ஞாயிறு, 13 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL, PART 3....நவராத்திரி கவிதைகள்..பகுதி 3, கலைமகளே வரமருள்வாய்!!!வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் மஹாநவமி தின நல்வாழ்த்துக்கள்!!!!

உயர்திரு.சுப்பு தாத்தா, ராகமாலிகையில், மேற்கண்ட பாடலை மிக அழகாகப் பாடி அளித்திருக்கிறார். தன்யாசி, காவடிச் சிந்து, சாரங்கா, மத்யமாவதி ராகங்களில் அருமையாகப் பாடியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி... கீழ்க்கண்ட லிங்கில் கேட்டு மகிழுங்கள்... 

பொங்கும் கவிதை தர உன்னருளே ஊற்றாகும்.
எங்கும் புகழ்  வளர‌ நின்னருளே வேராகும்.
தங்கக் கொலுசொலிக்க நடை பழகும் வெண்மயிலே!!
கங்கை உன் கருணை! கரம்  குவித்தோம் கவியருள்வாய்!.

வெள்ளைக் கலையுடுத்தி வீணையுடன் வீற்றிருப்பாய்!
வெல்லும் திறமளித்து வீழ்ச்சியில்லா வாழ்வளிப்பாய்!
வெம்மை நிறைந்தொளிரும் பொன்சுடரே சாரதையே!
வேண்டும் வரம் பெறவே கரம் குவித்தோம் பதமருள்வாய்!

கம்பர் மனத்திருந்து கவி பலவும் தந்தவளே!
செம்பொற் சிலம்பணிந்து சபையினிலே வருபவளே!
பம் பம் என்றொலிக்கும் துந்துபிகள் முழங்கிடவே!
இன்பம் தரும் கவிகள் பொழிந்திடவே வரமருள்வாய்!

வாணி நாமகளே பாரதியே பாமகளே!
வாக்கின் எழிலரசி  வணங்குகிறோம் கலைமகளே!
வேத நாதன் தொழும் ஞானத் திருமகளே!
வெற்றி  முரசொலிக்க‌ விரைவாய் வந்தருள்வாய்.!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி சார்!!. உங்களுக்கும் என் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 2. இனிய வணக்கம் சகோதரி..
  நாமகளுக்கு வெண்தாமரை மலர் புனைந்து
  தொடுக்கப்பட்ட இன்னிசை பாமாலை..
  சுப்பு ஐயாவின் குரலில்
  பாடலை கேட்க இன்பமயமாக இருக்கிறது..

  வெண்தாமரை மேலமர்
  சாரதா தேவியின் அருளாசி
  நிறைந்திருக்கட்டும்
  இனிய சரஸ்வதி பூஜைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரருக்கு வணக்கம்!!!. தங்களது வார்த்தைகள் எனக்கு மிகவும் சந்தோஷம் தந்தன. மிக்க நன்றி!!!

   நீக்கு
 3. பகிர்வு அருமை. கலைமகள் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். இனிய விஜயதஸமி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் நல்வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!!. தங்களுக்கும் என் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள்..

   நீக்கு
 4. கலைமகள் மிக அழகான கவிகள் அருளியிருக்கிறாள், உங்களுக்கு. சுப்பு தாத்தாவின் பாடலையும் கேட்டு மகிழ்ந்தேன், நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுடைய ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றி கவிநயா!!. கலைமகளின் வற்றாத பெருங்கருணையே இது!!. அதோடு, தங்களைப் போன்றவர்கள், தங்கள் கவிதைகள் மூலம் கற்றுக் கொடுத்ததற்கும் மனமார நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி கவிநயா!!

   நீக்கு