்கலாம். இம்மாதிரி செய்த பலகாரங்களை தட்டில் வைத்து, முன்னால் ஒரு ஆண் பொம்மை வைத்தால் 'ஸ்வீட் ஸ்டால்' ரெடி. முன்னால் பிளாஸ்டிக் சேர், டேபிள், சின்ன பொம்மை ரெண்டு வைத்தால் 'ரெஸ்டாரெண்ட்' ஆகி விடும்.

9.ஹோம குண்டம் இருந்தால் தெப்பக்குளம் வைக்கலாம். இல்லையெனிலும் பெரிய சைஸ் தாம்பாளம் விளிம்புடனிருந்தால் ஓகே. ஆனால் பொம்மைகள் தேர்ந்தெடுப்பதில் ரொம்ப கவனமாக இருங்க.. குளத்தோரம் நிற்கும் மனிதர்களை விடவும் பெரிய சைஸ் வாத்து பொம்மை பாக்குறவங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்..

10.தவழுகிற குழந்தைகள் வந்தால் இரட்டிப்பு கவனம் தேவை. எனக்குத் தெரிந்தவர் வீட்டில் தவழும் குழந்தை ஒன்று, பெரியவர்கள் பேச்சில் கவனமாக இருந்த போது, கொலுவின் பார்க்கிலிருக்கும் சின்ன சைஸ் பொம்மையொன்றை வாயில் போட்டுக் கொண்டு விட்டது!!. உடனே பார்த்ததால் எடுக்க முடிந்தது.. ஆகவே உஷார்!!

11.தீமாட்டிக் கொலு வைப்பது நல்லதே. ஆனால் ஒரு  வருடம் வைத்த அதே 'தீம்' அடுத்த வருடம் வைக்க முடியாதே. அதனால் கவனமுடன் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கவும். இருப்பதை வைத்து செய்வதென்றால் ரொம்ப நல்லது. உதாரணமாக, நம்பர்கள் என்று தீம் வைத்தால், ஆதி பராசக்தி(ஒரே பரம்பொருள்), சிவ சக்தி (இரண்டு), மும்மூர்த்திகள், சனகாதி முனிவர்கள்(நான்கு), பஞ்ச பூதங்கள், ஆறு முகன் அல்லது ஆறு படை வீடுகள் என ஆரம்பித்து வைக்கலாம். பூஜை என்று தீம் இருந்தால், விதவிதமான பூஜைகளை, துளசி பூஜை, விளக்கு பூஜை, அரசமரத்தைப் பூஜித்தல் என்று வைக்கலாம். ஒரு சின்ன சைஸ் துளசி மாடத்தைச் சுற்றிலும் நான்கு பெண் பொம்மைகள், ஒரு வெற்றிலை பாக்குத் தட்டு பொம்மை என்று வைத்தால் துளசி பூஜை வந்து விடும். ஒரு சின்ன அகல் விளக்கும் பக்கத்தில் ஏற்றி விடலாம். நம்மால் இயன்றதை நாமே செய்து வைத்தால் நமக்கும் திருப்தி. வருபவர்கள் பாராட்டும் பொழுது சந்தோஷமாக இருக்கும்.

12. முதல் நாள் சுண்டல் மீந்து விட்டால், ஆல் பர்ப்பஸ் மாவு, கடலை மாவு, வெங்காயம், கரம் மசாலா, உப்பு,  இத்யாதிகள் கலந்து 'சுண்டல் பக்கோடா' வாக மாற்றி சுற்றுக்கு விடுவதை முடிந்த அளவு தவிர்த்து அளவோடு சுண்டல் செய்து வளமோடு வாழ்த்துக்களைப் பெறவும். பயறு/பருப்பு வகைகளை கூடுதல் அளவில் வேக வைத்து விட்டால், தேவையான அளவு எடுத்து சுண்டல் செய்து விட்டு, மீதியை ஃப்ரீசரில் வைத்து விட்டால் கூட்டு செய்ய எடுத்துக் கொள்ளலாம்.

