வெள்ளி, 11 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL..நவராத்திரி கவிதைகள்..பகுதி 1.

'மின் தமிழ்' கூகுள் குழுமத்தில், நவராத்திரியை ஒட்டி தொடங்கப்பட்ட 'சக்தி ரதம்' இழையில் நான் எழுதிய சில கவிதைகள் உங்கள் மேலான பார்வைக்காக..


(நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடை நாயகி அம்மனைக் குறித்த கவிதை..கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்கி, எல்லா நலமும் அருள்வாள் அன்னை. கவிச்சக்கரவர்த்தி கம்பரது சமாதி இருக்கும் ஊர் இது).

இந்தப் பாடலை மிக அழகாக, ஆனந்த பைரவியில் பாடி வலையேற்றிய திரு.சுப்பு தாத்தாவுக்கு என் கோடானு கோடி நன்றிகள்!! கீழ்க்கண்ட லிங்கில் கேட்டு ரசியுங்க...


கண்ணுக்கு ஒளி தரும் கண்ணுடை நாயகி என்

எண்ணத்தில் நிறைந்தருள்வாய் எம் குல தேவிநீ

விண்ணோடு  உலகேழும் படைத்தருளும்  பொன்மகளே

பண்ணறியா சிறுமி நான் பாடவந்தேன் பா அருள்வாய்

சொல்லுக்கு சொல் தருவாய் சொல்லுக்குள் பொருளாவாய்

கல்லுக்கும் கவி அருளும் கலைமகளே நலம் தருவாய்

நாட்டரசன் கோட்டையிலே நடை பழகும் பொன்மயிலே

பாட்டரசன் கம்பன் தினம் பார்த்திருக்கும் பொன்னழகே

அழுகுணிச் சித்தரவர் அமர்ந்திருக்கும் மேடையிலே

அழகுடனே வீற்றிருந்து அருள் சுரக்கும் கலையழகே

கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே

கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி

உண்மை நிறைந்திருக்கும் உள்ளத்தில் வாழ்பவளே

பெண்மைப் பேரொளியே பெருங்கனலே வரமருள்வாய்

நவராத்திரி நாயகியே நானிலமும் போற்றுதடி

நாவார உனைப்பாட நங்கையரே வரமருள்வாய்

மூன்று மகா சக்தியர் நீ முக்கண்ணன் தேவியும் நீ

மும்மலங்கள் நீக்கியருள் முழு நிலவே வரமருள்வாய்

உன் நினைவால் வாழுகின்றேன் உன்னருளால் பாடுகின்றேன்

பொன்மகளே உன் பாதம் போற்றித் தொழ வரமருள்வாய்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    மின் தமிழ் / சக்தி ரதம் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. ஆஹா... இந்த பாடல்
      ஆனந்த பைரவிலே
      அழகாக வரதே ..

      அதுவும் அந்த சரஸ்வதி
      கலை வாணி அருள் தானே..

      பாடட்டுமா

      உங்க இ மெயில் தெரிஞ்சா அனுப்பலாம்.

      சுப்பு தாத்தா.
      www.menakasury.blogspot.com

      நீக்கு