13. அன்றன்றைய சுண்டலை அன்றன்றே நிவேதனம் செய்யவும். வேலைக்குப் போகும் பெண்கள். பயறு/பருப்பு வகைகளை வேக வைத்து, ஜிப் லாக் கவரில் வைத்து ஃப்ரீசரில் வைக்கலாம். தினம் ஒன்றை எடுத்து தாளித்து சுண்டல் செய்யலாம். சுண்டலாகவே செய்து ஃப்ரிஜ்ஜில் வைப்பது சரியல்ல. சாமிக்கு வேண்டாமே ப்ராட் ஃபார்வேர்ட்..

14.சுண்டல் தீந்தா ஸ்டாப் கேப் அரேன்ஞ்மென்ட்டா பொட்டுக்கடலை மாவு உருண்டை, அல்லது கடலை உருண்டை தருவீங்க.. ஆனால் இப்ப இத எல்லாரும் செய்யறதால, நீங்க கொடுத்தா டக்குனு கண்டுபுடிச்சுருவாங்க.. சீக்க்ரம் செய்யற ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க..இது என் தோழி ஒருத்தி சொன்ன ரெசிபி.

பால் பௌடர் ஒரு கப் எடுத்துக்கங்க. அப்புறம் சர்க்கரை அரை கப், வெண்ணை கால் கப், கோகோ பவுடர் இல்லாட்டி பூஸ்ட், போர்ன்விடா இப்படி ஏதாவது அரை ஸ்பூன்.

சர்க்கரையை கம்பிப் பாகு வச்சிக்கங்க.. அதுலயே வெண்ணையைப் போட்டு உருக்குங்க சொல்றேன். அப்புறம் பால் பௌடரப் போட்டு கட்டியில்லாமக் கிளறணும். கோகோ பவுடர் சேர்த்து சுருண்டு வரும் போது இறக்கித் துண்டுகள் போடுங்க.. நான் இதை இருபத்தஞ்சு நிமிஷத்துல செஞ்சேன்.  குழந்தைகளுக்கு ரொம்பப் புடிக்கும் இது.. ஒரு வாரம் வச்சிருக்கலாம் இதை. 

15. சில குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்ததும் விளையாடக் கேட்டு அடம் பிடிக்கும். அம்மாதிரி குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கவென தனியாக பொம்மைகள்  வச்சிருங்க.  

16. கொலு முடிந்ததும்  விஜய தசமியன்று  சாஸ்திரத்திற்கு இரண்டு பொம்மைகளை எடுத்து படுக்க வைத்து விட்டு, வார இறுதியில் கூட பேக் செய்யலாம். பீங்கான் பொம்மைகள், மண் பொம்மைகள் என்று பிரித்துக் கொண்டு, பேப்பர் அல்லது துணி சுற்றிப் பேக் செய்யலாம். பொம்மைகளின் மூக்கில் பஞ்சு வைத்துப் பேக் செய்தால், பொம்மைகள் 'சூர்ப்பனகை' ஆகாமலிருக்கும். ஆசைக்காகப் போட்டிருக்கும் இமிடேஷன் நகைகளை தனிப்பெட்டி/பையில் பேக் செய்யவும்.

17.அடிக்கடி மாறுதலுக்குள்ளாகும் வேலையில் இருப்பவர்கள், பொம்மைப் பெட்டியின் அடியில்  கனமான அட்டை அல்லது பலகை வைத்து, பொம்மைகள் வைக்க வேண்டும். பொம்மைகளை அடுக்கிய பிறகு மேலே பபிள் ஷீட் வைத்து மூடவும். கட்டாயம் நாப்தலீன் உருண்டைகள் போடவும்.

18.எல்லாத்தை விடவும் முக்கியம் சந்தோஷமாக பண்டிகை கொண்டாடுவது. வேண்டாத உணர்வுகளை ஒதுக்கி, சந்தோஷமும் திருப்தியுமாக பண்டிகை தினங்களைக் கொண்டாடுவது, பின்னால் ஓரிரு மாதங்களுக்காவது நம்மை ஆற்றலுடனும் நிம்மதியுடனும் வைத்திருக்கும்.

நவராத்திரி நல்ல முறையில் கொண்டாட நல்வாழ்த்துக்கள்..

(இது 'தொகுப்பு' வலைப்பூவின் நூறாவது பதிவு.. இந்த நீண்ட பயணத்தில் என்னுடன் வந்த வாசகர்களாகிய உங்களுக்கு  முதல் நன்றி. தன் கவிதைகளால், இந்த வலைப்பூவை செழுமைப்படுத்தி வரும் சகோதரர் தனுசு அவர்களுக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் கருத்துரை தந்து வரும் பெரியோர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் அனைவரின் நல்லாதரவையும் எந்நாளும் எதிர்பார்க்கிறேன்.)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள்: நம்ம வீட்டு கொலுதான். போன வருஷ,முந்தின வருஷ கொலுப் படங்கள்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!! 

16 கருத்துகள்:

  1. நல்ல யோசனைகள் அம்மா... நன்றி...

    நூறாவது பதிவிக்கும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி டிடி சார். 'ஆலோசனை' க்கும் வரணும்னு கேட்டுக்கறேன்.

      நீக்கு
  2. அழகாக கொலு வைக்க அருமையான ஆலோசனைகள் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா!

      நீக்கு
  3. தங்களின் வெற்றிகரமான 100வது பதிவு மிகவும் மகிழ்வளிக்கிறது.

    மேலும் மேலும் இந்த எண்ணிக்கைகள் உயர என் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. Superb tips! Best wishes to continue your service by giving us multiples of 100's of posts!!

    பதிலளிநீக்கு
  5. நூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..1

    பதிலளிநீக்கு
  6. எல்லாத்தை விடவும் முக்கியம் சந்தோஷமாக பண்டிகை கொண்டாடுவது. வேண்டாத உணர்வுகளை ஒதுக்கி, சந்தோஷமும் திருப்தியுமாக பண்டிகை தினங்களைக் கொண்டாடுவது, பின்னால் ஓரிரு மாதங்களுக்காவது நம்மை ஆற்றலுடனும் நிம்மதியுடனும் வைத்திருக்கும்.

    ஆதாரமான அடிப்படையான கருத்துகளை அருமையாக எடுத்துரைத்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  7. 100வது பதிப்பா இது (ஆச்சரியமூட்டும் அருமை)
    100க்கு 100 பெறும் படைப்பு இது

    வாழ்த்துக்கள்
    வளமுடன் வாழ்க

    பதிலளிநீக்கு
  8. தொகுப்பு வலைப்பூவின் நூறாவது பதிவு தந்த சகோதரி பார்வதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    ஆன்மீகம், ஆலோசனை, நீதிக்கதைகள், என பல தளங்களிலும் பிரகாசிக்கும் இந்த தளம், சகோதரி பார்வதி அவர்களால் படிப்பவருக்கு அலுப்போ சலிப்போ ஏற்படாமல்
    அவர் கொண்டு செல்லும் விதமே தனி அழகு.

    அவரும் மிகச்சிறந்த எழுத்தாளர். அதற்கு அவரின் பதிவுகளில் அவர் கையாளும் அந்த எழுத்து நடையே சாட்சி. படைப்பது பெரிய காரியமல்ல அதை படிக்க வைக்க வேண்டும்,படைப்பின் கருவில் நீதியோ,போதனையோ, வழிபாடோ எதுவாக இருப்பினும் எதிர் மறை வார்த்தைகள் இல்லாமல் அதை அவர் பதிவைக்கும் விதம் அவரது தனித்திறமை. அப்படிப்பட்ட பதிவுகளை தாங்கி வரும் தொகுப்பு மேன்மேலும் பல நூறு பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன் கவிதைகளால் 'தொகுப்பு' வலைப்பூவை தொடர்ந்து சிறப்பித்து வரும் சகோதரர் தனுசுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி!. தங்கள் பெருந்தன்மைக்குச் சான்றே 'மிகச் சிறந்த எழுத்தாளர்' என்ற தங்களது பாராட்டு. உண்மையில் அதனை அடைய நான் இன்னும் நீண்ட நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தொடர்ந்த தங்கள் நல்லாதரவை என்றென்றும் வேண்டுகிறேன். மிக்க நன்றி!

      நீக்கு